தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளம் தொழில்முனைவர்கள் பங்கேற்ற ‘வணிக வேட்டை 2025’

3 mins read
c52fb178-46a2-4616-bc7a-1b2ad49896cf
இவ்வாண்டின் ‘வணிக வேட்டை’ போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ‘எடுவில்’ குழு. - படம்: மொமென்டோ வி‌‌ஷன்
multi-img1 of 3

தமிழர் பேரவை இளையர் மன்றமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘வணிக வேட்டை’ போட்டியின் இறுதிச்சுற்று மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக்கழகம், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான 26 மாணவர்களைக் கொண்ட 9 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

தொழில்முனைவுத் திறன்களை வளர்க்கும் பயிலரங்குகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வர்த்தக யோசனைகளைக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்டியு ‘காயா’ அரங்கில் படைத்தனர். நிபுணத்துவ நீதிபதிகள் நால்வர், பார்வைளார்கள் 150 பேர் முன்னிலையில் அவர்கள் யோசனைகளைப் பகிர்ந்தனர்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கு இந்த ஆண்டுப் போட்டியின் புதிய அங்கமாக அமைந்தது. ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ‘லைஃப் லேப் ரிசோர்சஸ்’ நிறுவனருமான எட்வர்ட் சியா இந்தக் கருத்தரங்கில் மாணவர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒரு பண்ணைக்கு மாணவர்கள் சென்றனர். ‘அறிவார்ந்த, பசுமையான, வாழச் சிறந்த நகரம்’ என்ற இப்போட்டியின் கருப்பொருளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“அனுபவமிக்க தொழில்துறைத் தலைவர்களுடன் இளம் தொழில்முனைவர்கள் கலந்துரையாடி, தொடர்புகளை அமைத்துக்கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். அந்தத் தொடர்புகளின்வழி புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும் என்று நம்புகிறோம்,” என்றார் ‘வணிக வேட்டை’ போட்டியின் திட்ட இயக்குநரான ந.ல.ஸ்ரீவத்சவ், 21.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்களுக்கு முறையே $2,000, $1,500, $1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டின் ‘வணிக வேட்டை’ போட்டியில் முதல் பரிசை சஞ்சய் முத்துகுமரன் (23, என்யுஎஸ் வணிகம்), வே வர்ஷா (21, என்யுஎஸ் கணினி அறிவியல்), சிந்தியா மணிவண்ணன் (21, என்யுஎஸ் தொழில்துறை வடிவமைப்பு), தி. சக்தி நிவாஸ் (24, என்டியு வணிகம்), ர. சமிக்‌ஷா (20, என்யுஎஸ் உயிர்ப்பொறியியல்) ஆகியோரை உள்ளடக்கிய ‘எடுவில்’ குழு பெற்றது.

தாய்மொழி வகுப்பறைகளில் மாணவர்களின் ஈடுபாட்டையும் கற்றலையும் விளையாட்டுவழி மேம்படுத்தும் செயலியைப் பற்றி இவர்கள் யோசனைகளைப் படைத்தனர்.

கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியில் கடந்த ஆண்டு ‘ஏ’ நிலைப் படிப்பை முடித்த ஜாய் ஜோசஃபின் சமூக நிறுவனத் திட்டம் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. இத்திட்டம், இந்திய இல்லத்தரசிகள் வீட்டில் சமைக்கும் உணவை நகர்ப்புற வல்லுநர்கள், ஓய்வின்றிப் பணியாற்றும் குடும்பத்தினர், மாணவர்கள் போன்றோர்க்கு விற்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களான குகனேஸ்வரன், கிரிஷ் கமல், ரியான் சௌ ஆகியோர் உருவாக்கிய ‘மெமோயிட்டி’ விளையாட்டு மூன்றாம் பரிசைப் பெற்றது. இந்த விளையாட்டு மறதிநோயால் பாதிக்கப்பட்டோரின் நினைவாற்றலைத் தூண்டி, மேம்படுத்தும் விதத்திலும் சிங்கப்பூரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இப்போட்டியில் வென்ற பரிசுத்தொகை எங்கள் செயலியையும் அது வழங்கும் சேவைகளையும் மேம்படுத்த மிகவும் உதவும். செயலியைச் செம்மைப்படுத்தி மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் ‘எடுவில்’ குழுவின் உறுப்பினர் சமிக்‌ஷா.

மேலும், “இளம் தமிழ் தொழில்முனைவர்கள் பலரைச் சந்திக்‌க இப்போட்டி ஒரு நல்ல தளமாக அமைந்தது. ஒரு வர்த்தகத் திட்டத்தை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் எப்படி அதை முன்வைப்பது என்பது போன்ற முக்கிய வர்த்தகத் திறன்களைப் போட்டியின் பயிலரங்குகளில் கற்றுக்கொண்டோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்