அனுஷா செல்வமணி
கீர்த்திகா ரவீந்திரன்
கல்விப் பாதை கரடுமுரடாக இருந்தாலும் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டுமென்ற ஒரே வேட்கையை மனதில் நிறுத்திக்கொண்டு மனம் தளராமல் வெற்றி நடை போட விழைகின்றனர்.
கடந்த ஆண்டு ‘ஏ’ நிலைத் தேர்வு எழுதிய மாணவர்கள், வெள்ளிக்கிழமை (21 பிப்ரவரி) தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
‘ஏ’ நிலைத் தேர்வு, மாணவர்களின் கல்விப் பாதையில் மிக முக்கியமான ஒரு கட்டம். இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட மாணவர்கள் பல மாதங்கள் கடினப் பயிற்சி மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சமாளித்து தங்களின் முழு முயற்சியையும் செலுத்தியுள்ளனர்.
கல்விச் சாதனையை மட்டுமன்றி மன உறுதியையும் சோதிக்கும் இந்தப் பயணத்தில் அவர்கள் பொறுமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் முன்னேறியுள்ளனர்.
கடின உழைப்பின் பலனை எதிர்பார்த்து எதிர்காலக் கனவுகளையும் இலக்குகளையும் நோக்கிச் செல்ல தயாராக இருக்கும் ஐந்து மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டு வந்தது இவ்வார இளையர் முரசு.
தாய்மொழி மீது அளப்பரிய ஆர்வம்
தமிழ் மொழிமீது அதிக ஆர்வம் கொண்டுள்ள மாணவர் பெரியகருப்பன் சீனிவாசன், 18, பள்ளி நேரடிச் சேர்க்கை மூலம் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டத்தில் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மொழி மீதான ஆர்வத்தை அவருக்குள் தூண்டி எழுப்பிவிட்டவர், அவரின் தமிழ்மொழி ஆசிரியர் திருவாட்டி வாணி. புத்தாக்கக் கற்றல் முறைகள் மூலம் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்குக் கற்றுத்தந்து அவர்களின் ஆர்வத்தை அதிகரித்தார் திருவாட்டி வாணி.
தமிழ்மொழியை ஒரு மொழியாக மட்டும் பார்க்காமல் அதன் மூலம் பல நற்பண்புகளையும் கற்றுக்கொண்டார் சீனிவாசன்.
தொடக்கக் கல்லூரிக் காலத்தில் அனுதினமும் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட சீனிவாசன், தமிழ்மொழி தன் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அடுத்த தலைமுறையினரிடத்தில் வலியுறுத்த விரும்புகிறார்.
இவற்றுக்கு அப்பாற்பட்டு தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் மூலம் சீனிவாசன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பல கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் பிரத்தியேகமான ‘அக்னி’ நிகழ்ச்சியை இயக்குநராக வழிநடத்திய சீனிவாசனுக்கு எண்ணற்ற அனுபவங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்மொழி ஆர்வம் ஒருபுறம் இருக்க, விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார் துடிப்புமிக்க சீனிவாசன். பள்ளி ஹாக்கிக் குழுவின் துணைத் தலைவரான சீனிவாசன் தேசிய பள்ளி விளையாட்டுகளில் தனது குழு உறுப்பினர்களுக்குப் பக்கபலமாக நின்று மூன்றாம் இடத்தைப் பிடிக்கத் துணைபுரிந்தார்.
கல்வியையும் விளையாட்டையும் சமநிலைப்படுத்தி நேரத்தை நன்கு வகுத்துக்கொண்ட சீனிவாசன், தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டின் முன்னோட்டத் தேர்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காட்டினார்.
“எந்தெந்தப் பாடங்களுக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதில் நான் சில சவால்களைச் சந்தித்தேன். சில பாடங்கள் கடினமாக இருந்ததால் ஆசிரியர்களின் உதவியும் நண்பர்களின் ஆதரவும் உறுதுணையாக இருந்தன,” என்று கூறினார் சீனிவாசன்.
தற்போது தேசிய சேவை புரிந்து வரும் சீனிவாசன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறக் கல்வியில் சேர விரும்புகிறார்.
துயரிலிருந்து மீண்டு சாதனை
மறுநாள் ‘ஏ’ நிலைத் தேர்வு. அதற்கு முதல் நாள் இரவு காலங்கி புவனஸ்ரீ சாய் தேஜாவின் பாட்டி காலமானார்.
தேர்வு எழுதவிருக்கும் எந்த மாணவருக்கும் இப்படி ஓர் துயரம் ஏற்படக்கூடாது என்ற போதிலும் 19 வயதாகும் தேஜா தன் ஆசிரியர்கள், பள்ளி மனநல ஆலோசகர் ஆகியோரின் ஆதரவால் மீண்டும் தேர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ஏட்டுக்கல்விப் பிரிவு மாணவராக இருந்த தேஜாவுக்குத் தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்துகொள்ளும் பழக்கம் இருந்தது.
பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை மூலம் ஆங்கில, அறிவியல் பாடங்களைக் கூடுதல் கடினத்தன்மை அளவில் கற்கும் சவாலைக் கையாண்டார் தேஜா.
அப்பாடங்களைப் பயிலத் தொடங்கியவுடன் தேஜாவின் தன்மதிப்பு அதிகரித்தது. அவர் தேர்வில் சிறப்பாகச் செய்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியில் சேர்ந்தார்.
தொடக்கக் கல்லூரிக்குச் சென்றபோதும் கல்வியிலும் சமூக ரீதியாகவும் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய தேஜாவுக்கு, பள்ளி சிறந்த ஆதரவுத்தளமாக அமைந்தது. பள்ளி மாணவர்களும் பள்ளி சார்ந்த சமூகத்தினரும் அவரைக் கல்வியில் சிறக்கச் செய்ததை நினைவுகூர்ந்தார் அவர்.
மேடைப் பேச்சு என்றாலே அஞ்சும் தேஜா தனக்குத்தானே சவால் விட்டு தனது சொற்போர் திறன்களை மெருகூட்டினார்.
சேவை மனப்பான்மை கொண்டுள்ள அவர், தனது பள்ளி மூலம் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் துணைப்பாட ஆசிரியராகத் தொண்டூழியத்தில் ஈடுபட்டார்.
மேலும், யேமன் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிதி திரட்டவும் அவர் தொண்டூழியத்தில் இறங்கினார். பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயில விரும்புகிறார் தேஜா.
“எதிலும் நாம் சிறப்பாக இல்லையென்றாலும் பரவாயில்லை. சமூகம் நம்மை என்ன குறை சொன்னாலும் அவற்றை நாம் பொருட்படுத்தாமல் வெற்றிநடை போட முயல வேண்டும்,” என்று தன்னைப் போன்ற இளையர்களுக்குக் கூற விரும்புகிறார் தேஜா.
விழுந்தாலும் மீண்டும் எழலாம்
பாடங்கள் திணறடிக்கும் அளவில் இருக்க, எம். அகிலன், 19, தொடக்கக் கல்லூரியில் தடுமாறத் தொடங்கினார். இதனால், அவர் தொடக்கக் கல்லூரி முதலாம் ஆண்டை மீண்டும் பயில வேண்டியிருந்தது.
“எனக்கு மிகவும் சோகமாக இருந்தது. என் பெற்றோரிடம் அதைப் பற்றிக் கூறியபோது அவர்கள் என்னைத் திட்டவில்லை. யோசிக்கத்தான் சொன்னார்கள்,” என்றார் அகிலன்.
ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி மாணவரான அகிலன் தொடக்கக் கல்லூரியில் முதலாம் ஆண்டை மீண்டும் பயிலும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கைரோஸ்’ திட்டத்தில் சேர்ந்தார்.
அதில் ஆசிரியர்களின் ஆதரவில் அவர் கல்வியில் சிறந்து விளங்கத் தொடங்கினார். அனைத்துப் பாடங்களிலும் முன்னேற்றம் காணத் தொடங்கிய அவர், H2 வரலாற்றுப் பாடத்தில் அதிக முன்னேற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
கல்வியையும் தாண்டிப் பிறருக்கு உதவுவதில் அகிலனுக்கு அதிக ஆர்வம். ‘புரோஜெக்ட் பௌண்ட்லெஸ்’ எனும் திட்டத்தில் சேர்ந்து அவர் வியட்னாமுக்கு 16 நாள்கள் பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆங்கிலமொழி கற்றுத்தருவது போன்ற சேவைகளில் ஈடுபட்டார் அகிலன்.
“அங்குள்ளவர்களுக்கு ஆங்கிலம் பேச முடியாமல் போனாலும் மொழி ஒரு தடையன்று. என் நண்பர்களுடன் நான் வியட்னாம் சென்று அங்கு தொண்டூழியத்தில் ஈடுபட்டபோது நான் என் சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டேன்,” என்று அகிலன் கூறினார்.
மேலும், தொடக்கக் காலத்திலிருந்தே டேக்வாண்டோ கற்று வரும் அகிலன் பள்ளியின் டேக்வாண்டோ அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பயிற்சி நேரங்களில் தனது குழு உறுப்பினர்களை எந்நேரமும் ஊக்குவித்து வருவார் அகிலன். தனது வழிகாட்டுதலில் கடந்தாண்டு நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுகள் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்தனர் என்றார் அவர்.
எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் அகிலன் அதற்கான காரணத்தையும் தனது சேவை மனப்பான்மையோடு தொடர்புபடுத்திக் கொண்டார்.
“சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்தினால் நான் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறேன். ராணுவத்தில் இருக்கும் இதர பணியாளர்களை வழிநடத்தி அவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்று அகிலன் தெரிவித்தார்.
கலை ஆர்வத்தில் மிளிர்ந்த மாணவி
விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் அறிவியல் பயின்று வந்த மாணவி சினேகா ராதே ஷியாம், 19, ஓராண்டுக்குப் பிறகு தனக்கு விருப்பமான கலைத் துறைக்கு மாறியது ஒரு சிறந்த முடிவாக அமைந்தது என்று பகிர்ந்தார்.
“அறிவியல் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் சிறு வயதிலிருந்து கலையின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது,” என்று தெரிவித்தார்.
கலைத்துறையில் புத்தாக்கத்திற்குத் தடையில்லை என்று தெரிவித்த சினேகா, அவரது கலை ஆர்வத்தை ஆசிரியர்கள் தூண்டினார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், அறிவியல் பாடங்களிலிருந்து கலை சார்ந்த பாடங்களுக்கு மாறியது சவாலானதாக அமையவில்லை என்றும் சொன்னார் சினேகா.
“கலையின் மீதான மிகுந்த ஆர்வத்தால் அது தொடர்பான பாடங்களில் நான் சிறந்து விளங்கினேன்,” என்று இவர் தெரிவித்தார்.
கடின உழைப்பால் சினேகா கல்வி அமைச்சின் மனிதவியல் உபகாரச் சம்பளத் திட்டத்துக்குத் தகுதி பெற்றார். அது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.
“இந்த உபகாரச் சம்பளத்தைப் பயன்படுத்தி என்னால் எனது கற்றல் திறன்களை விரிவுபடுத்த முடிந்தது,” என்றார் சினேகா.
தொடக்கக் கல்லூரி முதல் ஆண்டில் ‘மறைக்கப்பட்ட கண்காணிப்பு’ என்ற கருப்பொருளையொட்டி சினேகா ஒரு கலைப்படைப்பை உருவாக்க முற்பட்டார்.
மறைந்த கேமராக்கள், இயந்திர மனிதக் கருவியை உள்ளடக்கிய கலைப்படைப்பு அவருடைய நண்பர்கள், ஆசிரியர்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற்றது.
“கலைப் புத்தாக்கம், அறிவியல் தவிர நான் என் படைப்புக்குப் பல மின்னணுப் பாகங்களைப் பயன்படுத்தினேன். அது சற்று சவாலாக இருப்பினும், ஒரு சுவாரசியமான அனுபவமாக அமைந்தது,” என்று பகிர்ந்தார்.
இந்தக் கலைப்படைப்பை ஒட்டிய ஆராய்ச்சியில் நம் அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்டவை, மறைக்க முடிந்தவை பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் சினேகா.
எதிர்காலத்தில் தேசிய பல்கலைக்கழகத்தில் தொழில்துறை வடிவமைப்புப் பட்டக் கல்வி பயில விரும்புவதாகக் கூறினார் சினேகா.
“எனது கல்விப் பயணத்தில் என் நண்பர்களும் ஆசிரியர்களும் பெரும் பங்காற்றினர். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று புன்னகைத்தார் சினேகா.
தடைகளிலிருந்து மீண்ட மாணவர்
15 வயதிலிருந்து மூளையின் ஒரு பகுதியைத் தாக்கும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார் மிலெனியா கல்விநிலைய மாணவர் பிரவீன் வேலாயுதம், 20. அதுமட்டுமின்றி உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு விபத்தில் அவருடைய தோள்பட்டை பாதிக்கப்பட்டது.
இருப்பினும் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிய பிரவீன், மிலெனியா கல்விநிலையத்தில் சேர விரும்பினார்.
“என் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு உயர் கல்விக்கு நான் மிலெனியா கல்விநிலையத்தைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் பிரவீன்.
குறிப்பாக, ‘ஹாக்கி’ விளையாட்டு பிரவீனுக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. உயர்நிலை ஒன்றில் ‘ஹாக்கி’ விளையாட்டுக்கு அறிமுகமாகிய பிரவீன், நாளடைவில் அதன் மீது அதீத ஆர்வம் கொண்டு அதில் சிறந்து விளங்கத் தொடங்கினார்.
“ஹாக்கி விளையாட்டிலிருந்து எனக்குக் கிடைக்கும் உந்துதல் ஓர் உணர்வுப்பூர்வமான அனுபவம்,” என்று பகிர்ந்தார்.
‘ஹாக்கி’ விளையாட்டின் மீதான பேரார்வம் மிலெனியா கல்வி நிலையத்திலும் தொடர்ந்தது. 2024ஆம் ஆண்டு ‘ஏ’ பிரிவில் நடந்த முதன்மைப் போட்டியில் தனது அணி வெற்றி பெற்றது. அப்போது, பிரவீன் அணித் தலைவராக இருந்தார்.
கல்வியையும் விளையாட்டையும் சரிவர நிர்வகிக்க, பிரவீன் தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக்கொண்டார்.
“உடற்குறைக்கு அப்பால் கல்வி, விளையாட்டு, தனிப்பட்ட கடமைகள், குடும்ப நேரம் போன்றவற்றுக்கு இடையே சமநிலையை உறுதிசெய்வது மிகவும் சவாலாக இருந்தது,” என்று பகிர்ந்தார் பிரவீன்.
தனது தோள்பட்டை கடந்த ஆண்டு மீண்டும் காயமடைந்ததால் பிரவீன் தனது தேர்வுகளை எழுதச் சிரமப்பட்டார்.
“எனது தேர்வுத்தாள்கள் விடைகளைத் தட்டச்சு செய்யும் வசதியை நான் கோரியிருந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்.
இருப்பினும், தடைகளைக் கடந்து தனது தேர்வுகளை முடித்தார் பிரவீன். எதிர்காலத்தில் அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்த பிறகு தேசிய பல்கலைக்கழகம், அல்லது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளியல், வணிகப் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
“என் மேல்நிலைத் தேர்வுகளுக்கு நான் முழுமூச்சாக இறங்கி முயற்சி மேற்கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்றார் பிரவீன்.