சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்கள் எவ்வாறு இணைந்து தீர்வுகாண முடியும்?
இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடும் வாய்ப்பாக அமைந்தது 11வது சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றம் 2026.
அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ‘ரீச்’ ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி அக்டோபர் 17, 18, 24ஆம் தேதிகளில் நடைபெற்றது.
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 120க்கும் மேற்பட்ட இளையர்கள் அதில் பங்கேற்று, நாடாளுமன்ற விவாதங்கள், கொள்கை உருவாக்கத்தில் உள்ள சவால்கள், சமரசங்கள் குறித்து அறிந்துகொண்டனர்.
நிதிசார் விழிப்புணர்வும் சமுதாய அக்கறையும்
பள்ளிப் பருவத்திலிருந்தே பொருளியலிலும் கணக்கியலிலும் ஆர்வம் கொண்ட 18 வயது சூரப்பன் கிஷோர், நிதியியல் அறிவு மக்களின் அன்றாட வாழ்க்கையுடனும் சமூகக் கொள்கைகளுடனும் எவ்வாறு தொடர்புடையது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல் துறையில் பயின்று வருகிறார்.
அரசாங்கம் ஒரு வரவுசெலவுத் திட்டத்தை அறிவிக்கும்போது, அதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, அந்த நிதி எந்தச் சமூகச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையாவது பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து.
தெருவோரங்களில் பாடும் கலைஞர்களையும் (buskers), மறுசுழற்சிக்காக அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் முதியவர்களையும் பார்த்த தருணங்களே தமக்குள் சமூகச் சிந்தனையை விதைத்ததாகக் கூறும் கிஷோர், மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன மாநாடு, மாதிரி நாடாளுமன்றத் திட்டம் போன்றவற்றில் பங்கேற்று, தமது பார்வையை விரிவுபடுத்தியுள்ளார்.
குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்மூலம், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றுக்கான தீர்வுகளை ஆராயவும் கற்றுவருவதாக அவர் கூறினார்.
அமெரிக்க, பிரிட்டானிய நாடாளுமன்றங்களைப்போலச் சிங்கப்பூர் முறை காரசாரமாக இருக்காது என்று தொடக்கத்தில் கருதியபோதிலும், மாதிரி நாடாளுமன்றத்தில் பங்கேற்ற பிறகு நாட்டின் நன்மையைக் கருத்தில்கொண்டு எதிர்த்தரப்பினருடன் இணைந்து செயல்படும் சிங்கப்பூரின் கூட்டமைப்பு முறை எவ்வளவு பயனுள்ளது என்பதைத் தாம் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
“ஒரு பிரச்சினையைப் பற்றி நமக்கு வலுவான கருத்து இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கும் அவர்களுடைய நம்பிக்கைகளும் கருத்துகளும் இருக்கும். ஆரோக்கியமான குடியரசில், இரு தரப்பினரும் விவாதித்து, நாட்டுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது,” என்கிறார் கிஷோர்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கணக்கியல் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்துப் பேசிய இவர், இளையர்கள் நிரலாக்கம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வதோடு, மனிதவியல் பாடங்களிலும் கவனம் செலுத்தி தங்களது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் வாழ்க்கைச் செலவினங்களுக்கும் இடையே இளையர்கள் எதிர்கொள்ளும் கவலைகளை அரசாங்கம் கனிவோடு கேட்டறிந்து, வேலைவாய்ப்புப் பாதுகாப்பை உறுதிசெய்யும் அறிவார்ந்த கொள்கைகளை வகுக்க வேண்டும்,” என்றும் கிஷோர் வலியுறுத்தினார்.
வகுப்பறையைத் தாண்டிய பார்வை
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பகாலக் குழந்தைப்பருவ மேம்பாட்டுப் பாடப்பிரிவில் பயின்றுவரும் 19 வயது ரோஹினி டெரன்சுக்கு பொதுக் கொள்கை, அரசியல், அரசதந்திரம் ஆகியவற்றிலும் ஆர்வம் உள்ளது.
2025ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற மாதிரி ஆசியான் மாநாட்டில் செயலாளராகப் பணியாற்றியபோது, இளையர்கள் சமூகப் பிரச்சினைகள் குறித்துத் துணிவுடன் விவாதிப்பதை ரோஹினி கவனித்தார்.
தாமும் தமது கருத்துகளைச் சமுதாயத்தில் முன்வைக்க வேண்டும் என்ற விருப்பம் அப்போது ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வாண்டின் சிங்கப்பூர் மாதிரி நாடாளுமன்றத்திற்காகத் தமது குழுவினருடன் கலந்துரையாடி, பொதுக் கொள்கை தொடர்பான கட்டுரைகளையும் காணொளிகளையும் ரோஹினி நுணுக்கமாக ஆய்வு செய்தார்.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கொள்கை உருவாக்கம் என்பது வெறுமனே ஒரு தீர்வை முன்வைப்பதுடன் முடிவதில்லை என்பதை இவர் உணர்ந்தார்.
பல்வேறு தரப்புக் கருத்துகளைச் செவிமடுத்து, அவற்றின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, ஏற்ற தீர்வை உருவாக்க பொறுமையும் ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.
“ஒருவரின் கொள்கையுடன் நாம் உடன்படவில்லை என்பதால் அவரைப் பிடிக்கவில்லை என்று கருதிவிடக்கூடாது. மனிதர்களுக்கு இடையிலான முரண்களைத் தாண்டி, அந்தக் கொள்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதுதான் முக்கியம்,” என்கிறார் ரோஹினி.
தமது இந்தியப் பின்னணி, சமயம், சமூக அடையாளம் குறித்தும் வெளிப்படையாகப் பேச விரும்பும் இந்த இளையர், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் பொதுவாழ்வில் உயரிய பொறுப்புகளை வகிப்பது தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டும் இளையர்கள், முதியவர்கள் உள்ளிட்டோரின் தேவைகளைக் கருத்தில்கொண்டும் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இவரது நிலைப்பாடு.
குழந்தைகளின் குடும்பங்களுடனும் சமூகத்தினருடனும் இணைந்து செயல்பட வேண்டிய கல்வித்துறை அனுபவம், பிறரது தேவைகளைப் புரிந்துகொள்ள உதவும் என்று இவர் நம்புகிறார்.
மாதிரி நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை நல்கிய ரோஹினிக்கு ‘நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என மிகவும் எதிர்பார்க்கப்படுவர்’ என்னும் விருது வழங்கப்பட்டது.
“நாம் அனைவரது ரத்தத்தின் நிறமும் சிவப்பே. ஆனால், அதனை உணர்ந்துகொள்ள நாம் ஏன் காயப்பட வேண்டும்? இன்று நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத் தலைமுறையினரைப் பாதிக்கும். நாம் கடந்து சென்ற பிறகும் வரவிருக்கும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் இப்போதே சிந்திக்க வேண்டும்,” என்று ரோஹினி அக்கறையுடன் சொன்னார்.
