புதிய ஆண்டின் தொடக்கத்தில் ஒருவர் எடுக்கும் தீர்மானங்களும், வகுக்கும் இலக்குகளும் அவரது பயணத்திற்கான வரைபடங்கள். தெளிவான இலக்கை நோக்கித் திட்டமிட்டுச் செயல்படும்போது, வெற்றிகள் வசப்படுவது உறுதி. கல்வியிலும் பணியிலும் வாழ்க்கையிலும் சிறகடிக்கத் துடிக்கும் இளையர்கள், தங்களின் கனவுகளையும் இலக்குகளையும் இங்கே பகிர்கின்றனர்.க
நிபுணத்துவ மேம்பாடு
அளவியல் நிபுணரான (metrologist) 24 வயது கணேசன் பிரியதர்ஷினிக்கு 2025ஆம் ஆண்டு தொழில்முறை வாழ்க்கையில் முழுமையாகத் தடம் பதித்த ஆண்டாக அமைந்தது. ஜனவரியில் முழுநேரப் பணியைத் தொடங்கிய அவர், புதிய நடைமுறைகளுக்கும் பணிச்சூழலுக்கும் ஏற்ப தம்மை விரைவாகத் தகவமைத்துக்கொண்டார். சவால்கள் இருந்தபோதிலும், அவை தந்த அனுபவங்கள் அவருக்குத் தன்னம்பிக்கையையும் தெளிவையும் அளித்தன.
2026ல் பணியிடச் சங்கங்களில் இணைந்து தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க அவர் திட்டமிட்டுள்ளார். பணிக்கு அப்பால், சமூகத் தொண்டுகளில் ஈடுபடவும், உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தவும் திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டுப் பயணங்களை பொழுதுபோக்காக மட்டும் கருதாமல், சீரான வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாகத் தொடர அவர் விரும்புகிறார்.
நிலையான முன்னேற்றம்
முழுநேரப் பணி, குடும்பப் பொறுப்புகள், புதிதாகத் தொடங்கிய முதுகலைப் படிப்பு என அனைத்தையும் சமாளிப்பதே 25 வயது பிரசன்னா வெங்கடேஷ்வரின் 2025ஆம் ஆண்டின் மையமாக அமைந்தது.
அவசரமான முடிவுகளைக் காட்டிலும் நிதானமான முன்னேற்றமே சிறந்தது என்ற அணுகுமுறையை 2026லும் தொடர அவர் விரும்புகிறார். தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துதல், கல்வியில் முன்னேறுதல் ஆகியவையே அவரது இலக்குகள். புத்தாண்டை ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கம் என்று பார்க்காமல், ஏற்கெனவே தொடங்கிய பயணத்தை உறுதிப்படுத்தும் ஆண்டாக அவர் கருதுகிறார்.
தொழில்மாற்றம்
2025ஆம் ஆண்டு உரிமம் பெற்ற சிங்கப்பூர் கணக்காய்வுக் கல்வியை (Singapore Chartered Accountancy) மேற்கொண்ட 26 வயது மானசா ரவி அனுராதா, திறமைகளை மேம்படுத்திக்கொண்டதுடன், தமக்கு ஏற்ற தொழில் குறித்த தெளிவைப் பெற்றார். இவ்வாண்டு தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கும் அவர், தமது ஆர்வத்திற்கு ஏற்ற பணிகளில் ஈடுபடுவதையும், அதே சமயம் வாழ்க்கைக்கும் பணிக்கும் இடையே சமநிலையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். நோக்கத்துடன் கூடிய செயல்பாடும், விடாமுயற்சியுமே முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்று அவர் கருதுகிறார்.
இவ்வாண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால், வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லை எட்டப்போகும் மகிழ்ச்சியுடன் உள்ளார் மானசா.
நலவாழ்வில் அக்கறை
மருத்துவ மாணவியான 24 வயது வர்ஷினி சரவணன் கடந்த ஆண்டு மருத்துவமனைப் பயிற்சியைத் தொடங்கினார். நோயாளிகளுடனான நேரடித் தொடர்பு, அவரது மருத்துவ அறிவை நடைமுறை அனுபவமாக மாற்றியது. இவ்வாண்டு கல்வியின் ஆழத்தைப் புரிந்துகொள்வதுடன், தமது நலத்தைப் பேணுவதிலும் நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்க விரும்புகிறார். முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான ஓய்வு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளார். தமது ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்ள குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவதே சிறந்த வழி என்று கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
எல்லைகள் விரிவாக்கம்
மென்பொருள் உருவாக்குநரான சுபிக்ஷா ராமனுக்கு கடந்த ஆண்டு பல ஏற்றஇறக்கங்கள் நிறைந்ததாக அமைந்தது. சிறந்த நண்பர்களைப் பெற்றதோடு, கலையிலும் தொழிலிலும் எல்லைகளைத் தாண்டி புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கினார்.
புதிய ஆண்டில் மனநலத்திற்கு இணையாக உடல்நலத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவது; இமயமலையில் நடைப்பயணம் மேற்கொள்வது; பதின்ம வயதில் கற்கத் தொடங்கி பின்னர் இடைநிறுத்திய பிரெஞ்சு மொழியை மீண்டும் முறையாகக் கற்றுத் தேர்வது ஆகிய மூன்று இலக்குகளை சுபிக்ஷா நிர்ணயித்துள்ளார்.
புதிய அனுபவங்கள்
பட்டயப் படிப்பின் ஒரு பகுதியாக மேற்கொண்ட முதல் வேலைப்பயிற்சி 19 வயது உயிரித் தொழில்நுட்பவியல் மாணவர் பரசுராம் சுப்பிரமணியனுக்கு புதிய அனுபவங்களைத் தந்தது. 2026ல், நேரடிப் பயிற்சி மூலம் மேலும் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடுவதே தமது வளர்ச்சிக்கு அடித்தளம் என அவர் நம்புகிறார்.
தனித்துவ அடையாளம்
சிங்கப்பூர் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் 24 வயது சுந்தரம் மோகன் ஷக்தி தற்போது பயிற்சி அதிகாரியாகப் பயிற்சி பெறுகிறார். 2025ல் வெளிநாட்டில் முதுகலை பயின்ற சூழல், சுதந்திரமாகச் செயல்படவும் தானாக முடிவுகளை எடுக்கவும் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. கல்வியுடன் உடற்பயிற்சி, வாசிப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டார். சமூக உறவுகளைச் சமநிலைப்படுத்துவதிலும் வெற்றி கண்டார்.
தனக்கென நேரத்தை ஒதுக்குவதை இந்த ஆண்டின் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார். தனிப்பட்ட விருப்பங்களைப் பேணுவதன் மூலம், தமது தனித்துவ அடையாளத்தை வலுவாகத் தக்கவைத்துக்கொள்ள அவர் விரும்புகிறார்.
இசையுலகில் புதிய உச்சம்
பெரிய மேடைகளிலும் புதிய இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் 23 வயது ‘டீஜே’ கலைஞர் பிரசேந்திரன் சுசீலனுக்கு 2025 அர்த்தமுள்ளதாய் அமைந்தது. உள்ளூர்ப் பாடகரும் இசையமைப்பாளருமான ஸ்டீஃபன் சக்கரியா போன்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அவருக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இருப்பினும், அழுத்தமான பணிச்சூழலுக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை பேணுவது அவருக்குச் சவாலாக இருந்தது.
இந்த ஆண்டில், இசைக்குழுவை வலுப்படுத்தவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ச்சியான தரமான இசையை வழங்கவும் அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
நிறைவான சேவை
கடந்த ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த 23 வயது டாக்டர் ரக்ஷா ஐயப்பன், பயிற்சி மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். நீண்ட நேர வேலையுடன் மற்ற பொறுப்புகள் காரணமாகக் கடந்த ஆண்டு அவருக்குச் சற்று சவாலாக இருந்தது. இருப்பினும், நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும் தருணங்கள் பணியின் மீதான அர்ப்பணிப்பையும் நோக்கத்தையும் உறுதிப்படுத்தின.
போதுமான உறக்கம், மன நலம், உடலநலம் பேணுதல், மேற்படிப்பு குறித்த தெளிவைப் பெறுவது போன்றவற்றை அவர் இவ்வாண்டு இலக்குகளாகக் கொண்டுள்ளார்.
தொழில்நுட்பத் திறன்
கணினி அறிவியல் துறையில் பயிலும் 22 வயது ந.ல. ஸ்ரீவத்சவிற்கு, 2025ஆம் ஆண்டு மன உறுதியையும் தன்னாய்வின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொடுத்தது. புதிய மனிதர்களைச் சந்தித்ததும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்களும் அவரது கண்ணோட்டத்தை மாற்றின. அனுபவங்களின் மூலம் பெற்ற படிப்பினையை 2026ல் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல அவர் உறுதியாக உள்ளார்.
கல்வி சார்ந்து, மதியுரைத் (Mentorship) திட்டங்களிலும் மென்பொருள் ‘ஹேக்கத்தான்’ (Hackathon) போட்டிகளிலும் பங்கேற்று திறன்களையும் ஆளுமையையும் விரிவுபடுத்த விரும்புகிறார். அதே நேரத்தில், நாட்குறிப்பு எழுதுதல், தியானம் போன்றவற்றில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.
புதிய கல்விப் பயணம்
‘ஏ’ நிலைத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் திரவியகணேஷ் கிருத்திகா, 19, பல்கலைக்கழக வாழ்க்கை, இடைக்காலப் பயிற்சிகளுக்காகத் தயாராகி வருகிறார். கடந்த ஓராண்டு முழுவதும் படிப்பிலேயே கவனம் செலுத்தியதால், புதிய ஆண்டில் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க விரும்புகிறார். உடல் நலம், கற்றல், குடும்பத்தின் நலம் ஆகியவற்றில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.
பன்முகத்திறன், பரந்த பார்வை
கடந்த ஆண்டு ‘எவரெஸ்ட் அடிவார முகாம்’ நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து, வாழ்நாள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார் 24 வயது மருத்துவ மாணவர் உதயமூர்த்தி ராஜேந்திரன். அத்துடன், பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அவரது கலைத் திறனை மேம்படுத்தியது.
இந்த ஆண்டு, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டுத் தேர்வுகளுக்காகத் தயாராகி வருகிறார். மேலும், சிங்கப்பூருக்கு வெளியே ஒரு கிராமப்புற மருத்துவப் பயிற்சியில் ஈடுபட ஆவலுடன் உள்ளார். வசதிகள் குறைந்த சூழலில் மருத்துவ சேவை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது, மருத்துவராக தமது பார்வையை மாற்றும் என்று நம்புகிறார்

