செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ் மாணவர்கள்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ் மாணவர்கள்

3 mins read
சாரதா சர்மாவின் கதையும் சுபிட்ஷாவின் வெற்றியும்
09bb1893-e137-4637-be8a-8ccde151b36e
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி அருண் மகிழ்நன் (இடது), தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன் ஆகியோரிடமிருந்து பரிசைப் பெற்றுகொண்ட மாணவி சுபிட்ஷா. - படம்: அனுஷா செல்வமணி

செயற்கை நுண்ணறிவை அறநெறிகளோடும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தித் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் போட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது.

மின்னிலக்க வளங்கள் வாயிலாக மாணவர்களைத் தமிழ்மொழி, சிங்கப்பூர்த் தமிழர் மரபுடன் பிணைத்தல், விமர்சனச் சிந்தனை, தகவல் தொடர்பு, பல்லூடகத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவை போட்டியின் முக்கிய நோக்கங்களாகும்.

அதில் கலந்துகொண்ட தொடக்கக்கல்லூரி மாணவர்கள் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சிய இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள மின்வளங்களிலிருந்து தங்களுக்குப் பிடித்த ஒரு பனுவலைத் தேர்வு செய்தனர்.

அப்பனுவலில் தங்களை ஈர்த்த, தங்கள் சிந்தனையைத் தூண்டிய அல்லது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு செய்தி அல்லது தகவல் குறிப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் புத்தாக்க முறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இரண்டிலிருந்து, மூன்று நிமிட மின்படைப்பை உருவாக்க வேண்டும்.

சீனாவில் முறையான தமிழ்க் கல்விக்கான அடித்தளத்தை அமைத்ததற்காக சிங்கப்பூர், சீனா ஆகிய இரு நாடுகளிலும் நினைவுகூரப்படும் சாரதா சர்மாவின் கதை, போட்டியில் கலந்துகொண்டு வாகை சூடிய யூனோயா தொடக்கக்கல்லூரி மாணவி சுபிட்ஷா பார்வதி சொக்கலிங்கத்தை ஈர்த்தது.

ஆசிரியர் மூலம் போட்டியைப் பற்றி கேள்விப்பட்ட சுபிட்ஷா, 18, செயற்கை நுண்ணறிவுக் கருவியை பயன்படுத்த மிக ஆர்வமாக இருந்தார். தொடக்கக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் அவர் இத்தகைய போட்டியில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை.

போட்டி மூலம் எவ்வாறு காணொளித் தொகுப்பு செய்வது என்பதைக் கற்றுக்கொண்ட அவர், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சிய இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள மின்வளங்களில் தனது கவனத்தை ஈர்த்தது ‘ஆளுமைகள்’ பகுதி என்று சொன்னார்.

“சிங்கப்பூரில் தமிழ்மொழியை முன்னிலைப்படுத்திப் பேசியவர்களில் பல ஆளுமைகள் ஆண்களாகவே இருந்தனர். பெண்கள் ஏன் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கக்கூடாது என்று தேடிப் பார்த்தபோது சாரதா சர்மாவின் கதை என்னைப் பிரமிக்க வைத்தது,” என்று குறிப்பிட்டார் சுபிட்ஷா.

சாரதா சர்மாவின் கதை தனக்கு எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தான் தயாரித்த காணொளியில் வெளிப்படுத்தினார் சுபிட்ஷா.

‘கேப்கட் ஏஐ’, ‘ஜெமினை’ போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி நான்கு நாள்களில் படைப்பை அவர் தயார்செய்தார்.

பெண்கள் முன்னேற்றம், நவீனப் பெண்ணியம் போன்றவற்றில் கவனம் செலுத்திய சாரதா சர்மாவின் கதையைத் தத்ரூபமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சுபிட்ஷா செயற்கை நுண்ணறிவை முழுவதும் சார்ந்திருக்கவில்லை.

காணொளிக்காக, சாரதா சர்மாவின் திரைக்கதையை எழுதினார் சுபிட்ஷா. அதைச் செம்மைப்படுத்த ஜெமினை கருவி அவருக்குக் கைகொடுத்தது.

இந்த ஆண்டு ‘ஏ’ நிலைத் தேர்வுகள் எழுதவிருக்கும் சுபிட்ஷா, தமிழ் இலக்கிய மாணவி. போட்டியில் வெற்றிபெற்றதை நினைத்து மகிழ்ச்சி கொண்ட அவர், இலக்கிய மாணவியாகத் தனக்கு மிகவும் பெருமிதமாய் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இது சாரதா சர்மாவின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 37வது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கில் சுபிட்ஷாவின் படைப்பு உட்பட கலந்துகொண்ட இதர மாணவர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஈசூன்-இன்னோவா தொடக்கக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

மாணவர்களைத் தமிழ்மொழியில் ஆழமாக ஈடுபடுத்துவதும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உலகில் அவர்கள் சிறந்து விளங்கத் தேவையான திறன்களை வழங்குவதுமே கருத்தரங்கின் நோக்கம்.

கருத்தரங்கின் மற்றொரு முக்கிய அங்கத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் ஆசிரியர் கல்விக்கழகத்தின் தமிழ்மொழி முதன்மை ஆசிரியர் திரு க. முருகன் சிறப்புரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவு எவ்வாறு கல்வி, மொழித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்தும் அதை மாணவர்கள் எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் திரு முருகன் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவு தேவையான பதிலைத் தர வேண்டுமானால் ஒருவர் அதற்குக் கொடுக்கும் குறிப்புகள் தெளிவாகவும் சூழலை விளக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் யாராக இருந்து பதில் சொல்ல வேண்டும், யாருக்காகப் பதில் சொல்ல வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் உண்மையானவை அல்ல என்பதால், சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம், மொழி தொடர்பான கற்றலுக்குச் சரிபார்க்கப்பட்ட நம்பகமான தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“செயற்கை நுண்ணறிவைப் பிழை திருத்தவும் புதிய கோணங்களில் சிந்திக்கவும் பயன்படுத்தலாம். அதை ஒரு வழிகாட்டியாக மட்டுமே கருதி உங்கள் சொந்த மொழிநடையில் கருத்துகளை மேம்படுத்த வேண்டும்,” என்று மாணவர்களுக்கு விளக்கிச் சொன்னார் திரு முருகன்.

குறிப்புச் சொற்கள்