சுற்றுச்சூழல் சேவைத் துறையில் இளம் திறனாளர்கள்

சுற்றுச்சூழல் சேவைத் துறையில் இளம் திறனாளர்கள்

2 mins read
98d50fed-8afb-4b82-96b3-04b0682ac89c
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

தேசியச் சுற்றுப்புற வாரியம் ஆண்டுதோறும் வழங்கிவரும் சுற்றுச்சூழல் தொழில்துறை உபகாரச் சம்பளத்தை (NEA-Industry Scholarship) இந்த ஆண்டு ஆறு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

சனிக்கிழமை (மே 17) நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கட்டடத்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

இவருடன் தொழில்முனைவர்கள், கல்வியாளர்கள், இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்ற கல்விமான்கள், குடும்பத்தினர் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் சேவைகள் துறையில் இளையர்களை ஈர்த்து, அவர்களைத் திறமை வாய்ந்த பணியாளர்களாக உருவாக்கும் நோக்கத்தோடு 2020ல் இந்த உபகாரச் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு நிதி உதவியும் தொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது.

உபகாரச் சம்பளம் பெற்ற கல்விமான்களுக்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் கோ, பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சுற்றுச்சூழல் சேவைத் துறை வகிக்கும் முக்கியப் பங்கையும் வலியுறுத்தினார்

“இன்று நாம் அனுபவிக்கும் சுத்தமான, வாழத்தக்க சிங்கப்பூர் சூழல், 2,500 நிறுவனங்களைச் சேர்னத 78,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் கொண்டே உருவாகியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்

இந்த உபகாரச் சம்பளம் சுற்றுச்சூழல் சேவை துறை மாற்றத் திட்டத்தின் அடித்தளம் என்று கூறிய டாக்டர் கோ, புதிய கல்விமான்கள் இத்துறைக்கு புதிய யோசனைகளையும் புதுமையான தீர்வுகளையும் கொண்டு வர வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக முந்தைய கல்விமான்கள் இருவர் தங்கள் படிப்பு பயணத்தைப் பற்றியும் வேலை அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவர், அண்மையில் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திரவியலிலும் எந்திர மின்னணுவியலிலும் டிப்ளோமோ பெற்ற சௌம்யா பிரவீத் ராய், 2022ல் தேசிய சுற்றுப்புற வாரியத் தொழில்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்றார்.

2022ல் தேசிய சுற்றுபுற வாரியத் தொழில்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற சௌம்யா பிரவீத் ராய்.
2022ல் தேசிய சுற்றுபுற வாரியத் தொழில்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற சௌம்யா பிரவீத் ராய். - படம்: சாவ்பாவ்

சுற்றுச்சூழல் சேவைகளின் முக்கியத்துவத்தைக் கொவிட்-19 தொற்றுநோய் பரவல் அவருக்கு உணர்த்தியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

“அலுவலகங்கள், பொது இடங்களில் சரியான முறையில் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அந்த கடினமான காலத்தை நாம் சமாளிக்க முடியாமல் போயிருக்கும்,” என்றார் அவர்.

“இந்த உபகாரச் சம்பளம் எனக்கு வெறும் நிதியுதவியை மட்டுமளிக்கவில்லை. இது எனக்கு நேரடியான தொழில்முறை அனுபவத்தை வழங்கியதுடன், என்னைப் போலவே ஆர்வமுள்ள வழிகாட்டிகளுடனும் சக பணியாளர்களுடனும் என்னை இணைத்தது,” என்று சௌமியா கூறினார்.

பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் (robotics) படிக்கத் திட்டமிட்டிருக்கும் சௌமியா, இந்த அனுபவம் தனக்கு ஏராளமான தொழில்துறை வாய்ப்புகளை வழங்கியதோடு, எதிர்காலக் குறிக்கோள்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் தன்னம்பிக்கையையும் வழங்கியதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்