துன்பம் நேர்ந்தபோதெல்லாம் இசையையே அடைக்கலமாகத் தான் கருதியதாக 19 வயது தார்மின் தனராஜன் கூறினார்.
சுருதி விலகாது தனது இதமான குரலில் பாடியவாறு மடியில் கித்தாரைத் தாங்கிப் பிடித்து மீட்டியபோது இந்த இளவயதிலும் இவரது படைப்பாற்றல் புலப்பட்டது.
இசையின்பால் பல ஆண்டுகளாக இவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் ஆர்வமும் பேச்சிலேயே வெளிப்பட்டன.
தனது வாழ்க்கையில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ‘டூ லேட்’ என்ற பாடலை முதன்முதலாக எழுதினார் தார்மின். அப்போது அவருக்கு 13 வயது.
“துன்பம் நேர்கையில் என் விரல்கள் இயல்பாகவே பியானோவை நாடி வாசிக்கும்,” என்கிறார் தார்மின். வாசிக்க வாசிக்க தன்னை வருத்திய எண்ணங்கள் மெல்லத் தணிந்ததாக அவர் சொன்னார்.
குழப்பம் எழுந்தபோது தன்னை நிதானித்துச் சமாளிக்க இசையைப் பயன்படுத்தினார் தார்மின்.
இருப்பினும், தனது மனநலத்தை மேலும் நன்கு பேண ஓர் உளவியலாளரின் உதவியையும் இவர் நாடினார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ‘டூ லேட்’ பாடல் இவரது இசைப் பயணத்தின் அடித்தளமாக விளங்குகிறது. தபேலா இசையுடன் ஒலிக்கும் அந்தப் பாடல், இந்திய பாரம்பரியத்தின் பல கூறுகளைத் தன் படைப்பில் இணைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார் தார்மின்.
தொடர்புடைய செய்திகள்
இசையே அடையாளம்
“என் அடையாளத்தின் பெரும்பகுதியாக எனது பண்பாடு இருக்கிறது. அது எனது இசையில் வெளிப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்கிறார் தார்மின்.
பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் இவரது முதல் இசைப்படைப்பு, அவரது வளர்ச்சியை ஒரு பாடகராகவும் இசை அமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் காட்டவல்லது.
சிறுவயது முதல் ‘ஓப்ரா’ பாடிப் பயிற்சி செய்ததால், தன் சகாக்களைக் காட்டிலும் தார்மினின் குரல் வேறுபட்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக இசைத்துறையில் இவர்தம் தொழிலை அமைத்திட, அவரது குடும்பத்தாரும் பேராதரவு வழங்கி உறுதுணையாக இருந்தனர்.
சிங்கப்பூர் தேசிய அணியில் ஓட்டப்பந்தய வீரராக உள்ள இவரின் மூத்த சகோதரர், தார்மினுக்கு ஒழுக்கத்தையும் மீள்திறனையும் கற்றுக் கொடுத்தார்.
இளையர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆர்வம் கொண்ட தார்மின், “உங்கள் திறமையை வெளிப்படுத்த துணிச்சல் மிக அவசியம். துணிந்து எடுக்கும் எந்த முயற்சியையும் பிறர் தாழ்த்திப் பேச முடியாது,” என்கிறார்.
மனநலப் பிரச்சினைகளுடன் போராடும் இளையர்களுக்கும் தார்மின் எளிதான அறிவுரை கூறிக்கொள்ள விரும்புகிறார்.
“அன்பாகப் பேசுபவர்களை உங்கள் நட்பு வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை அவர்கள் உயர்த்த வேண்டுமே தவிர தாழ்த்தக்கூடாது. மனநிறைவு தரும் செயல்களில் ஈடுபட்டால் வாழ்க்கையில் பெருமாற்றத்தைக் காண முடியும்,” என்கிறார் இவர்.
உள்ளூர் கலைஞர்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் இவர் வலியுறுத்துகிறார்.
“இதற்கு அதிகம் தேவையில்லை. நிகழ்ச்சிகளுக்கு நுழைவுச்சீட்டுகளை வாங்குவது, பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்வது அல்லது ‘லைக்’ போடுவதுகூட மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார்.
தனது திறனைத் தொடர்ந்து செம்மைப்படுத்துவதுடன் சமகால இசையுடன் தமிழன் என்ற தனது வேர்களை இணைப்பதில் உறுதியுடன் இருக்கிறார் இவர்.

