இந்தியப் பாரம்பரிய இசைக்கூறுகளையும் நவீன ஒலிகளையும் அழகாகவும் அர்த்தமுள்ள வகையிலும் இணைத்து இசை படைக்கும் கனவுடன் இயங்கி வருகிறார் இளையர் புவனேஸ்வரன் கணேசன், 28.
ஆறு வயதிலிருந்து இசை ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் இவர், தற்போது தேசியக் கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளத்துடன் இசைத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.
தொடக்கப் பள்ளியில் படித்தபோது பங்கேற்ற இசைப் போட்டியொன்றில் புவனேஸ்வரன் தாமாகப் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெறவே, அத்திறனை வளர்க்கும் நோக்கில் இவரைச் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் கர்நாடக இசை பயிலச் செய்தனர் இவரது பெற்றோர்.
முதலில் அதிக ஆர்வமின்றி வகுப்புகளுக்குச் சென்றுவந்த இவர், சிறுவர் நாடகங்கள், பாடல்கள் தயாரிப்பிலும் பங்காற்றி வந்தார்.
“பதினான்கு வயதில் போகிற போக்கில் என் தந்தை சொன்ன சொல் என் வாழ்வை மாற்றியமைத்தது,” என நினைவுகூர்ந்தார் புவன்.
“தொடர்ந்து முயன்றால் நீயும் ஏ ஆர் ரகுமான் போன்று மாபெரும் இசைக்கலைஞராக முடியாதா? உன்னிடம் திறமை உள்ளது,” என்று தந்தை கூறவே, அதுவே தமது கனவாக மாறி தம்மை ஓடத் தூண்டியதாகக் கூறினார் புவன்.
சிறு சிறு இசைத் தயாரிப்புகளில் பங்காற்றிவந்த இவர், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இசை, ஒலித் தொழில்நுட்பத்தில் பட்டயக் கல்வி பயின்றார்.
“அதில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து இசைக்கோப்புப் பணிகளில் பணியாற்றத் தொடங்கினேன். பிரபல இசைக்கலைஞர் ஷபீருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களுக்கும் பணியாற்றத் தொடங்கினோம்,” என்று பெருமையுடன் சொன்னார் புவன்.
தொடர்புடைய செய்திகள்
ஷபீருடன் இணைந்து ‘ஷபீர் மியூசிக் ஏஷியா’ எனும் நிறுவனத்தைத் தொடங்கிய இவர், அண்மையில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ‘துணிவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலிலும் பணியாற்றியுள்ளார்.
“அது பெருமைக்குரியதுதான். எனினும், என் கனவுகளும் இலக்குகளும் பெரியவை. அவற்றை அடையத் தொடர்ந்து உழைக்கவும் கற்கவும் தயாராக இருக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் தற்போது இளங்கலைப் பட்டம் பெற லாசால் கலைக் கல்லூரியில் இணைந்துள்ளேன்,” என்று உத்வேகத்துடன் சொன்னார் இந்த இளையர்.
தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பயிலும் எண்ணத்தில் இருக்கிறார் புவன். தமது படிப்பறிவும் பட்டறிவும் இணையும்போது விளையும் பலன் சிறப்பாக இருக்கும் என்பது இவரது உறுதியான நம்பிக்கை.
கர்நாடக இசை, தமிழ் மரபிசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர், உள்ளூர்க் கலைஞர்கள், இந்திய, கிழக்காசிய நாடுகளின் தலைசிறந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இருவேறு இசையை அழகுறக் கோப்பதில் ஏ ஆர் ரகுமான் தனித்திறன் கொண்டவர் என்றும் அவரே தமக்கு முன்மாதிரி என்றும் புவன் சொன்னார்.
தமது இளங்கலைப் படிப்பிற்குக் கிடைத்துள்ள உபகாரச் சம்பளம், தமது கல்விச் செலவுடன் பிற செலவுகளுக்கான உதவித்தொகையையும் (Stipend) வழங்குவதால், கவலையின்றி முழுக் கவனத்தையும் படிப்பில் செலுத்த முடியும் என இவர் நம்புகிறார்.
எதிர்காலத்தில், இசையில் சாதிப்பதுடன், சிங்கப்பூரில் இசை, கலை தொடர்பான கொள்கை வகுப்பிலும் பங்காற்ற வேண்டும் என்பது புவனின் விருப்பம்.