அன்றாடம் அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் மன உளைச்சலைக் குறைக்க சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) இளையர்கள்.
தெருசான் பொழுதுபோக்கு நிலையத்தில் பிப்ரவரி 23, மார்ச் 23 ஆகிய தேதிகளில் விளையாட்டுகள் நிறைந்த கேளிக்கை நிகழ்ச்சியையும் கைவினை நடவடிக்கைகளையும் அவர்கள் நடத்தினர்.
என்டியு தமிழ் இலக்கிய மன்றம், ‘பிக் அட் ஹார்ட்’ (Big At Heart) லாப நோக்கமற்ற அமைப்பு ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள், தின்பண்டங்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றுடன் ‘சோப் சைக்கிளிங் சிங்கப்பூர்’ என்ற அமைப்பு தயாரித்த மறுசுழற்சி செய்யப்பட்ட சவர்க்காரங்களும் வழங்கப்பட்டன.
என்டியு தமிழ் இலக்கிய மன்றத்தின் ‘நடைமுறையில் நெறிகள்’ என்ற தொண்டூழியத் திட்டத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இரு நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு எங்களால் முடிந்ததைச் செய்வதில் மனநிறைவு,” என்றார் என்டியு தமிழ் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் ஆகாஷ் மகாதேவன், 24.
“என்டியு தமிழ் இலக்கிய மன்ற இளையர்கள் அதிக ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த முயற்சியில் எங்களாலும் சிறு பங்காற்ற முடிந்ததில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார் ‘பிக் அட் ஹார்ட்’ அமைப்பின் இணை நிறுவனர் நளினி, 50.
‘என்டியு’ தமிழ் இலக்கிய மன்றம், ‘பிக் அட் ஹார்ட்’ பற்றிய மேல்விவரங்களுக்கு @thebigatheart @ntutls இன்ஸ்டகிராம் தளங்களை நாடலாம்.