உத்தரப் பிரதேசத்தில் சிங்கப்பூர், ஜப்பான் ரூ.1.11 லட்சம் கோடி முதலீடு: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சிங்கப்பூர், ஜப்பான் ரூ.1.11 லட்சம் கோடி முதலீடு: யோகி ஆதித்யநாத்

2 mins read
a95b6a0f-1b63-401a-bfd7-edfac705d8ff
யோகி ஆதித்​ய ​நாத். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: அண்மையில் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.1.11 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்​ய ​நாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரு நாடுகளிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் சென்றடைந்த முதல்வர் யோகிக்கு அங்கு நெற்றியில் திலகமிட்டு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அவரது பயணத்தின் முதல் நாளில் முன்னணி முதலீட்டு நிறுவனமான மிட்​சுய் அண்ட் கோ நிர்​வாகத்​தினரை முதல்​வர் யோகி சந்​தித்​தார். அப்போது உத்தரப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விரிவாக விவரித்தார்.

குறிப்பாக, புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, சூரிய சக்​தி, உயிரி ஆற்​றல், பசுமை ஹைட்​ரஜன் மற்​றும் எரிசக்தி சேமிப்புத் திட்டங்​கள் ஆகிய நான்கு துறை​களில் சிறந்த முதலீட்டு வாய்ப்​பு​களை உத்தரப் பிரேதச அரசு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

மேலும், இந்தி​யா​வின் ஆகப்​பெரிய நுகர்​வோர் சந்​தை​யாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில் சிறந்த இணைப்​பு, சிறந்த வழித்​தடங்​கள், விரைவுச் சாலை வலை​யமைப்பு, தொழில்துறை வாய்ப்பு​கள் என முதலீட்​டாளர்​களுக்கு மிக​வும் சாதக​மான சூழல் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

வெளி​நாட்டு நிறு​வனங்​கள் முதலீடு செய்​யத் தேவையான அனைத்து வசதி​களையும் உதவிகளையும் வழங்க தமது அரசு தயாராக உள்ளதாக முதல்வர் யோகி உறுதியளித்ததை அடுத்து, பல்​வேறு ஜப்​பானிய நிறு​வனங்​களு​டன் சுமார் ரூ.11,000 கோடி மதிப்​புள்ள புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​யின.

குபோடா கார்ப்​பரேஷன், மிண்டா கார்ப்​பரேஷன், ஜப்​பான் ஏவி​யேஷன் எலக்ட்​ரானிக்ஸ் இண்டஸ்ட்ரி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் சிங்​கப்​பூர் நிறு​வனங்​கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்