சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளங்குரல்கள்

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளங்குரல்கள்

4 mins read
ba8051c6-19d1-4611-9db4-0e771a4fc98e
சிங்கப்பூரின் 61வது ஆண்டில் நாட்டைப் பற்றிய தங்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் இளையர்கள் பகிர்ந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் தனது 61வது தேசிய தினத்தை கொண்டாடும் வேளையில், நாட்டின் எதிர்காலப் பயணத்தை வடிவமைப்பதில் இளையர்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

இன நல்லிணக்கமும் விரைந்த பொருளியல் வளர்ச்சியும் கொண்ட நம் நாட்டில், இளையர்கள் தங்களின் புதிய கனவுகளுடனும் நம்பிக்கைகளுடனும் வருங்காலத்தை எதிர்நோக்குகின்றனர்.

கல்வி, வேலை, சமூகப் பங்களிப்பு போன்ற பல்வேறு துறைகளில் தடம் பதிக்கும் சிங்கப்பூர் இளையர்கள், நாட்டின் 61வது ஆண்டிலும் அதற்கு அப்பாலும் சிங்கப்பூரைப் பற்றிய தங்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் பகிர்ந்துகொண்டனர்.

சமமான வளர்ச்சி

பொறியாளராகப் பணிபுரியும் மிருதுள்ளா ரவி அனுராதா, 24.
பொறியாளராகப் பணிபுரியும் மிருதுள்ளா ரவி அனுராதா, 24. - படம்: மிருதுள்ளா ரவி அனுராதா

பொருளியல் வளர்ச்சியால் கிட்டும் பலன்கள் எல்லாத் தரப்பினர்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பது 24 வயது பொறியாளர் மிருதுள்ளா ரவி அனுராதாவின் எண்ணம். நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் நிகழும்போது, எந்தவொரு தலைமுறையும் பின்தங்கிவிடக் கூடாது என்று இவர் கருதுகிறார்.

அன்பான சமூகம்

டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவி பவித்ரா அன்பழகன், 24.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவி பவித்ரா அன்பழகன், 24. - படம்: பவித்ரா அன்பழகன்

பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களிடம் பரிவையும் அன்பையும் காட்டும் சமூகமாகச் சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் பயிலும் 24 வயது பவித்ரா அன்பழகனின் விருப்பம். அதிவேகமாக இயங்கும் இன்றைய தொழில்நுட்ப உலகில், மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பாதுகாப்பான இடங்களை உருவாக்குவது நம் கடமை என்று இவர் நினைக்கிறார்.

சம வாய்ப்புகள்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி காவியாஸ்ரீ மணிமாறன், 21.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி காவியாஸ்ரீ மணிமாறன், 21. - படம்: காவியாஸ்ரீமணிமாறன்

பின்னணி எதுவாக இருந்தாலும் அனைவரும் வளர்வதற்கும் வெற்றி பெறுவதற்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்காலத்தை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ் மொழிப் படிப்போடு கூடிய பாலர் கல்வியைப் பயின்று வரும் 21 வயது காவியாஸ்ரீ மணிமாறன் காண விரும்புகிறார்.

எதிர்காலத்தில் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் வேளையில், “கூடுதல் மனநல ஆதரவு, சிறந்த நிதி நிலைத்தன்மை, தரமான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுடன் ஒவ்வொருவருக்கும் தங்களின் கனவுகளை நனவாக்க வாய்ப்புக் கிடைக்க வேண்டும்,” என்று இவர் குறிப்பிட்டார்.

பல்லினத் தொடர்ச்சி

முழுநேரத் தேசிய சேவையாளர் பரசுராம் சுப்பிரமணியன், 20.
முழுநேரத் தேசிய சேவையாளர் பரசுராம் சுப்பிரமணியன், 20. - படம்: பரசுராம் சுப்பிரமணியன்

சிங்கப்பூர் இப்போதும் எப்போதும்போலப் பல்லினத்தன்மையுடன் திகழ வேண்டும் என்று முழுநேரத் தேசிய சேவையாளரான 20 வயது பரசுராம் சுப்பிரமணியன் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் உலக அளவிலும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, எதிர்காலத்தில் தமது பிள்ளைகள் நல்ல வளர்ச்சியையும் நாட்டின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் பன்முகக் கலாசார சமூகத்தில் வளர வேண்டும் என விரும்புவதாக இவர் கூறினார்.

கலைகளும் கம்பத்து உணர்வும்

பத்திரிகை, ஊடகத் துறையில் பயிற்சிப் பணியாளராக பணிபுரியும் சுதிக்‌ஷா கிருஷ்ணகுமார், 24.
பத்திரிகை, ஊடகத் துறையில் பயிற்சிப் பணியாளராக பணிபுரியும் சுதிக்‌ஷா கிருஷ்ணகுமார், 24. - படம்: சுதிக்‌ஷா கிருஷ்ணகுமார்

செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்கு ஏற்ப குடிமக்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பத்திரிகை, ஊடகத் துறையில் பயிற்சிப் பணியாளராக இருக்கும் 24 வயது சுதிக்‌ஷா கிருஷ்ணகுமார்.

“உள்ளூர்க் கலை, கலாசாரம் செழித்தோங்கி முதன்மை பெற வேண்டும். சமூகத்திற்குப் பங்களிப்பதும் கம்பத்து உணர்வை மீண்டும் உருவாக்குவதும் நமது நாட்டின் தனிச்சிறப்பை உலகிற்கு உணர்த்தும்,” என்றும் இவர் குறிப்பிட்டார்.

பரிவும் நல்வாழ்வும்

கணினி அறிவியல் பயிலும் மாணவி தர்ஷினி சரவணன், 20.
கணினி அறிவியல் பயிலும் மாணவி தர்ஷினி சரவணன், 20. - படம்: தர்ஷினி சரவணன்

பொருளியல் வளர்ச்சியோடு நின்றுவிடாமல், நல்வாழ்வை மதிக்கும் சமூகமாகச் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற வேண்டும் என கணினி அறிவியல் துறையில் பயிலும் 20 வயது பல்கலைக்கழக மாணவி தர்ஷினி சரவணன் கூறினார். அனைவரும் தங்களின் ஆர்வத்தைத் தொடர அதிகாரம் பெற்ற எதிர்காலமும், பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள் ஒருவரையொருவர் மதித்து வாழும் தேசமாகவும் சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்றார் இவர்.

இளையோர் பங்களிப்பு

பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் மஹிமா சௌரிராஜன், 24.
பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் மஹிமா சௌரிராஜன், 24. - படம்: மஹிமா சௌரிராஜன்

இன்றைய கொந்தளிப்பான உலகச் சூழலில் இளையர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார் 24 வயது பகுப்பாய்வாளரான மஹிமா சௌரிராஜன்.

“தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு சூழலில் வாழும் நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். எனவே, நாம் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, நற்செயல்களுக்காகத் தொடர்ந்து சமூகத்திற்குப் பங்களித்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்றார் இவர்.

ஒற்றுமையின் பலம்

உயிர்மருத்துவப் பொறியியல் பயிலும் மாணவி ஜோஸ்னா சோனி, 23.
உயிர்மருத்துவப் பொறியியல் பயிலும் மாணவி ஜோஸ்னா சோனி, 23. - படம்: ஜோஸ்னா சோனி

தம்மை ஒரு முதலாம் தலைமுறைச் சிங்கப்பூரராகப் பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொண்டார் உயிர்மருத்துவப் பொறியியல் பயிலும் 23 வயது மாணவி ஜோஸ்னா சோனி. “சமூகத்தினர் அனைவரும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், ஆதரவைப் பெறவும், பெருமையுடன் இதைத் தங்களின் இல்லம் என்று அழைக்கவும் ஏதுவான நாடாகச் சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும்,” என்று இவர் கூறினார்.

பாதுகாப்பான இல்லம்

மின்னிலக்கப் படைப்பாக்கத்தில் பட்டயக் கல்வி பயிலும் மாணவி உமர் ஃபாருக் ரூஹிலா பர்வீன், 18.
மின்னிலக்கப் படைப்பாக்கத்தில் பட்டயக் கல்வி பயிலும் மாணவி உமர் ஃபாருக் ரூஹிலா பர்வீன், 18. - படம்: உமர் ஃபாருக் ரூஹிலா பர்வீன்

ஒவ்வொரு குடிமகனின் குரலும் செவிமடுக்கப்படும் இடமாகச் சிங்கப்பூர் வளர வேண்டும் என்று மின்னிலக்கப் படைப்பாக்கத்தில் பட்டயக் கல்வி பயிலும் 18 வயது மாணவரான உமர் ஃபாருக் ரூஹிலா பர்வீன் விரும்புகிறார்.

“வெற்றி என்பது கல்வி அல்லது தொழில் சார்ந்த சாதனைகளால் மட்டுமல்லாமல், இரக்கம், சமூக உணர்வு போன்ற விழுமியங்களாலும் அளவிடப்பட வேண்டும். வருங்காலத் தலைமுறையினர் பெருமையுடன் சொந்தம் கொண்டாடும் பாதுகாப்பான இல்லமாகச் சிங்கப்பூர் திகழ வேண்டும்,” என்று இவர் கூறினார்.

இருமொழித் தனித்துவம்

கணக்கியல் பட்டயக் கல்வி மாணவி வடிவேல் பவித்ரா, 17.
கணக்கியல் பட்டயக் கல்வி மாணவி வடிவேல் பவித்ரா, 17. - படம்: வடிவேல் பவித்ரா

சிங்கப்பூர் பல்வேறு பண்பாடுகளின் சங்கமமாகத் தொடர்ந்து திகழ வேண்டும் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல் பட்டயக் கல்வி பயிலும் 17 வயது வடிவேல் பவித்ரா ஆசைப்படுகிறார்.

புதிய உலக வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் திறன்களை மேம்படுத்தவும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட இவர், “தாய்மொழி பேசுவோரின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வேண்டும். இருமொழிக் கொள்கைக்கு முன்னுரிமை அளிப்பதே சிங்கப்பூரின் தனிச்சிறப்பு,” என்று கூறினார்.

வேலைக்கும் ஓய்வுக்கும் சமநிலை

தொடக்கக் கல்லூரி மாணவி குமரவேலு கமலசிவாணி, 17.
தொடக்கக் கல்லூரி மாணவி குமரவேலு கமலசிவாணி, 17. - படம்: குமரவேலு கமலசிவாணி

சிங்கப்பூரில் நிலவும் கடுமையான போட்டிச் சூழல் காரணமாக இளையர்களின் ஓய்வு நேரம் குறைந்து வருவதாக, செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி முதலாமாண்டு மாணவியான 17 வயது குமரவேலு கமலசிவாணி கூறினார்.

“தற்போதைய போட்டிச் சூழலால் பலர் வெற்றிக்காக ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்கின்றனர். இந்தப் போக்கு நீடித்தால் மனிதநலம் பாதிக்கப்படலாம். எனவே, எதிர்காலத்தில் கடின உழைப்புக்கும் போதிய ஓய்வுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நாடாகச் சிங்கப்பூர் இருக்க வேண்டும்,” என்று இவர் தெரிவித்தார்.

உள்நாட்டு வாய்ப்புகள்

பல்கலைக்கழக மாணவர் கதிர் ஜெகதீசன், 21.
பல்கலைக்கழக மாணவர் கதிர் ஜெகதீசன், 21. - படம்: கதிர் ஜெகதீசன்

சிங்கப்பூரர்கள் ஒருவரையொருவர் ஆதரித்து, அனைவரையும் உயர்த்தும் சமூகமாகத் திகழ வேண்டும் என ஆசைப்படுகிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 21 வயது மாணவர் கதிர் ஜெகதீசன். தங்களின் இலக்குகளை எட்ட வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லாத வகையில் உள்நாட்டிலேயே அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் இவர்.

பல்லின அடையாளமும் ஒற்றுமையும்

கணினி அறிவியல் பயிலும் மாணவி லாவண்யா சுப்ரமணியன், 20.
கணினி அறிவியல் பயிலும் மாணவி லாவண்யா சுப்ரமணியன், 20. - படம்: லாவண்யா சுப்ரமணியன்

பல்லின நல்லிணக்கத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிறார் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் லாவண்யா சுப்ரமணியன், 20.

முன்னேற்றப் பாதையில் செல்லும் அதே வேளையில், “நமக்கு உன்னத அடையாளத்தைத் தரும் மக்கள், நமது விழுமியங்கள், சமூக உணர்வு ஆகியவற்றை நாம் எப்போதுமே மறந்துவிடக்கூடாது,” என்று இவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
இளையர்இளையர் முரசுமாணவர்சிங்கப்பூர்தேசிய தினம்கனவுஎதிர்காலம்