தூய்மை பற்றிய விழிப்புணர்வை வளர்த்த காணொளிப் போட்டி

தூய்மை பற்றிய விழிப்புணர்வை வளர்த்த காணொளிப் போட்டி

படம்: சுபலக்‌ஷ்மி

16 Nov 2026 - 6:10 am

2 mins read

சிங்கப்பூரின் தூய்மையைப் பராமரிப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்ற நோக்கத்துடன், பொதுச் சுகாதார மன்றம் அண்மையில் போட்டியொன்றை நடத்தியது.

‘மேக் த கட்: தூய்மைச் சிங்கப்பூர் காணொளிப் போட்டி 2026’ என்பது அதன் தலைப்பு.

அனைத்துலகப் பள்ளிகளிலிருந்து 106 மாணவர்கள் குழுக்களாக அனுப்பிய 42 காணொளிப் படைப்புகளில் 10 இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகின. சுற்றுச்சூழல் சார்ந்த தங்கள் அனுபவங்களை மாணவர்கள் படைத்த விதம் பார்வையார்களின் கவனத்தை ஈர்த்தது.

தொழில்நுட்பத்தைக் கடந்து, இளையர்கள் தங்கள் அனுபவங்கள் வழியாகத் தூய்மைச் சிங்கப்பூருக்கான செய்தியை நன்கு உணர்ந்து வெளிப்படுத்தியிருந்தனர்.

போட்டிக்கான காணொளிகளைத் தயாரித்த மாணவர்கள், தங்களது அனுபவம் வழி கற்றதாகக் கூறினர். வெற்றிபெற்ற மாணவருடன் சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (வலமிருந்து இரண்டாமவர்).
போட்டிக்கான காணொளிகளைத் தயாரித்த மாணவர்கள், தங்களது அனுபவம் வழி கற்றதாகக் கூறினர். வெற்றிபெற்ற மாணவருடன் சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (வலமிருந்து இரண்டாமவர்). - படம்: சுபலக்‌ஷ்மி

வாழ்நாள் முழுதும் தொடரும் நற்பழக்கம்

பள்ளிக் கழிப்பறையில் மாணவர் ஒருவர் வீசிச்சென்ற சிறு துண்டுத்தாள்கள் எவ்வாறு குவிந்து அந்த இடத்தை மாசுப்படுத்தின என்பதையும் மாணவர் ஒருவர் மறுநாளே எடுத்த பொறுப்பான செயலால் நிலைமை எப்படி மாறியது என்பதையும் சித்திரித்தது முதல் பரிசு வென்ற காணொளி.

அதனைத் தயாரித்த இயோ சூ காங் உயர்நிலைப் பள்ளிக் குழுவைச் சேர்ந்த 13 வயது ஜோசப் கிளாட்ஸ்டன் பிளசின், “அன்றாடம் செய்யும் சின்னஞ்சிறிய செயல்கள்கூட ஒட்டுமொத்தச் சமுதாயத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் பங்கேற்ற பிறகு, பொது இடங்களில் கவனத்துடனும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வோடும் நடந்துகொள்ளும் பழக்கத்தை வளர்க்க முனைந்துள்ளேன்,” என்றார்.

போட்டிக்காக மொத்தம் 42 காணொளிப் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவர்களுடன் சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (வலமிருந்து இரண்டாமவர்).
போட்டிக்காக மொத்தம் 42 காணொளிப் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவர்களுடன் சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (வலமிருந்து இரண்டாமவர்). - படம்: சுபலக்‌ஷ்மி

தூய்மை பாரமன்று

இரண்டாம் பரிசைத் தட்டிச்சென்ற ‘டிபிஎஸ்’ அனைத்துலகப் பள்ளி மாணவர்கள், அலட்சியமாக வீசப்படும் குப்பை காலில் சங்கிலியாக மாட்டிக்கொண்டு பெருஞ்சுமையாக மாறுவதைத் தங்கள் காணொளிக்கான கதையாக அமைத்திருந்தனர்.

விக்ரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல தவறு நம்மைப் பின்தொடர்ந்து உறுத்தும் என்பதைத் தம் குழுவினர் உருவகப்படுத்தியதாகக் குறிப்பிட்டார் சாய் ஷ்ரவண் மதன் பிரகாஷ், 15.

குப்பையைத் தனிமனிதர் பாரமாகப் பார்க்காமல் களமிறங்கிச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய 15 வயது ஆதவன் துரைமுருகன், “மற்றவர்கள் செய்த தவற்றை நாமும் வேடிக்கை பார்க்காமல், நாமே முன்வந்து அப்புறப்படுத்துவது உன்னதமான செயல்,” என்றார்.

காணொளியைத் தயாரித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட 15 வயது கார்த்திக் சரண் ஜீ, முன்பு போல் அல்லாமல் இப்போது பொது இடங்களின் தூய்மையை மாசுபடுத்தாமல் இருக்க முயலப்போவதாகக் கூறினார்.

“இப்போது சாலையில் கிடக்கும் சிறு காகிதம்கூட எனது கண்ணில் படுகிறது. ஒருமுறை தெரியாமல் கீழே போட்டுவிட்டாலும் உடனே என்னுள் குற்ற உணர்வு எழுகிறது. சிங்கப்பூரின் தூய்மை என்பது துப்புரவுப் பணியாளர்களின் வேலை மட்டுமன்று, அது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பும்தான்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தூய்மைசுற்றுச்சூழல்காணொளிபோட்டி