கடந்த புதன்கிழமை (ஜனவரி 14) பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு முடிவுகள் வெளிவந்தன. தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களின் மகிழ்ச்சி, பதற்றம், லட்சியங்களை ஆராய்ந்தது இளையர் முரசு.
விலங்குகளுக்கு கைக்கொடுக்க தொடரும் கல்வி
உயர்நிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்த ஆண்டில் தன் தாத்தாவை இழந்தார் மாணவி கரிஷ்மா ஜேமி முருகேஸ்வரன்.
புதுப் பள்ளி, புதிய சூழல், தாத்தாவின் மறைவு என அனைத்தையும் சமாளிப்பது சிரமமாக இருந்தது கரிஷ்மாவுக்கு. வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண்கள் குறையத் தொடங்கின. ஆனால், சூழ்நிலையை மாற்ற விரும்பினார் கரிஷ்மா.
பெற்றோர், ஆசிரியர்கள் அளித்த ஆதரவினால் மெல்ல மீண்டு வந்தார்.
பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு முடிவுகளை ஜனவரி 14ஆம் தேதி பெற்ற கரிஷ்மா, இவ்வாண்டு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொது அறிவியலில் பட்டயக்கல்வியை மேற்கொள்ளவுள்ளார்.
புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் கரிஷ்மாவுக்குச் சவாலாக இருந்தன. எனினும் செயற்கை நுண்ணறிவின் உதவியால் அந்தப் பாடங்களைப் படிக்க கரிஷ்மாவுக்கு தன்னம்பிக்கை பிறந்தது.
குறிப்பாக, புவியியல் பாடத்தில் இடம் பெறும் கருத்துகள் கரிஷ்மாவுக்கு ஒரே மாதிரியாக இருந்ததால் அதனை வேறுபடுத்த வலையொலி ஒன்றை கேட்டு வந்தார்.
வரலாறு, புவியியல் வகுப்புகளில் எடுக்கும் குறிப்புகளை ‘நோட்புக் எல்எம்’ எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இணையத்தளம் வழி பகுப்பாய்வு செய்தார்.
விலங்கு ஆய்வாளராக வனவிலங்குகளை ஆபத்திலிருந்து பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும் என்பதே கரிஷ்மாவின் கனவு.
“சிங்கம், புலி போன்ற வனவிலங்குகள் மெல்ல அழிந்து வருகின்றன. அதை விழிப்புணர்வு வழி தடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது,” எனறார் கரிஷ்மா.
தன்னலமற்ற, தரவு ஆர்வலர்
தன் தோழி மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி, எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக ஃபஹீமா ஷிஃபா முகமது பைசல் உணர்ந்தபோது, தன் வகுப்பு ஆசிரியரின் ஆதரவைப் பெற தோழியை ஊக்குவித்தார்.
கருணை உள்ளத்துக்குப் பெயர் பெற்ற ஃபஹீமா ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு ஆதரவாளராக ஆனார்.
‘ஸ்டெம்’ (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வமும் கொண்டுள்ளார் ஃபஹீமா. நண்பர்களுடன் சேர்ந்து செய்த அறிவியல் ஆராய்ச்சி திட்டம் ஒன்றை நினைவுகூர்ந்தார் ஃபஹீமா.
“வகுப்பறைகளுக்கு அப்பால், உலகில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த அனுபவம் சொல்லித் தந்தது. நண்பர்களுடன் இணைந்து தரவுகள் சேர்த்து கருதுகோள்களை உருவாக்கியது இன்றியமையாத அனுபவம்,” என்றார்.
2024ஆம் ஆண்டு ‘ஸ்டெம்’ அரையிறுதிப் போட்டியில் பள்ளியைப் பிரதிநிதித்து மதிப்புமிக்க ஏ*ஸ்டார் (A*STAR) அறிவியல் விருதைப் பெற்றார்.
‘ஓ’ நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஃபஹீமா தொடக்கக் கல்லூரியில் கல்வியைத் தொடர விரும்புகிறார்.
“எதிர்காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான தொழிலைத் தொடர ஆர்வமாக உள்ளேன்,” என்றும் தெரிவித்தார்.
வானம் எட்டும் விடாமுயற்சி
இயந்திரங்கள், அமைப்புகள், பொருள்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் இயல்பான ஆர்வம் கொண்ட திவேஷ்குமரன் சீனிவாசன் விமானத் துறையின் மீது தன் ஆர்வத்தைத் திருப்பினார்.
“ஆளில்லா வாகனங்கள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்குத் தேவையான கவனிப்பின் அளவு ஆகியவை என்னை மிகவும் ஈர்த்தது,” என்றார் சங்காட் சாங்கி உயர்நிலைப்பள்ளி மாணவரான திவேஷ்குமரன்.
தன்னை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்துடன் திவேஷ்குமரன் உயர்நிலை மூன்றில் தூய வேதியியல், தூய இயற்பியல் பாடங்களைப் படித்தார். இயற்பியல் பாடம் அவருக்குச் சவாலாக அமைந்து அவரை மனச்சோர்வடையச் செய்தது.
“மற்ற பாடங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்ட அளவுக்கு இயற்பியலுக்கு போதுமான அளவு தயாராகவில்லை என்பதை உணர்ந்தேன்,” என்றார்.
ஆசிரியர்களின் உதவி, வெற்றிபெற வேண்டும் என்ற விடாமுயற்சிடன் திவேஷ் இயற்பியல் பாடத்தில் முழு கவனம், கடின உழைப்பு செலுத்தி முதல்நிலைத் தேர்வில் A1 தரநிலையை எட்டினார்.
“இந்த மனப்பான்மையை நான் கல்விப் பயணம் முழுவதும் தொடர ஆசைப்படுகிறேன்,” என்று தெரிவித்தார் திவேஷ்.
இவ்வாண்டு சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் விண்வெளி மின்னணுவியலில் பட்டயக்கல்வி பயிலவுள்ளார் அவர். “என் மனத்திற்கு பிடித்தமான துறையில் பணிபுரிய வேண்டும் என்பதே என் குறிக்கோள்,” என்றார்.

