தந்தை-மகள் உறவை உணர்த்தும் உயில்-நட்சத்திரா

2 mins read
6f64cb3a-ae96-4c59-abf1-70befb466e95
உயில்-நட்சத்திரா நிகழ்ச்சியின் விளம்பரப் பதாகை. - படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்தியக் கலாசாரக் குழு
multi-img1 of 2

காலமான தன் தந்தையோடு இருந்த விரும்பத்தகாத உறவை அடுத்து, வீட்டின் உரிமையைத் தன் உறவினருக்கு மாற்றிக்கொடுக்கச் செல்லும் ஓர் இளம்பெண்ணின் கதை இது.

இந்தப் பாதையில் அவள் சந்திக்கும் மனக்குமுறல்களையும் கண்டறியும் உண்மைகளையும் மையமாகக் கொண்டு ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்தியக் கலாசாரக் குழு நடத்தும் உயில்-நட்சத்திரா நாடகம் நடைபெற உள்ளது.

11வது முறையாக நடைபெறும் நட்சத்திரா நிகழ்ச்சி ஒன்றரை மணி நேர நாடகமாக இடம்பெறும். மே 16, 17ஆம் தேதிகளில் இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சியை ஏறத்தாழ 25 மாணவர்கள் படைப்பர். நாடகத்தோடு சேர்ந்து இரண்டு நடனங்களும் இடம்பெறும்.

முன்னாள் மாணவர்களின் ஆதரவோடும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கும் பிரபல நடிகர் எபி ஷங்கராவோடும் இணைந்து பல மாதங்களாக மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகினர்.

“தயாரிப்பு, நடிப்பு, ஆடல் என அனைத்தையும் ஏற்பாடு செய்வதும் படைப்பதும் நம் மாணவர்கள்தான். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதும் அவர்கள் அதை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதுமே நட்சத்திராவின் நோக்கம்,” என்று நாடகத்தின் தயாரிப்பாளர் பிரித்திகா பூபாலன், 20, கூறினார்.

முதன்முறை ஒரு நாடகத்திற்கான கதையையும் வசனத்தையும் எழுதிய மாணவ இயக்குநராகத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சி. லோகேஷ்வரன், 23.

“பல மாணவர்களுக்கு நடிப்புக்கான அனுபவம் இல்லை. இருந்தாலும், அவர்கள் முழு ஈடுபாட்டோடு முன்வந்து கற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் தமிழ் நாடகக் காட்சியை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கோடும் அனைத்து வயதினரும் நிகழ்ச்சியை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் திரைக்கதை எழுதப்பட்டதாக லோகேஷ்வரன் கூறினார். கதையின் முக்கிய அங்கம் ஓர் உயில் என்பதால் அதற்கு ஏற்றவாறு உயில்-நட்சத்திரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

“சென்ற நட்சத்திரா நிகழ்ச்சியில் வெறும் நடனக் கலைஞராக இருந்தேன். ஆனால், இன்று ஒரு நடன இயக்குநராக என் வேலை சிறிது கடினமாக இருந்தாலும் புதிய அனுபவமாக அமைந்துள்ளது,” என்றார் கமலி ரமேஷ், 19.

“மேடையிலும் திரையிலும் நடிக்கும் நடிகர்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நட்சத்திரா உதவியுள்ளது. நடிப்பின் பல முக்கியக் கூறுகளையும் கற்றுக்கொண்டேன்,” என்றார் நாடகத்தில் நடிக்கும் ஷ்ரேயா, 20.

இந்நிகழ்ச்சியின் அனைத்துக் கூறுகளிலும் மாணவர்களின் உழைப்பும் அவர்களின் புத்தாக்க கருத்துகளும் தென்படும் என்பதில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்தியக் கலாசாரக் குழு மாணவர்கள் பெருமைகொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்