தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்க்க உதவிய பயிலரங்கு

2 mins read
b82e79c3-bc1d-4f71-8d69-d85123a464bf
பயிலரங்கின் முதல் நாளன்று மாணவர்களுடன் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் ஜாலான் புசார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான ஜோசஃபின் டியோ. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

டிசம்பர் மாத விடுமுறையின்போது கிரேத்தா ஆயர்-கிம் செங் அடித்தள அமைப்புகள் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவப் பயிலரங்கில் தொடக்கநிலை மூன்று முதல் உயர்நிலை மூன்று வரை படிக்கும் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இருவழித்தொடர்பு அமர்வுகளின்வழி மாணவர்களிடையே தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இப்பயிலரங்கு, சிங்கப்பூர் கடன்பற்று நிர்வாக அமைப்பு, ஹாலோஜன் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன் டிசம்பர் 2, 3 தேதிகளில் நடைபெற்றது.

“இளம் வயதிலேயே தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க விரும்பினோம். அதன்வழி அவர்கள் தங்கள் பள்ளியிலும் வீட்டிலும் பணியிடத்திலும் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி மற்றவர்களைச் சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் ஜாலான் புசார் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான ஜோசஃபின் டியோ.

இந்தப் பயிலரங்கு, கல்விக்கு ஆதரவளிக்கும் தங்களின் கடந்தகால முயற்சிகளைக்‌ கருத்தில் கொண்டதுடன் கல்விக்கு அப்பால் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

தொடக்கநிலை மூன்று முதல் ஆறு வரை பயிலும் மாணவர்கள் நாடகம், பாத்திரமேற்று நடித்தல் ஆகியவற்றின்வழி தங்களின் குழுப் பணித்திறனையும் தலைமைத்துவப் பண்பையும் வளர்த்துக்கொள்ள ‘ஹீரோஸ் ஆஃப் ஹாலோ ஐலண்ட்’ (Heroes of Halo Island) என்னும் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

ஆக்கபூர்வமான விதத்தில் சிக்கல்களைத் தீர்க்கவும் திட்ட நிர்வாகத் திறன்களை வளர்த்துக்‌கொள்ளவும் உயர்நிலை ஒன்று முதல் மூன்று வரையிலான மாணவர்கள் ‘தலைவர்களுக்கான திட்டப்பணி நிர்வாகம்’ பயிலரங்கில் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களில் இருவரான ஊட்ரம் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அனஸ்டாசியா ஈவ் பிரேம் குமார், 13, கெண்டன்மண்ட் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அவரின் சகோதரரான சைரஸ் லூசியானோ பிரேம் குமார், 12, இருவரும் தங்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள பயிலரங்கில் கலந்துகொண்டதாகச் சொன்னார்கள்.

“ஒரு தலைவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் அதன்வழி மற்றவர்கள்மீது சிறந்த தாக்‌கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். இவற்றை புதிர்கள், நடனம் போன்ற நடவடிக்கைகளின்வழி கற்றுக்கொண்டேன்,” என்று அனஸ்டாசியா பகிர்ந்துகொண்டார்.

மற்றொரு பங்கேற்பாளரான சி.எச்.ஐ.ஜே.உயர்நிலைப்பள்ளி (தோ பாயோ) மாணவரான 14 வயது நலேஷா சரவணேஷ்வரன், ஆரம்பத்தில் தனக்கு இப்பயிலரங்கில் சேரத் தயக்கம் இருந்ததாகவும் அவரின் தாயார் ஊக்குவித்ததால் பயிலரங்கில் கலந்துகொண்டு அதன் மதிப்பை உணர்ந்துகொண்டதாகவும் சொன்னார்.

“நான் புதிய நண்பர்களைப் பெற்றுக்கொண்டதுடன் தலைமைத்துவப் பண்புகளைப் பற்றியும் கற்றுக்கொண்டேன்.

“வருங்காலத்தில் நான் பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொடக்கக்கல்லூரியில் சேரும்போது வெவ்வேறு பொறுப்புகளை ஏற்க நேரலாம். அதற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள இப்பயிலரங்கு எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்