வெற்றியும் தோல்வியும் தலைசிறந்த ஆசான்கள்

சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் பலர். ஆர்வம் முட்ட பலர் சிறிய அளவில் தொடங்கும் தொழில்கள், வலுவற்ற அடித்தளமின்றி குறுகியகாலத்திலேயே முடங்கிப் போகின்றன.

வெற்றியும் தோல்வியும் தலைசிறந்த ஆசான்கள்

படம்: கெப்லன் பல்கலைக்கழகம்

05 Aug 2024 - 5:30 am

2 mins read

நன்கு ஆராய்ந்து, ஆயத்தமாகி ஒரு தொழிலைத் தொடங்கினாலும் சிலர் அதில் தோல்வியைச் சந்திப்பர். இருப்பினும், அதில் படிப்பினைகள் இருக்கலாம்.

கெப்லன் கற்றல் நிலையம் மூலமாக நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் 29 வயது வினோதரன் சந்திரமோகன் வர்த்தகத் துறையையும் தளவாடம், விநியோகச் சங்கிலித் துறையையும் பயின்று இவ்வாண்டு ஜூன் 29 ஆம் தேதி பட்டம் பெற்றார்.

ஆயினும், இந்த வெற்றியைக் காட்டிலும், தொடங்கி ஓராண்டிலேயே முடங்கிப்போன தன் வர்த்தகமே நல்ல பாடத்தைத் தனக்குக் கற்றுத்தந்ததாக வினோதரன் கூறினார்.

பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்ற, மாறுபட்ட வடிவங்கள் கொண்ட ஆடைகளை விற்கும் ‘ஓபீஸ்ட் கிளோத்திங் கோ’ (Obeast Clothing Co.) நிறுவனத்தைத் தொடங்கினார் இவர்.

“அழகான, புதுமையான ஆடைகளைப் பருமனான பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் விரும்புகின்றனர். ஆனால், இப்பிரிவினருக்கான கடைகள் அதிகம் இல்லை,” என்றார்.

தொடக்கத்தில் ‘வீ த பீப்பல்’ ஆடை வர்த்தகத்தின் கொள்முதலுக்குப் பொறுப்பேற்ற வினோதரன், இணைய ஆடை வர்த்தகங்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூடுதலாக ஆர்வம் கொண்டிருந்தார்

“இந்தப் பொறுப்பில் நான், பல்வேறு சிறிய தொழில்தொடங்கு நிறுவனங்களுடன் தொடர்புகளை அமைத்தேன். மூலதனம் அதிகம் இல்லை என்றாலும் வர்த்தகத் திட்டங்களின் புத்தாக்கத்தன்மையால் உரிய நிதி வந்து சேர்வதைக் காண்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“புதிய தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு அடித்தளமிடுவது ஊக்கமும் நம்பிக்கையும் தரும் தலைவர்கள். இவர்களது நேர்மறையான போக்கு எனக்குத் தெம்பை அளித்தது,” என்றார்.

பிறர் துணையின்றி ஆடை வர்த்தகத்தைத் தொடங்கிய வினோதரன், தேசிய சேவையிலிருந்து சேமித்த பணத்தை மூலதனமாகப் பயன்படுத்தினார்.

“டி-சட்டைகளை வடிவமைப்பது முதல் வர்த்தக இணையத்தளத்தை உருவாக்கிச் சமூக ஊடகங்களில் விளம்பரங்களைச் செய்வது வரை நானே அனைத்தையும் செய்தேன். கற்பதற்கு அதிக காலமின்றி கவனத்துடன் செயல்பட வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

புது வீடு வாங்குவதற்கும் திருமணம் செய்வதற்கும் பணம் தேவைப்பட்டதால் ஓராண்டுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

“வர்த்தகத்தை நிறுத்திவைக்கும் முடிவு கடினமானது. என்றாலும் நான் இருந்த சூழலுக்கேற்ற முடிவைத்தான் எடுத்தேன்,” என்றார்.

தற்போது காலணித் துறையிலுள்ள ‘கோட்’ (GOAT) நிறுவனத்தில் நிர்வாகியாகச் செயல்படுகிறார்.

இப்போதிருக்கும் நிலை குறித்து தான் மகிழ்வதாகக் குறிப்பிட்ட அவர், மனைவி யேன்-ரூவுக்கும் மற்ற அன்புக்கு உரியவர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தன் கனவை இன்னும் கைவிடாமல் நம்பிக்கையுடன் இருக்கிறார் வினோதரன்.

குறிப்புச் சொற்கள்
நிறுவனம்வர்த்தகம்ஆடைபல்கலைக்கழகம்