விருப்பங்களில் வேறுபட்டாலும், ஒருமித்த நோக்கத்துடன் இணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் சிந்து மோகன், விஷ்ணு சுந்தரேசன் எனும் இளையர்கள்.
2023ஆம் ஆண்டில் தொழில்முனைவராக விரும்புவோருக்கான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டுக் கல்லூரிகள் (NUS Overseas Colleges) திட்டத்தின் மூலம் அறிமுகமாகி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல புதிய வணிக முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டனர்.
“எனக்கு எப்போதுமே வணிகத்தில் ஆர்வம் இருந்தது. அதனால் வலைப்பதிவு (blogging), சமூக ஊடக விற்பனை (marketing) போன்ற இணையவழி வணிகங்களில் ஈடுபட்டேன். அதன்மூலம் இணையப் போக்குவரத்து போன்ற பல திறன்களை நானாகவே கற்றுக்கொண்டேன்,” என்றார் 17 வயதிலிருந்து வணிகத்தில் அனுபவம் பெற்ற சிந்து, 23.
“பேனசோனிக் (Panasonic), ஹைப்போடென்யூஸ் ஏஐ (Hypotenuse AI) போன்ற நிறுவனங்களில் வேலைப்பயிற்சி அனுபவத்தின்போது, எனக்குப் புதிய கண்ணோட்டம் கிடைத்தது. கணினியியல், தொழில்நுட்பத்துக்கு அப்பால் வணிகம், விற்பனை, ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்ற விஷ்ணு, 25.
பெரிய அளவிலான வணிகத் திட்டங்களில் ஈடுபட ஆர்வம் இருப்பதை உணர்ந்த விஷ்ணு, சிந்துவுடன் இணைந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், ‘ஹேக்கத்தான்’ (Hackathon) போட்டியில் பங்கெடுத்தார்.
அந்த அனுபவத்தின் மூலம் கிடைத்த தன்னம்பிக்கையும் வலுவான நட்பும் ஒரு செயலியை உருவாக்கும் விதைகளாக அமைந்தன.
‘ஸ்னோபால்’ (Snowball) செயலி
‘டூம்ஸ்க்ரோலிங்’ (Doomscrolling) எனும் அளவுக்கு அதிகமாக மின்னணு திரைகளில் அதிக நேரம் செலவழிப்பது போன்ற பழக்கங்களுக்கு விதைபோட்ட சமூக ஊடகம், இன்று பலரின் வாழ்க்கைமுறையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றுக்கு ஒரு தீர்வாகச் சிந்து, விஷ்ணு இருவரும் இணைந்து ‘ஸ்னோபால்’ என்ற சமூக வலைத்தளச் செயலியை உருவாக்கினர்.
தொடர்புடைய செய்திகள்
விஷ்ணுவின் குறிமுறையாக்கத் (coding) திறனும், சிந்துவின் விற்பனை அனுபவத்தோடு நேரத்தைத் திறம்பட வகுத்துச் செயல்படுதல் மீதான ஆர்வமும் இணைந்து உருவானதே ‘ஸ்னோபால்’ (Snowball) செயலி.
முதலில் செயற்கை நுண்ணறிவுச் செயல்திறன் மேம்பாட்டு உதவியாளராகத் தொடங்கிய திட்டம், பின்னர் ‘ஸ்னோபால்’ என்ற சமூக வலைத்தளச் செயலியாக மாறியது.
“சந்தையில் ஏற்கெனவே செயல்திறன் மேம்பாட்டுச் செயலிகள் நிறைய உள்ளன. அதனால் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்த எண்ணினோம். பயனாளர்கள் ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையைத் தொடங்கவோ புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ ஒரு குறிக்கோளை அடையவோ எண்ணினால், ‘ஸ்னோபோல்’ செயலியை நாடலாம்,” என்றனர் நிறுவனர்கள்.
பயனாளர்கள் கைத்தொலைபேசியிலேயே பொழுதைக் கழிக்காமல், வெளிப்புறத்தில் பயனுள்ள வழிகளில் நேரத்தைச் செலவிட ஊக்குவிக்கிறது. பின்னர் அவர்கள் அந்த முன்னேற்றத்தை ஸ்னோபோலில் பதிவு செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.
வேலை நேரத்துக்கு அப்பால் தனிப்பட்ட நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட ஊக்குவிப்பதே நோக்கம். இச்செயலி பயனாளர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்கும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
“பயனாளர்கள் தினமும் செயலியில் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அந்த எதிர்பார்ப்போ நிபந்தனையோ இருந்தால், ஒரு நாள் தவறினாலும் அவர்கள் ஊக்கம் இழக்க நேரிடும். அதற்குப் பதிலாக, எவ்வித நினைவூட்டலுமின்றி நேரம் இருக்கும்போது பதிவுசெய்யலாம். நாளடைவில் தங்களின் முன்னேற்றத்தைப் பார்க்கையில் அதுவே அவர்களுக்கு ஊக்கமாக மாறும்,” என்றார் சிந்து.
இன்ஸ்டகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ‘ஸ்னோபால்’, நண்பர்களுடன் இணையவும் பயனாளர்கள் தங்களுடைய வளர்ச்சியைக் காணவும் வாய்ப்பளிக்கிறது.
“சமூக ஊடகங்கள் பல்வேறு எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் எவ்வித எதிர்மறைத் தாக்கமும் இல்லாத ஒரு சமூக வலைத்தளச் செயலியை உருவாக்கியுள்ளோம் என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது,” என்றார் விஷ்ணு.
இவ்வாண்டு ஜூலை 15ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட ‘ஸ்னோபால்’ செயலியைத் தற்போது 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
பயணத்தில் சந்தித்த சவால்கள்
வணிகத்தைத் தொடங்க முனையும் பலர் முதலில் சிந்திப்பது நிதி பற்றித்தான்.
அந்த வகையில், ஓய்வுபெற்ற பெற்றோர் மீது நிதிச் சுமையைச் சுமத்தக் கூடாது என்ற தீர்மானத்துடன் விஷ்ணு இரண்டு பகுதிநேர வேலைகளைச் செய்துவந்தார்.
பெரும்பாலான பெற்றோர்க்குப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை இயல்பானது. தொடக்கத்தில் தமது முயற்சியில் நம்பிக்கை கொள்ளாத பெற்றோர், இப்போது ‘ஸ்னோபால்’ செயலியைப் பயன்படுத்துவதோடு, அதை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த தங்களது கருத்துகளையும் பகிர்வதாகக் கூறினார் விஷ்ணு.
வரும் ஆண்டுகளில் இப்பயணத்தைத் தொடர பெரும் முயற்சி தேவைப்படும் எனக் கூறிய விஷ்ணுவும் சிந்துவும் அதிலிருந்து வருமானம் ஈட்டவும் இன்னும் பல புதிய அம்சங்களைச் சேர்த்துப் பயனாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
ஸ்னோபால் செயலிக்கான சிந்தனை உருவான அமெரிக்காவிலேயே அதனை அறிமுகப்படுத்தவும் விருப்பம் தெரிவித்தனர் அவர்கள்.
“தொழில் தொடங்க நினைத்தால், அதிகம் சிந்திக்காமல் தொடங்குங்கள். குறிப்பாக இளம் வயதிலேயே தொடங்குங்கள். தோல்வியையும் எதிர்கொள்ளுங்கள். அது வெற்றியைவிட அதிகம் கற்றுத்தருவதோடு உங்கள் வாழ்க்கைக் கதையை இன்னும் சுவையுள்ளதாக மாற்றும். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை என்றால், கூகலும் செயற்கை நுண்ணறிவும் உங்களுக்குச் சிறப்பாகக் கைகொடுக்கும்,” என்றனர் சிந்து, விஷ்ணு இருவரும்.