இரட்டையரின் இரட்டிப்பு மகிழ்ச்சி
தொடக்கக் கல்லூரியில் படித்தபோது ‘தில்லுமுல்லு’ திரைப்படம்போல நண்பர்கள் ஸ்ருதியின் முகத்திலுள்ள மச்சத்தை வைத்துத்தான் அடையாளம் காண்பர் என நினைவுகூர்ந்தனர் 23 வயதாகும் ஸ்வாதி குமார், ஸ்ருதி குமார் இரட்டையர்.
ஒருமுறை அவர்கள் இடம்மாறி அமர்ந்தபோதுகூட நண்பர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் அமரும் இடத்தில் பெயர்ப் பலகைகள் இருப்பதால் அந்தப் பிரச்சினை இல்லை என்று அவர்கள் கூறினர்.
ஸ்வாதியைவிட ஒரு நிமிடம்தான் மூத்தவர் ஸ்ருதி!
அவர்கள் இருவரும் உயர்நிலை மூன்று வரை ஒரே வகுப்பில் படித்தனர். அதன்பின்பும் ஒரே தொடக்கக் கல்லூரியில், ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஸ்ருதி உளவியல் படித்தார். ஸ்வாதி உயிர்மருத்துவப் பொறியியல் படித்தார்.
“மக்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், எதனால் ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்படுகிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பியதால் உளவியல் படித்தேன்,” என்றார் ஸ்ருதி.
“எனக்கு அறிவியல் பிடிக்கும். அதன் தொடர்பில் புத்தாக்கங்களை உருவாக்கப் பிடிக்கும்,” என்றார் ஸ்வாதி.
தொடர்புடைய செய்திகள்
தாயாருக்கு ஒருமுறை உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டபோது சகோதரிகள் அஞ்சினர். “நல்ல வேளை அது பெரிய பிரச்சினையாக இல்லை. அதைத் தொடர்ந்து மருத்துவம் பற்றி மேலும் அறிந்துகொள்ள எங்களுக்கு நாட்டம் வந்தது,” என்றார் ஸ்வாதி.
இருவருக்கும் டியூக் - என்யுஎஸ் மருத்துவப் பள்ளிக்கு விண்ணப்பிக்கும் யோசனை ஒரே நேரத்தில் தோன்றியது.
“தொடக்கத்தில் எங்கள் பெற்றோர் நம்பவில்லை. ஆனால், நாங்கள் மருத்துவமனையில் வேலை அனுபவப் பயிற்சி (job shadowing) மேற்கொண்டதையும் மருத்துவத் தொண்டூழியம் செய்ததையும் கண்டு நாங்கள் இதில் தீவிரமாக இருப்பதை உணர்ந்து ஆதரித்தனர்,” என்றார் ஸ்ருதி.
இருவரும், வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சலுகை விலையில் மருத்துவப் பராமரிப்பு வழங்கும் ‘ஹெல்த்சர்வ்’ நிறுவனத்தில் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை, மாதம் ஒருமுறை தொண்டு புரிந்தனர்.
சிங்கப்பூரிலுள்ள ஜினெசிஸ் பள்ளியுடன் இணைந்து சிறப்புத் தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்காக ‘புரோஜெக்ட் மியூசிக் கேர்’ எனும் இசைப் பயிற்றுவிப்புத் திட்டத்தையும் நடத்தினர்.
இருவரும் எட்டு வயதிலிருந்து இசை கற்று வந்தனர். சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் வயலின், வாய்ப்பாட்டு இரண்டிலும் பட்டயம் பெற்றுள்ளனர்.
கர்நாடக சங்கீதத்தில் ‘அனைத்திந்திய வானொலி நிலையம் சென்னை’யின் ‘பி கிரேட்’ கலைஞர்கள் இவர்கள்.
“மீடியாகார்ப்பின் ‘கலை யாத்திரை’ நிகழ்ச்சி மூலம் சென்னைக்குச் சென்றபோது சிறப்புத் தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கான பள்ளி ‘ராசா’வுக்கும் (RASA) செல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எங்கள் இசையறிவைப் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் தோன்றியது,” என்று கூறினர் சகோதரிகள்.
“MCAT ஏழரை மணி நேரத் தேர்வு. மிகவும் கடினமாக இருந்தது. ஒருவருக்கு மட்டும் மருத்துவப் பள்ளி கிடைத்து, இன்னொருவருக்குக் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. நல்ல வேளை இருவருக்கும் கிடைத்தது,” என்றார் ஸ்ருதி.
இருவருக்கும் ஒரே நேரத்தில் மருத்துவப் பள்ளிச் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் கல்விக் கடன் அவர்களுக்கு உதவும்.
எதிர்காலத்தில் இருவரும் இசைமூலம் மருத்துவ சிகிச்சை பற்றி ஆய்வு செய்ய இலக்கு கொண்டுள்ளனர்.
தந்தையை மனத்தில்கொண்டு துறை மாற்றம்
பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவியாக டானியா இருந்தபோது, அவருடைய தந்தை திடீரென மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இதயநோய் இருப்பது தெரியவந்தது.
அப்போது இதயநோய் பற்றித் தெரிந்துகொள்ளப் பல நூல்களைப் படித்ததாகக் கூறும் டானியா சடடோபாத்யாய், 30, “என் தந்தையின் இதயம் பலவீனமாக இருந்ததால் நான் நிறைய நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டியிருந்தது. முன்பெல்லாம் நாங்கள் சேர்ந்து பூப்பந்து விளையாடினோம். ஆனால் அத்தகைய விளையாட்டுகளில் இனி ஈடுபடக்கூடாது, படிகளில் ஏறக்கூடாது, விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்,” என்றார்.
டானியா மூன்றாம் ஆண்டு படித்தபோது தந்தை மாரடைப்பினால் காலமானார்.
“என் தந்தைக்கு நீரிழிவு நோயும் இருந்தது. இவை தடுக்கக்கூடிய நோய்கள். நம் இன்றைய வாழ்க்கைமுறையால் வந்தவை. இத்தகைய நோய்கள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவராக விரும்பினேன்,” என்றார் டானியா.
“ஆனால், குடும்பத் தலைவரை இழந்த சோகம் ஒருபுறம், என் கல்விக் கடன், தாயாரின் வீட்டுக் கடன் ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் வேலைக்குச் சென்றேன். அப்படியே ஏழு ஆண்டுகள் மென்பொருள் பொறியாளராகக் கடந்தன,” என்றார் அவர்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், பேபால், மெட்டா, கேன்வா போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் இவர்.
திருமணமும் நடந்தது. தன் கணவருடன் ‘தி நோட்வே’ எனும் சட்டை அச்சிடும் நிறுவனம், ‘ஹார்ட்டி ஸ்பைசஸ்’ எனும் மஞ்சள்தூள் மசாலாப் பொடி வர்த்தகம், ‘ஸ்ட்ரீக்ஸ் அண்ட் ஸ்ட்ரோக்ஸ்’ ஓவியக் கலைக்கூடம் (art jamming and painting) எனச் சில வர்த்தகங்களையும் தொடங்கினார் டானியா. தன் மென்பொருள் நிபுணத்துவம் மூலம் அவற்றின் செயல்பாடுகளைச் சீராக்கி, வருமானத்தை அதிகரித்தார்.
2023ல் தன் கணவர், கைக்குழந்தையுடன் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து ‘கேன்வா’ நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியபோதுதான், அங்கிருந்த கலாசாரம் அவர் தனக்கே போட்டுவைத்திருந்த சுவர்களைக் கடந்து சிந்திக்கத் தூண்டியது.
“என் கணவரும் தொழில்முனைவர் என்பதால் அவரும் எனக்கு ஒரு முன்னுதாரணம். அதனால், மருத்துவம் படிக்கும் என் நீண்ட நாள் கனவை நனவாக்கலாமெனத் துணிச்சலாக முடிவெடுத்தேன்.
“என் கணவரிடம் கூறியபோது அவர் முதலில் வியந்தார். ஆனால் என் தீர்மானத்தை முழுமனத்துடன் ஆதரித்தார். நான் MCAT எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத 2024 ஜனவரியில் தயார்செய்யத் தொடங்கினேன். வேலை முடித்தபின்பும் வார இறுதிகளிலும் படிப்பேன். என் கணவரும் தாயாரும் மகனைப் பார்த்துக்கொண்டனர்,” என்றார் டானியா.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளிக்குத் தேர்வுசெய்யப்பட்டதுடன் அவருக்கு ‘டீன்ஸ்’ உபகாரச் சம்பளமும் கிடைத்துள்ளது.
“நற்செய்தியைக் கேட்டதும் எங்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையாக இருந்தது,” என்றார் டானியாவின் கணவர் செந்தில்குமார் சுப்பிரமணியன்.
சென்ற ஜூலை மாதம் தன் மருத்துவப் படிப்பைத் தொடங்கிய டானியா, படிப்பையும் மகனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஒருசேரச் சமாளிக்கிறார். “குடும்பத்தினர் கைகொடுப்பதால் அது சாத்தியமாகிறது,” என்றார் டானியா.
எதிர்காலத்தில் மருத்துவராக மட்டுமின்றி மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிய விரும்புகிறார் டானியா. “என் மென்பொருள் அறிவைக் கொண்டு அறுவை சிகிச்சைகளில் இயந்திரங்களின் பயன்பாடு போன்றவற்றில் ஆய்வு செய்ய விரும்புகிறேன்,” என்றார் அவர்.