துள்ளியாடும் கல்விமான்கள்

துள்ளியாடும் கல்விமான்கள்

9 mins read
சிங்கப்பூரின் கலைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், புத்தம்புது பரிமாணங்களை எட்டவும்  அரும்பும் திறனாளர்கள் உழைத்து வருகின்றனர். இத்தகையோரில் மூவர், 2026 தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளம் பெற்ற கல்விமான்களாக உருவெடுத்து, கனவுகளுடன் தங்கள் கலைப்பயணத்தைத் தொடர்கின்றனர்.
0e120717-fa91-4501-ab88-1acf0c1b5139
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் மேடைக் கலைஞராகப் பங்கேற்கிறார் 21 வயது தார்மின் தனராஜன். - படம்: ரசல் வோங்
Google News Preferred Icon

சிங்கப்பூர்க் கலைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அதில் புதிய பரிமாணங்களை உருவாக்கவும் இளையர்கள் பலர் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், இசை, இலக்கியம், கணினித் தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட மூன்று துறைகளில் முத்திரை பதித்துவரும் நம்பிக்கைக்குரிய கலைஞர்களை இவ்வாண்டுக்கான தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளம் ஒன்றிணைத்துள்ளது.

தங்கள் துறைகளில் உள்ள சவால்களைத் தாண்டி, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்துவரும் அம்மூவரும் தங்கள் மேல்படிப்பைத் தொடர இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.

மேற்கத்திய இசையில் தமிழ் அடையாளம்

21 வயது பாடகரும் கலைஞருமான தார்மின் தனராஜன்.
21 வயது பாடகரும் கலைஞருமான தார்மின் தனராஜன். - படம்: லீ ஜெ ஃபெங்

ஏழு வயதிலேயே இசைமீது தீராக் காதல் கொண்டிருந்தார் தார்மின் தனராஜன். குடும்பத்துடன் காரில் சென்றபோதெல்லாம் வானொலியில் ஒலித்த தமிழ்ப் பாடல்களைக் கேட்டதே இசையுடனான முதல் அறிமுகமாக இவருக்கு அமைந்தது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் மணிக்கணக்கில் இசைக்கருவி வாசிப்பதும், வசந்தம் தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சிகளைப் பார்த்து அண்ணனுடன் நடனமாடுவதும் இவரது அன்றாடப் பழக்கமாக இருந்தது.

அன்று இசைமீது கொண்ட அந்த ஈடுபாடுதான், இன்று 21 வயது தார்மினை தேசிய தின அணிவகுப்பு, இஸ்தானாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி, ‘பேபீட்ஸ்’ எனப் பல பிரம்மாண்டமான மேடைகளில் பாடவைத்து, முத்திரை பதிக்கச் செய்துள்ளது.

மேற்கத்திய செவ்விசை ஓபரா பயிற்சி பெற்ற இவர், தற்போது பாப் இசையில் கால்பதித்து வரும் இளம் பாடகர். தேசியக் கலை மன்றமும் சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கிய கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள தார்மின், லாசால் கலைக் கல்லூரியில் இசை வணிகத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரவுள்ளார்.

சொந்தக் கதைகளை இசையாக்கும் ஆர்வம்

தார்மினின் இசைப் பயணம் 12 வயதில் பாடல்கள் எழுதும் ஆர்வத்துடன் புதிய பரிமாணத்தை எட்டியது. தமது 15 வயதில் பிறந்தநாள் பரிசாக ஒலிப்பதிவுக் கருவிகள் கிடைத்தவுடன் தாமாகப் பாடல்களைப் பதிவுசெய்யத் தொடங்கினார்.

பதற்றம், மனச்சோர்வு எனத் தாம் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அவர் எழுதி, தாமாக இசையமைத்த ‘‌ஷேக்கிங்’ என்ற முதல் பாடல் 2020ல் வெளியானது.

“மேடையில் பாடும்போது வெவ்வேறு பின்னணியைக் கொண்ட மக்களை ஒன்றிணைக்க முடிகிறது. என் பாடல்களைக் கேட்கும்போது அவர்களுக்கு ஓர் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்பதே என் முக்கிய நோக்கம்,” என்கிறார் தார்மின்.

தேசியத் தொடக்கக் கல்லூரியில் பயின்ற காலத்தில் இசைக்கான முறையான சான்றிதழ்கள் இல்லாததால், தொடக்கத்தில் இசை வகுப்புகளில் அதிகாரபூர்வமாக அவரால் சேர முடியவில்லை. ஆயினும், அவரது ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர்கள் அவரை ஈராண்டுகள் இசை வகுப்பின் பின்பகுதியில் அமர்ந்து கற்றுக்கொள்ள அனுமதித்தனர்.

அதன்பிறகு ‘ஏ’ நிலைத் தேர்வில் இசையை ஒரு பாடமாக எடுத்து, மேற்கத்திய ஓபரா குரலிசையுடன் வயலின், கித்தார், பியானோ வாசிக்கவும் இவர் கற்றுக்கொண்டார்.

பண்பாட்டைப் பறைசாற்றும் தனித்துவ அடையாளம்

சிங்கப்பூரின் ஆங்கில இசைத்துறையில் தடம் பதிக்கும் ஒரு சில தமிழ்க் கலைஞர்களில் இவரும் ஒருவர். தன்பாலின ஈர்ப்புச் சமூகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர்த் தமிழரான இவர், தமது படைப்புகளில் தமிழ் அடையாளத்தை நிலைநிறுத்துவதில் தனிச்சிறப்பு பெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் ஆங்கில இசைத்துறையில் தடம்பதிக்கும் ஒரு சில தமிழ்க் கலைஞர்களில் தார்மினும் ஒருவர்.
சிங்கப்பூரின் ஆங்கில இசைத்துறையில் தடம்பதிக்கும் ஒரு சில தமிழ்க் கலைஞர்களில் தார்மினும் ஒருவர். - படம்: லீ ஜெ ஃபெங்

“மேடையில் நான் பாடும்போது, பின்னணியில் எனது பெயர் தமிழில் எழுதப்பட்டிருக்கும். என் உடைகளிலும் ஒப்பனையிலும் இந்தியக் கலாசாரப் பின்னணியைக் கலக்க முயல்வேன்.

“தமிழ்க் கலைஞர்களால் தங்களது பண்பாட்டை மறக்காமலேயே தற்கால ஆங்கில இசையிலும் சாதிக்க முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.

சரியாகப் பத்து ஆண்டுகளுக்குமுன் தேசிய விளையாட்டரங்கில் நடந்த தேசிய தின அணிவகுப்பைத் தமது ஐந்தாம் வகுப்பு தேசியக் கல்விக்காட்சியில் பார்த்து வியந்த தார்மினுக்கு இவ்வாண்டு அதே மேடையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது ஒரு மறக்க முடியாத தருணமாகும்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் மேடைக் கலைஞராகப் பங்கேற்கிறார் 21 வயது தார்மின் தனராஜன்.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் மேடைக் கலைஞராகப் பங்கேற்கிறார் 21 வயது தார்மின் தனராஜன். - படம்: ரசல் வோங்

பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் தேசிய கீதத்தை உரக்கப் பாடியதைக் கேட்டபோது தமக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததைத் தார்மின் நினைவுகூர்ந்தார்.

லாசால் கலைக் கல்லூரியில் தான் பயிலும் இசை வணிகத்துறைப் படிப்பு, இசைத்துறையின் தொழில்நுணுக்கங்கள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம், கலைவிழாக்களைத் திட்டமிடுதல் ஆகியவற்றைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள உதவும் என்றார் தார்மின்.

“இந்த உபகாரச் சம்பளம் எனக்கு மிகுந்த சுதந்திரத்தை அளித்துள்ளது. என் கல்விக் கட்டணத்தைச் செலுத்த பகுதிநேர வேலை செய்ய வேண்டியதில்லை. முழுநேரமும் இசைக் கல்வியில் கவனம் செலுத்த முடியும்,” என்கிறார் இந்த இளையர்.

வருமானத்தைவிட ஆர்வத்திற்கு அதிக மதிப்பளித்த குடும்பத்தினரின் முழுமையான ஆதரவும் தமது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று தார்மின் குறிப்பிட்டார்.

தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 21 வயது தார்மின் தனராஜன்.
தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 21 வயது தார்மின் தனராஜன். - படம்: தேசியக் கலை மன்றம்

எதிர்காலத்தில் திரைப்படம், நாடகம், நடனம் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தியப் பாரம்பரிய இசைக் கருவிகளை நவீன இசையோடு இணைக்க வேண்டும், அனைத்துலக அளவிலான இசைப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன இவரின் எதிர்கால இலக்குகளாகும்.

அத்துடன், சிங்கப்பூரின் தேசிய தினப் பாடலை ஒரு தமிழராக, தானே ஒரு நாள் உருவாக்க வேண்டும் என்ற மாபெரும் கனவுடனும் இந்த இளம் கலைஞர் புதிய உச்சங்களை நோக்கிப் பயணம் செய்கிறார்.

எழுத்துலகில் புதிய தடம் பதிக்கும் இளம் இலக்கியவாதி

தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 17 வயது பிரியான்ஷி மோஹந்தி.
தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 17 வயது பிரியான்ஷி மோஹந்தி. - படம்: பிரியான்ஷி மோஹந்தி

கதைகள் படைப்பதிலும் அவற்றை உயிரோட்டமாக வெளிப்படுத்துவதிலும் 17 வயது பிரியான்ஷி மோஹந்திக்கு சிறுவயதிலிருந்தே தனி ஆர்வம் இருந்தது.

தம் சகோதரியையும் பக்கத்து வீட்டுத் தோழியையும் வைத்து குறும்படம் எடுப்பது, அவர்களுக்கு வசனங்களை எழுதிக் கொடுப்பது, வீட்டில் இருந்த பொம்மைகளை வைத்து தனக்குத்தானே நாடகங்கள் அரங்கேற்றிப் பார்ப்பது எனச் சிறுவயதிலேயே அவருக்குள் இருந்த கதைசொல்லும் திறன் வெளிப்படத் தொடங்கியது.

அன்று விளையாட்டாகத் தொடங்கிய அந்த ஆர்வம்தான் இன்று இவரைச் சிங்கப்பூர்க் கலைப் பள்ளியின் இலக்கியக் கலைப் பிரிவு மாணவியாகவும், இவ்வாண்டு தேசியக் கலை மன்றத்தின் கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற இளம் இலக்கியவாதியாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

சிறு வயதில் துளிர்விட்ட ஆர்வம்

தொடக்கப் பள்ளியில் படித்தபோதே ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதில் பிரியான்ஷிக்கு அளவற்ற விருப்பம். மற்ற மாணவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட அளவுக்கே எழுதினாலும், தாம் அதைவிட அதிகமாகவும் மிகுந்த ஆர்வத்துடனும் எழுதியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

இவரது எழுத்துத் திறனைக் கவனித்த ஆசிரியர்கள், “உனக்குள் ஒரு தனித்துவமான திறமை இருக்கிறது,” என்று கூறி ஊக்கமளித்தனர். தாம் எழுதிய கதைகளை மற்றவர்கள் ஆர்வத்துடன் வாசித்து ரசிப்பது அவருக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது.

சிறுவயதில் ‘பெர்சி ஜாக்சன்’ (Percy Jackson) போன்ற கற்பனைக் கதைகளை அதிகம் வாசித்த இவர், கதாபாத்திரங்களின் பின்னணியையும் அவர்களின் உணர்வுகளையும் கதையுடன் இயல்பாகப் பின்னிப்பிணைக்கும் எழுத்து உத்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு, தமது வாசிப்புப் பழக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, பல்வேறு தளங்களில் கதைகளை எழுதத் தொடங்கினார்.

குடும்ப உறவுகளும் சமூகப் பார்வையும்

பிரியான்ஷியின் படைப்புகளில் குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுப் போராட்டங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. குறிப்பாக, தெற்காசியப் பண்பாட்டில் குடும்பப் பொறுப்புகளுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் இடையே நிகழும் உளவியல் முரண்பாடுகளை ஆழமாகப் பதிவுசெய்கிறார்.

தற்போது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதையை எழுதி வருகிறார். கருச்சிதைவுக்குப் பிறகு குழந்தையைத் தத்தெடுக்கப் போராடும் முதிய பெண்மணியின் அனுபவங்களை மையமாகக் கொண்டு இக்கதை உருவாகிறது.

ஒரு கதையை எழுதுவதற்குமுன், அந்த இடத்தின் வரலாறு, மக்களின் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து, தனது குறிப்பேட்டில் கைப்பட எழுதி வைத்துக்கொள்வது அவரது வழக்கம்.

பள்ளிக்கு அப்பாற்பட்டு இலக்கிய முயற்சிகளிலும் பிரியான்ஷி ஈடுபட்டு வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இளையர்களுக்கான நிகழ்ச்சிகளில் வழிநடத்துநராகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும் செயல்பட்டுள்ளார். ஆசிய சிறுவர் விழாவிலும் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றுள்ளார்.

பள்ளிக்கு அப்பாற்பட்டு இலக்கிய முயற்சிகளிலும் பிரியான்ஷி ஈடுபட்டு வருகிறார்.
பள்ளிக்கு அப்பாற்பட்டு இலக்கிய முயற்சிகளிலும் பிரியான்ஷி ஈடுபட்டு வருகிறார். - படம்: பிரியான்ஷி மோஹந்தி

பார்வையாளர்கள் எதை அறிய விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற கேள்விகளைக் கேட்பதன் முக்கியத்துவத்தை இந்த அனுபவங்கள் தமக்குக் கற்றுக்கொடுத்ததாக இவர் கூறினார்.

காகிதத்தைத் தாண்டிப் பலதுறைகளை இணைக்கும் இலக்கு

பிரியான்ஷியின் கலைப் பயணத்தில் அவரது பெற்றோரின் ஊக்கம் முக்கியப் பங்காற்றியுள்ளது. பல மொழித் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவரான தம் தாயாரிடம், கதையின் காட்சிகளை எவ்வாறு இணைப்பது போன்ற சந்தேகங்கள் எழும்போதெல்லாம் ஆலோசனை கேட்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். கலையைக் கற்பதன்மூலம் ஒரு மாணவரிடம் உருவாகும் விடாமுயற்சியையும் நற்பண்புகளையும் அவரது பெற்றோர் பெரிதும் பாராட்டுகின்றனர்.

தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 17 வயது பிரியான்ஷி மோஹந்தி.
தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 17 வயது பிரியான்ஷி மோஹந்தி. - படம்: தேசியக் கலை மன்றம்

தேசியக் கலை மன்ற உபகாரச் சம்பளத்தின்மூலம் பல்வேறு கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறிய பிரியான்ஷி, வருங்காலத்தில் பலதுறை ஒருங்கிணைப்புக் கலைப் படைப்புகளை (Interdisciplinary Works) உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

“வாசகர்கள் என் படைப்புகளைப் படிக்கும்போது, தங்களைச் சுற்றியுள்ள உலகைக் குறித்து கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களை என் எழுத்துகள் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார் பிரியான்ஷி.

கலையும் கணினித் தொழில்நுட்பமும் இணையும் புதிய தளம்

ஊடகக் கலைஞர் கபிலன் நாயுடு, 34.
ஊடகக் கலைஞர் கபிலன் நாயுடு, 34. - படம்: கபிலன் நாயுடு

கணினித் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இன்று பல துறைகளில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நவீனத் தொழில்நுட்பங்களை வெறும் கருவிகளாக மட்டுமே பார்க்காமல், அவற்றைச் சிறந்த கலைப்படைப்புகளாக உருமாற்றி வருகிறார் 34 வயதான ஊடகக் கலைஞர் கபிலன் நாயுடு.

படைப்பாற்றல் தொழில்நுட்பவியலாளரான (creative technologist) இவர், இயந்திரக் கற்றல், இருவழித் தொடர்பு ஊடகக் கலை போன்றவற்றை இணைத்து புதுமையான கலைப்படைப்புகளை உருவாக்கி வருகிறார்.

இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், லாசால் கலைக் கல்லூரியில் நுண்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள இவ்வாண்டு தேசியக் கலை மன்றமும் சிங்கப்பூர்க் கலைப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கிய கலை உபகாரச் சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் மீதான ஈர்ப்பு

சிறுவயதிலிருந்தே கலை, இசை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த கபிலன், 15 வயதிலேயே பகுதிநேர வடிவமைப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

1990களில் மெதுவான இணையச் சேவையிலிருந்து அதிவேக இணையச் சேவைக்கு மாறிய காலகட்டத்தில், கணினித் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதில் இளவயதில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மேலும், இணைய விளையாட்டுகளில் கதையின் போக்கை விளையாட்டாளரே தீர்மானிக்கும் அம்சமும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.

அந்த ஈர்ப்பே இவரது கலைப் பயணத்தின் அடித்தளமாக அமைந்தது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பியல் (visual communication) பயின்றபோது, காலமாற்றத்துக்கு ஏற்ப அச்சு ஊடகத்தை மையமாகக் கொண்ட வடிவமைப்பிலிருந்து இருவழித் தொடர்பு திரைத் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளுக்கு மாற அவர் முடிவெடுத்தார்.

தொழில்நுட்பத்தின்வழி சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்கி வருகிறார் கபிலன்.
தொழில்நுட்பத்தின்வழி சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்கி வருகிறார் கபிலன். - படம்: கபிலன் நாயுடு

“தொழில்நுட்பம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு எப்போதும் சுவாரசியமாக இருந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைக் கலை வெளிப்பாட்டுக்காக எப்படிப் பயன்படுத்தலாம், பார்வையாளர்களை என் படைப்புகளில் எப்படி ஈடுபடுத்தலாம் என்பதே என் முக்கியத் தேடலாக மாறியது,” என்று கபிலன் கூறினார்.

விளம்பரத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு, 2024ஆம் ஆண்டு தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு முழுநேரக் கலைஞராக மாறி, தமது படைப்புகளில் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார்.

செயற்கை நுண்ணறிவில் அறநெறி

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய கலைப் படைப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், கபிலன் அதுகுறித்து தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

“வெறுமனே ஓரிரு வரிகளைத் தட்டச்சு செய்துவிட்டு, கணினி உருவாக்கும் படத்தை என்னுடைய கலைப்படைப்பு என்று சொல்வதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. அதில் கலைஞரின் தனித்துவமோ படைப்பாற்றலோ இல்லை,” என்கிறார் இந்த இளையர்.

தமது கலைப் படைப்பைப் பற்றி பார்வையாளர்களிடம் விளக்குகிறார் கபிலன்.
தமது கலைப் படைப்பைப் பற்றி பார்வையாளர்களிடம் விளக்குகிறார் கபிலன். - படம்: கோலின் வான்

கலைஞர்களின் அனுமதியின்றி அவர்களின் படைப்புகளைத் தரவுகளாகப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது இவரது கருத்து. மாறாக, தானே தரவுகளைச் சேகரித்து, தொழில்நுட்ப அறநெறிகளுக்கு இணங்க உருவாக்கப்படும் படைப்புகளுக்கே அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்.

சுற்றுச்சூழல்மீது ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், வெளிநாட்டுத் தரவு நிலையங்களை நம்பாமல், தமது சொந்தக் கணினியிலேயே செயற்கை நுண்ணறிவுச் செயலாக்கங்களை இயக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பார்வையாளர்களே படைப்பாளிகள் ஆகும் விந்தை

பார்வையாளர்களைத் தமது படைப்பின் ஓர் அங்கமாக மாற்றுவதைக் கபிலன் தமது கலைப் படைப்புகளின் தனிச்சிறப்பாகக் கருதுகிறார்.

ஒரு படைப்பு எப்படி அமைய வேண்டும் என்பதற்கான அடிப்படை விதிகளையும் சூழலையும் மட்டுமே இவர் உருவாக்குவார். அதன்பிறகு, பார்வையாளர்களின் முடிவுகளுக்கு ஏற்ப கணினியானது அந்தப் படைப்பை முழுமைபெறச் செய்யும்.

சிங்கப்பூரின் வரலாறு, பன்முக அடையாளம் ஆகியவற்றை மையமாக வைத்துப் பல மாற்றுச் சிந்தனைகளை காட்சிப்படுத்தும் கலைப்படைப்புகளை உருவாக்குவதில் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

“பார்வையாளர்களும் இயந்திரமும் சமமான அளவில் பங்காற்றும்போதுதான் ஒரு படைப்பு முழுமையடைகிறது. படைப்பின் இறுதி வடிவம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாமல், பார்வையாளர்களின் கைகளில் மாறுவதை நான் பெரிதும் ரசிக்கிறேன்,” என்று தமது கலை நுணுக்கத்தைப் பற்றி இவர் விவரித்தார்.

அடுத்த தலைமுறையை உருவாக்குதல்

இந்த உபகாரச் சம்பளம், நிதி பற்றிய கவலையின்றி தமது ஆராய்ச்சியிலும் தாம் உருவாக்க விரும்பும் கலைப்படைப்புகளிலும் முழுமையாகக் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை தமக்கு அளித்துள்ளது என்று கபிலன் கூறினார்.

லாசால் கலைக் கல்லூரி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிலையங்களில் பகுதிநேர விரிவுரையாளராகத் தற்போது பணியாற்றிவரும் கபிலன், தொழில்நுட்பம் சார்ந்த கலை அறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதை முக்கியப் பொறுப்பாகக் கருதுகிறார்.

தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 34 வயது கபிலன் நாயுடு.
தேசியக் கலை மன்றத்தின் 2026 கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார் 34 வயது கபிலன் நாயுடு. - படம்: தேசியக் கலை மன்றம்

உள்ளூர்க் கலைஞர்களுக்கு மேடை அமைத்துத் தரும் நோக்கில், ‘ஜோ அண்ட் கபி’ (Joe and Kapi) என்ற தமது அமைப்பின் வழியாகக் கண்காட்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தமது படைப்புகள் வழியாக சிங்கப்பூரின் ஊடகக் கலைத் துறைக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்குவதோடு, தொழில்நுட்பம் சார்ந்த கலையை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் கபிலன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்