தேர்வு நெருங்கும்போது நள்ளிரவைத் தாண்டிப் படிக்கும் மாணவர்கள் பலர்.
“என்னால் இரவு நேரத்தில் மேலும் நன்கு கவனம் செலுத்திப் படிக்க முடிகிறது. ஆனால், பகலில் மிகவும் களைப்பாக இருப்பதால் படித்தது எதுவும் ஞாபகத்தில் இருப்பதில்லை,” என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.
உறக்கம் என்பது மனிதனுக்கு ஓர் அடிப்படைத் தேவை. இருப்பினும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பலரும் தவறிவிடுகின்றனர்.
சிலர் தூக்கத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறைக்குத் தகுந்தாற்போல் உறங்கும் நேரத்தைக் குறைத்துத் தங்களையே பழக்கப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணிவிடுகின்றனர்.
இருப்பினும், அவ்வாறு பழக்கமாக்கிக்கொள்வதற்கும் அப்பாற்பட்டது உறக்கம் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன.
போதுமான நேரம் தூங்காமல் இருப்பதாலோ தொடர்ச்சியான, தரமான தூக்கம் கிடைக்காமல் போவதாலோ பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
பகல்நேரத்தில் தூங்கும் சாத்தியம் அதிகரித்தல், கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுதல், எளிதில் எரிச்சல் அடைதல், மனச்சோர்வுக்கு ஆளாகுதல் போன்றவற்றோடு ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
மாணவர்கள் 24 மணிநேரமும் இயங்கும் காப்பிக் கூடங்களில் தங்களின் பெரிய நீர்க் கோப்பைகளுடனும் காதில் இசை கேட்டவாறு மேசையில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டும் குறிப்புகள் எழுதிக் கொண்டும் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்தக் காட்சியை வழக்கமான ஒன்றாகக்கூட நாம் கருதுவோம்.
காப்பியில் உள்ள ‘கெஃபின்’, படிக்கும்போது தங்களுக்குக் கூடுதல் உத்வேகம் அளிப்பதாகக் கருதி முடிந்தளவு புத்தகங்களில் உள்ளதைத் தங்களின் மூளைக்குள் திணிக்க முயலும் கூட்டமும் உண்டு.
ஆனால், படிப்பதற்கு இது சரியான அல்லது மிகச் சிறந்த வழி என்று கருதலாமா?
ஒருவர் என்றும் விழிப்புநிலையில் இருப்பதற்குப் போதுமான உறக்கம் அவசியம். அந்த உறக்கத்தைத் தியாகம் செய்து படித்துச் சிறப்புத் தேர்ச்சி பெற்றுவிடலாம் என எண்ணுவது தவறாகும்.
தொடர்ந்து பல இரவுகளுக்குக் குறைந்த மணி நேரம் தூங்குவதால் மூளைச் செயல்பாடும் ஆற்றலும் மந்தமாகும். ஞாபக சக்தியும் பாதிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தில் இருவகை உண்டு. ஆழ்ந்த தூக்கம் ஒருவகை, மற்றொன்று கனவுகள் இல்லா வகையாகும்.
மூளை புத்துணர்ச்சி பெறவும் பழுது ஏதேனும் இருந்தால் சரிசெய்யப்படவும் நினைவாற்றல் மெருகேற்றப்படவும் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
எனவே, ஒருவர் தூக்கத்தில் எந்த அளவுக்குக் கனவு காண்கிறாரோ அந்த அளவுக்குப் புத்துணர்ச்சி பெறுவார் எனலாம்.
அண்மையில் பட்டப்படிப்பு பயிலும் 39,000க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே என்யுஎஸ்-டியூக் மருத்துவப் பள்ளி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
குறைந்த மதிப்பெண்கள், குறைந்த வருகைப் பதிவு ஆகியவற்றுக்கும் காலையில் நடைபெறும் வகுப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இரவு நேரம் கண்விழித்துப் படித்ததால் காலையில் சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலையை இது குறிப்பதாக உள்ளது.
சமூக ஊடகங்கள், கணினி விளையாட்டுகள் போன்றவற்றையும் மறந்திட முடியாது.
மின்னிலக்கக் கருவிகளின் திரைகளிலிருந்து வரும் வெளிச்சம், ஒருவரின் தூக்கத்தின் தரத்தைக் கெடுக்க வல்லது.
அத்துடன் மூளையின் ‘நியூரோன்’களை அது முடுக்கிவிடுவதால் தூக்கமின்மைக்கும் அது வழிவிடலாம்.
தொடர்ந்து உறக்கம் போதாத நிலையில், கவனம் செலுத்துவது கடினமாகும். நினைவாற்றல் மெதுவடையும். ஒருவரின் செயல்திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே, கண்விழித்துப் படிப்பதால் பலன் காண முடியாது என்பதை உணர்ந்து, நேரத்தைத் திட்டமிட்டுப் போதுமான ஓய்வு பெறுவதை மாணவர்கள் ஒவ்வொருவரும் வழக்கமாக்கிக் கொள்ள முயல வேண்டும்.