தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடகம்வழி சமூகக் கருத்துகள் கூறும் இளையர்கள்

3 mins read
ed790bfe-1e14-4d78-bf15-177a4f0d845a
நாடக இயக்குநர் யக்ஞா. - படம்: டான் டியோ

சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய கதைகளைச் சரிவரச் சொல்ல கலைதான் வழி என ‘ஃபிரிஞ்ச் 2025’ திருவிழாவில் பங்காற்றியுள்ள இளையர்கள் யக்ஞா, ஷ்ரேய் பார்கவ் இருவரும் நம்புகின்றனர்.

சமூகத்தின் எதிரொலி

சுற்றி நடக்கும் சிறு சம்பவங்களை உள்வாங்கி, சமூக உணர்வுமிக்க படைப்புகளை உருவாக்குவது தனக்கு விருப்பமான ஒன்று எனச் சொல்லும் 34 வயது யக்ஞா, லாசால் கல்லூரியில் படித்தவர்.

தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் பயின்றபோது அதன் நாடகக் குழு பல்வேறு கதைகளையும் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் சொன்ன பாணி தன்னை ஈர்த்ததாகக் கூறினார் இவர்.

பிறரது குரலாகத் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நாடகம், மேடைப்படைப்பு தொடர்பான இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

மறதிநோய் குறித்த நுணுக்கங்கள், அதன் தாக்கம் உள்ளிட்டவற்றை ஓர் இளையர் தன் தாத்தாவின் மனத்திலிருந்து அறிந்துகொள்ளும் விதமாக அமைந்த நாடகத்தை எழுதியுள்ளார் இவர்.

மேலும், இந்திய பாரம்பரியப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கும் நவீன ‘டேட்டிங்’ கலாசாரத்திற்கும் இடையே சிக்கிய இளம்பெண்ணை மையமாகக் கொண்டு, சமூக எதிர்பார்ப்புகளுக்கும் அவளுக்குமான உறவைப் பேசும் மாறுபட்ட நாடகத்தையும் எழுதி, ‘கலா உத்சவ்’ நிகழ்ச்சியில் படைத்தார் யக்ஞா.

இன, கலாசார, உடலமைப்பு சார்ந்த, அறிவுசார்ந்த, நிதிநிலை, பாலியல்ரீதியான கண்ணோட்டம் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஒருவரது அடையாளத்தை ஆராய்ந்து, அந்த அடையாளம் அழிவுக்கு இட்டுச் செல்கிறதா அல்லது ஆக்கத்திற்கு இட்டுச் செல்கிறதா என்பதை வகைப்படுத்தும் ‘ஆங்கிரி இந்தியன் வுமன்’ நாடகத்தில் நடித்தார் இவர்.

2007ல் எழுதப்பட்ட ‘எக்லிப்ஸ்’ நாடகத்தை இவ்வாண்டு இயக்கியுள்ள இவர், “நான் பார்த்திராத, செவி வழியே கேட்ட கதைகளை நாடகமாக இயக்குவதில் மகிழ்ச்சி,” என்றார்.

“ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேடையேறும் இந்த நாடகத்தின் கதையை இப்போதும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. இரு நாடுகளின் பிரிவினையை, சிங்கப்பூர் இளையர் பார்வையிலிருந்து தெரிந்துகொள்ளும் நோக்கில் படைக்கப்பட்ட இந்நாடகம், இந்தக் கலையின் கதைசொல்லலின் சக்தியை வெளிக் கொணர்ந்துள்ளது,” என்றார்.

நாடகத் துறையில் சாதனை படைக்கும் நோக்கில் இவர், “உடனடியாக அனைவரும் கேட்கவேண்டிய, பேச வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய சமூகச் சிந்தனைகள், கருத்துகள் குறித்து இயன்றவரை பேச வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்,” என்று புன்னகைத்தவாறே சொன்னார்.

உயிர்பெறும் கதாபாத்திரங்கள்

திரைப்படம், ஊடகக் கல்வியில் இரட்டை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள நடிகர் ஷ்ரேய்.
திரைப்படம், ஊடகக் கல்வியில் இரட்டை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள நடிகர் ஷ்ரேய். - படம்: ‌ஷியான் பேங்

சமூகத்திற்குச் செய்தி சொல்ல சிறந்த வழி ஊடகம் என்றும் அதிலும் உணர்வுகளை நேரடியாகக் கடத்தும் நாடகத்தில் கதைமாந்தராக இருப்பது கூடுதல் சிறப்பு என்றும் சொல்கிறார் ஷ்ரேய் பார்கவா, 29.

மேடை நாடகம் மட்டுமின்றி, குறும்படங்கள், தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களிலும் செயல்படும் இவர், சிங்கப்பூர் போன்ற பல்லினச் சமூகத்தில் வளமான பண்பாடு, வரலாறு, சமகாலப் போக்கு உள்ளிட்டவை குறித்துப் பேச வாய்ப்பு கிடைப்பதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டார்.

திரைப்படம், ஊடகக் கல்வியில் இரட்டை இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வருவதாகக் கூறினார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் படித்தபோதே, நாடகத்தின்மேல் ஏற்பட்ட மோகம் என்னை கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பயில ஊக்குவித்தது என்றார் இவர்.

‘ரூத் & ஆல்பர்ட் மெக்கின்லே’ விருது பெற்றுள்ள இவர், தொடர்ந்து படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

தேசிய சேவையாற்றியபோதும் தொடர்ந்து நாடகங்களில் கவனம் செலுத்தியதாகச் சொன்ன இவர், வெளிநாட்டிற்குச் சென்று படித்து வந்தது புதிய கண்ணோட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.

தற்போது ஃபிரிஞ்ச் ஃபெஸ்டிவல் 2025ல் ‘எக்லிப்ஸ்’ எனும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ‘மோனோலாக்’ பாணி நாடகத்தில் நடித்துள்ளார்.

“சிங்கப்பூர் இளையரின் கண்ணோட்டத்தில் ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் தாக்கத்தைப் பேசும் நாடகத்தில், நடிக்க வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி. ஒரு மதிப்புமிக்க கருத்தை விளக்கிச் சொல்லும் முக்கியக் கதாபாத்திரமாக நடித்தது பெருமை,” என்றும் சொன்னார்.

“எதிர்காலத்தைக் குறித்த கனவுகள் அதிகமில்லை. அடுத்து என்ன கதாபாத்திரத்தில் நடிப்பது, அதில் எவ்வாறு சிறந்து விளங்குவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதுவே என்னைச் சரியான பாதையில் கொண்டு செல்லும்,” என்கிறார் ஸ்ரேய்.

உடனடியாக அனைவரும் கேட்க வேண்டிய, பேச வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய சமூகச் சிந்தனைகள், கருத்துகள் குறித்து இயன்றவரை பேச வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்.
நாடக இயக்குநர் யக்ஞா, 34
குறிப்புச் சொற்கள்