அரிய வரலாற்றைக் கூறும் தேவராஜனின் காணொளிகள்

2 mins read
672237b6-8248-4de0-9076-11edbbc0b557
சிறுவயது முதலே வரலாற்றின் மீது பேரார்வம் கொண்ட தேவராஜன், தொடர்ந்து வரலாற்றுத் தகவல்களைத் தேடிப் பதிவிட விரும்புவதாகச் சொன்னார். - படம்: தேவராஜன் தேவதாஸ்

சிங்கப்பூர் வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளை, சுவாரசியமான படங்கள், குறுங்காணொளிகள் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தேவராஜன் தேவதாஸ், 33.

இவரின் ‘டிக்டாக்’ சமூக ஊடகப் பக்கத்தின் பெயர் ‘ஹிஸ்ட்ரியோகி’ (Historyogi).

இதில் இவர் பதிவிட்ட 1959ஆம் ஆண்டு தைப்பூச நிகழ்ச்சியின் காணொளி, 1960களில் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களைக் காட்டும் படங்கள், முதல் தேசிய தினப் பேரணி, எம்ஆர்டி தொடங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி ஆகிய யாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வரலாற்றில் இளங்கலை, முதுகலை படிப்புகளை முடித்துள்ள தேவராஜன், தான் கற்றதைச் சுருக்கமாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் பதிவிடுவது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

‘சென்டர் பாயிண்ட் கிட்ஸ்’ என 1980களின் இளையர்கள் குறித்து சில தரப்பினர் கூறிய கருத்துகள் குறித்த காணொளி, தற்போதுள்ள இளையர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்தச் சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கியபோது வரலாற்றில் ஆர்வம் கொண்ட சில நூறு பேர் மட்டுமே தன் பக்கத்தைப் பின்தொடர்வர் எனத் தாம் எண்ணியதாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 123,000க்கும் மேல் சென்றுவிட்டதைத் தம்மால் நம்ப முடியவில்லை என்றும் சொன்னார்.

தமது டிக்டாக் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 123,000க்கும் மேல் அதிகரித்துவிட்டதாக தேவராஜன் கூறினார்.
தமது டிக்டாக் பக்கத்தைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 123,000க்கும் மேல் அதிகரித்துவிட்டதாக தேவராஜன் கூறினார். - படம்: டிக்டாக்

எனினும், அனைவருக்கும் தொடர்ந்து சிங்கப்பூர் வரலாறு குறித்த அரிய தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்காக சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்தும் தேசிய நூலகத்திலிருந்தும் படங்களையும் செய்திகளையும் தாம் சேகரிப்பதாகக் கூறினார்.

முழுநேரப் பொதுக் கொள்கை ஆய்வாளராகப் பணியாற்றிவரும் இவர், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சேகரித்த படங்கள், காணொளிகளைத் தொகுத்து உரிய தகவல் குறிப்புகளுடன் குறுங்காணொளியாகப் பதிவிட்டு வருகிறார்.

படிப்பதற்கும் பார்ப்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளத்தைச் சுட்டிக்காட்டிய தேவராஜன், பாடப்புத்தகத்தில் படித்து மறந்த நிகழ்வுகளையும் மூத்தோரிடம் கதைகளாகக் கேட்டறிந்தவற்றையும் காணொளிகளாகப் பார்ப்பது நல்ல உணர்வைத் தரும் என்று கூறினார்.

“வரலாறு சலிப்பூட்டும் ஒரு பாடம் என்பது சிலரது கருத்து. ஆனால், கடந்த காலம் குறித்து அறிந்தால்தான் நிகழ்காலத்தைக் குறித்த புரிதல் ஏற்படும். எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்க இயலும். படிக்கப் பிடிக்காத நீண்ட வரலாறுகளைச் சிறு துணுக்குகளாக அளிப்பது அச்செய்திகளைப் பலரிடம் கொண்டு சேர்க்கும்,” என்றார் தேவராஜன்.

பதிவுகளுக்காக நேரம் செலவிடுவதும் படிப்பதும் தமது அறிவையும் கற்றலையும் விரிவுபடுத்துவதாகக் கூறிய இவர், சிங்கப்பூர் வரலாற்றை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்