‘திறனலை’யில் மிளிர்ந்த திறமைகள்

2 mins read
eeeccef2-4fdd-475c-ba6e-410da9468295
‘ஆயிரத்தில் நால்வர்’ குழுவைச் சேர்ந்த 4 இளையர்கள் தாங்கள் இயற்றிய கவிதையை நயம்பட படைத்தனர். - படம்: ‘தமிழா’ அமைப்பு

தமிழ் பாரம்பரியத்தையும் கலையையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘திறனலை - ஓபன் மைக் 2.0’ நிகழ்ச்சியில் 25 இளையர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழர் பேரவையும் ‘தமிழா’ அமைப்பும் இணைந்து ‘திறனலை - ஓபன் மைக் 2.0’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

நடனம், இசை, கதை, கவிதை எனத் தங்கள் வெவ்வேறு திறமைகளை வெளிப்படுத்தத் தமிழ் பேசும் இளையர்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஏறத்தாழ 120 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஏறத்தாழ 120 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். - படம்: ‘தமிழா’ அமைப்பு

தேசிய நூலகத்தில் ஜூலை 12ஆம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 120 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு படைக்கப்பட்ட 20 துடிப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

“பெரும்பாலும் இளையர்கள் போட்டிகளுக்குச் செல்லும்போது, அவர்களுக்குப் பயம் கலந்த அனுபவம் கிட்டும். மாறாக, புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் போட்டியின்றி அவர்களுக்கேற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்,” என்றார் தமிழர் பேரவை உறுப்பினர் ஆண்டனி ஹஷ்வின், 28.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் பேரவை இதே நோக்கத்தை முன்னிறுத்தி ‘ஓபன் மைக்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

இம்முறை ‘தமிழா’ அமைப்போடு இணைந்து பெரிய அளவில் மேலும் பல இளையர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ‘திறனலை - ஓபன் மைக் 2.0’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

“திறனலை போன்ற நிகழ்ச்சிகள் இளையர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளைத் தன்னம்பிக்கையோடு வெளிப்படுத்த உதவுகின்றன,” என்றார் தேசிய சேவையில் பணியாற்றி வரும் சுந்தரவடிவேல் ப்ரபவ், 19.

தமது நண்பர்களோடு இணைந்து ‘ஆயிரத்தில் நால்வரின் வாழ்க்கையில் நவரசங்கள்’ என்ற தலைப்பில் கவிதையை எழுதிப் படைத்த இவர், இளையர்களிடையே தமிழ் மொழி புழக்கமும் திறனும் குறைந்து வருவதைச் சுட்டினார்.

“நாங்கள் எழுதிய கவிதையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் கூட எங்கள் நிலையில் தான் இருந்தது; அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. இருந்தாலும், எங்களால் இயன்றவரை எங்களுக்குத் தெரிந்த மொழியில் கவிதையை இயற்றிப் படைத்தோம்,” என்றார் அவர்.

புதிய நண்பர்களை உருவாக்கிச் சமூக ஈடுபாட்டை வளர்க்கவும் இளையர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்தது.

தமது இரு தோழிகளோடு நடனமாடிய ஸ்ரீவித்யா.
தமது இரு தோழிகளோடு நடனமாடிய ஸ்ரீவித்யா. - படம்: ‘தமிழா’ அமைப்பு

“நமது நண்பர்களை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க இம்மேடை உதவியது. போட்டித்தன்மை நிறைந்த இன்றைய சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது,” என்றார் மூவர் கொண்ட குழுவில் நடனமாடிய ஸ்ரீவித்யா, 21.

“எந்தவொரு தயக்கமுமின்றி இன்று பல இளையர்கள் முன்வந்து தங்கள் திறமைகளைப் படைத்தனர். சிலர் முதல் முறையாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்றெண்ணும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது,” எனப் பகிர்ந்துகொண்டார் ‘தமிழா’ அமைப்பின் சமூகநல பிரிவு இயக்குநர் மோனிகா, 22.

குறிப்புச் சொற்கள்