எஸ்ஜி 60 என்டியுசி கொண்டாட்டத்தில் இளமைத் துள்ளல்

2 mins read
eb93c8d7-1237-4533-aae6-27beda8a978c
தொண்டூழியர் ஃபாசில். - படம்: அனுஷா செல்வமணி

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு என்டியுசி தேசிய தின அணிவகுப்பு கொண்டாட்டத்திற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இளையர்களை மையப்படுத்தும் கருப்பொருள் கொண்ட கொண்டாட்டத்தின் ஏற்பாடுகளைப் பெரும்பாலும் இளையர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

என்டியுசி தேசிய தின அணிவகுப்பின் இளையர் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெறுவது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் பயிலும் 24 வயது ஷேக் அப்துல்லா முகமது ஃபாசிலுக்கு முதல் அனுபவம்.

பல காலமாகத் தொண்டூழியம் புரிந்து வந்தாலும் தேசிய தினக் கொண்டாடத்தில், குறிப்பாக எஸ்ஜி 60 கொண்டாட்டத்தில் பங்காற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறார் ஃபாசில்.

மற்ற கல்வி நிலைய சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பலவற்றை கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் இளையர்களைச் சென்று சேர வேண்டும் என்பது ஃபாசிலின் இலக்கு.

என்டியுசி தேசிய தின அணிவகுப்பு கொண்டாட்டத்தின்போது இளையர்கள் பயன்பெறும் வகையிலான காட்சிப் பதாகைகள் இடம்பெற உள்ளன.

அவற்றில் இடம்பெறும் தகவல்கள் பெரும்பாலானவற்றையும் ஃபாசிலும், இதர தொண்டூழியர்களும் சேர்ந்து திட்டமிட்டனர்.

சிங்கப்பூர், இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயமாக, குறிப்பாக, இளையர்களிடையே, இருக்க வேண்டுமென விரும்பும் ஃபாசில், பல இளையர்கள் தொண்டூழியம் புரிய முன்வர வேண்டும் என விரும்புகிறார்.

இளம் வயதிலிருந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஃபாசில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு ஆங்கில மொழியைக் கற்றுத் தருவது, அவர்களுக்கு இலவசத் தையல் வகுப்புகளை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்ட அவரது பாட்டிதான் ஃபாசிலின் முன்னோடி.

எழுத்தறிவு, தொழிற் கல்விக்கான அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு, ஃபாசிலின் நம்பிக்கையை, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதில் ஈடுபடுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்