இளவயதிலிருந்தே பிறருக்கு உதவ வேண்டுமென்ற மனப்பான்மை கொண்டவர் மிச்சல் யோகேன்.
தொடக்கப்பள்ளியிலிருந்தே தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் மிச்சல், மலேசியா, கம்போடியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சிங்கப்பூர் தொண்டூழியர்கள் பெரும்பாலானோர் உள்ளூர் அல்லது தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று தொண்டு புரிவதை அறிந்த 32 வயது மிச்சல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் மக்களுக்குக் கைகொடுக்க விரும்பினார்.
ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டு மக்களுக்குக் கைகொடுத்து வரும் மிச்சல், கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்தவாறே அங்கிருக்கும் மக்களுக்கு உதவி வருகிறார்.
“என் தோழியின் கணவர் உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர். ஆப்பிரிக்க மக்களுக்கு உதவ விரும்புவதாக அவரிடம் நான் கூறினேன். அவர் எனக்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தந்தார்,” என்றார் மிச்சல்.
சிங்கப்பூரில் ‘கிஃப்ட் சான்ஸ் ஆ’ (Gift Chance Ah) எனும் சமூக அமைப்பை நடத்தி வரும் மிச்சல், அதன் மூலம் நிதி திரட்டி உகாண்டா மக்களுக்குச் சேவை புரிந்து வருகிறார். சிறார் கல்வி, பெண்கள் நலம் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறார் இவர்.
‘லவ் அன்வெய்ல்டு மினிஸ்டிரிஸ்’ (Love Unveiled Ministries) எனும் உகாண்டா சமூக அமைப்புடன் மிச்சல் கைகோத்துள்ளதன்வழி சிங்கப்பூரில் திரட்டப்படும் நிதி அங்கிருக்கும் மக்களைச் சென்றடைகிறது.
“வசதி குறைந்த கிராமங்களைச் சேர்ந்த உகாண்டா நாட்டுப் பெண்கள் பெரும்பாலானோருக்கு மாதவிடாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது,” என்று வருத்தத்துடன் கூறினார் மிச்சல்.
தொடர்புடைய செய்திகள்
அதனால், இவர் நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு கரும்பு நார்களால் செய்யப்பட்ட அணையாடைகளை (sanitary napkins) அங்கிருக்கும் பெண்களுக்கு வழங்கும் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
மேலும், பள்ளிக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களும் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தெரிந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள் தவிர இணையத்தளத்தின் மூலமாகவும் நிதி திரட்டி வரும் மிச்சல், இதுவரை கிட்டத்தட்ட $9,000 நிதி திரட்டியுள்ளார்.
“நிதி திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. நான் முன்பு கேட்டவரிடமே மீண்டும் சென்று நன்கொடை கோர முடியாது. ஒருவர் தாமே மனமுவந்து ஆர்வத்தோடு நன்கொடை அளிக்க முன்வர வேண்டும்,” என்றார் மிச்சல்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் பயனர் அனுபவப் பொறியாளராகப் பணியாற்றும் மிச்சல், ஆப்பிரிக்கா சென்றதில்லை என்றாலும், இவர் அடுத்த ஆண்டு அங்கு சென்று தம் தொண்டுவழி பயன்பெறும் உகாண்டா மக்களைக் காண விரும்புவதாகக் கூறினார்.
இவர் தற்போது சென்னையிலும் சமூக அமைப்பு ஒன்றோடு இணைந்து சேவை புரிய முனைந்துள்ளார்.

