நாள்தவறாமல் ஒலிக்கட்டும் தமிழோசை

நாள்தவறாமல் ஒலிக்கட்டும் தமிழோசை

2 mins read
09eacbc2-e925-410e-b979-c9ff835301f1
தமிழ்மொழி விழா 2026இன் நிகழ்ச்சிகளைச் செய்திகளாகவும், காணொளிகளாகவும் தொகுத்துப் படைத்த மாணவச் செய்தியாளர்கள். - படம்: பே. கார்த்திகேயன்

ஒவ்வோர் ஆண்டும், தமிழ்மொழி விழாவின் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்வதுண்டு. 

பார்வையாளராக பலமுறை; போட்டியாளராகவும், அம்மா நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, அவருடன் சேர்ந்தும் சிலமுறை பங்கேற்றிருக்கிறேன்.

இந்த ஆண்டும், விழாவிற்குச் சென்றேன். இம்முறை தமிழ் முரசின் 15 மாணவச் செய்தியாளர்களுள் ஒருவராகப் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. அது முற்றிலும் புதிய அனுபவம். பணியின் ஓர் அங்கமாக எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்றதுடன், பலரை நேர்காணல் எடுத்து,  செய்தியாகத் தொகுத்தேன், படைத்தேன். 

இந்தத் தமிழ்மொழி விழா, பங்கேற்பாளர்கள் முதல் ஏற்பாட்டாளர்கள் வரை பலதரப்பட்ட மக்களிடம் பேசுவதற்கான தளமாகவும் அமைந்தது. 

தமிழை மக்களிடம் கொண்டுசேர்க்க எடுக்கப்படும் முயற்சிகள், அவற்றின் தாக்கம், இவற்றைக் கண்கூடாக காணமுடிந்தது தனிச்சிறப்பு.

அத்துடன், ஒவ்வொரு வாரமும், ஏன், ஒவ்வொரு நாளும் தமிழோடு உறவாடக்கூடிய அரிய வாய்ப்பும் இம்முறை எனக்குக் கிட்டியது.

பறை, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரியக் கலைகளைக் கொண்டாடிய நிகழ்ச்சிகள், தமிழாற்றலுக்குச் சவால் விடுத்த போட்டிகள், பண்பாட்டு மணம் பரப்பிய கருத்தரங்குகள் என மொழியின் வளத்தைத் தமிழ்ச் சமூகத்துக்கு சிறப்பாக நினைவூட்ட 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடந்தேறின. 

உள்ளூர்த் திறனாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களுடைய திறன்களை வெளிக்கொணருவதற்கான தளத்தையும் அமைத்துக்கொடுத்தன இவ்வாண்டின் நிகழ்ச்சிகள்.

எனினும் நினைவுக்கு எட்டியவரை இதுவரை நான் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் தமிழர்களையே பார்த்திருக்கிறேன்.  

ஆனால், இந்த ஆண்டு நான் சென்றிருந்த நிகழ்ச்சியொன்றில், சிறார்களுக்குத் தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டைப் பற்றிச்  சீன இளையர் ஒருவர் விளக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். 

கலாசாரமும் மொழியும் பேணப்பட்டு வரும் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தற்போது பார்ப்பது அவ்வளவு எளிதன்று என அவர் அக்கறை தெரிவித்தார்.

அவ்வகையில், ஒரு மாதம் நீடித்த இந்த மாபெரும் விழா, அது நல்கிய மேடை, அமைத்துக்கொடுத்த தளம் இவையெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்திருப்பதற்கு இளையர்களாகிய நாம்தான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அதேவேளையில் இவ்விழாவை எளிதாக எடுத்துக்கொள்ளவும் கூடாது.

ஏப்ரல் மாதம் தொடர்ந்து தமிழோசையை ஒலிக்கச் செய்த தமிழ்மொழி விழா நிறைவுற்றது, மழை பெய்து ஓய்ந்தது போன்ற ஓர் உணர்வை என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்பதை  நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 

ஆயினும், தமிழ் அன்னையை மாதம் முழுக்க மேடையேற்றிவிட்டு, மாலை மரியாதை அணிவித்த கையோடு, மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம் என்று வாழ்த்தி வழியனுப்பிவிட்டோமோ என்ற கேள்வியும் என்னை உறுத்துகிறது. 

தமிழ்மொழி விழா மாதத்தில், உச்சத்துக்குச் சென்ற அன்னைத் தமிழ் மீதான நமது ஆர்வம் சிறிதளவும் குறையாது, இனிவரவிருக்கும் மாதங்களிலும், தமிழின் நறுமணம் நாடெங்கும் பரவி நிலைத்து நிற்கவேண்டும். 

சமூகமும் சமூக ஆதரவாளர்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து தோள் கொடுக்க வேண்டும். ஏனெனில், தமிழை வாழும்மொழியாக வைத்திருக்க, பாடுபடுவது மட்டுமன்றி, ஆர்வத்தோடு ஈடுபடுவதே நற்பலன் தரும்.  

குறிப்புச் சொற்கள்