பதின்ம வயதிலேயே தாய் தந்தையை இழந்து வாடினாலும், உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் கனவுடன் பயணித்து வருபவர் இளையர் செல்வா ராஜூ ஆறுமுகம், 26.
கடந்த பத்தாண்டுகளாகச் சிறப்புத் தேவைகள் உடைய இளையர்களுக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களைத் தலைமைத்துவம் ஏற்க ஊக்குவித்து வருகிறார் செல்வா ராஜூ.
பணி செய்வதையே கடமையாக ஏற்று, அதற்காக அறியப்படாத நாயகர்கள் விருதுகளில் ‘முன்மாதிரி இளையர்’ விருதின் இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் செல்வா.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மருத்துவத் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிந்து வருகிறார். சமூகத்திலும் முக்கியப் பங்காற்றி வரும் இவரது பயணம் முட்கள் நிறைந்தது.
தமது 16ஆவது வயதில் மாரடைப்பினால் தாயின் மறைவு. அதிலிருந்து மீளும் முன்னர், வயிற்றுப் புற்றுநோயால் படுக்கையில் வீழ்ந்த தந்தையைப் பராமரிக்க வேண்டிய நிலை. ஓடியாடித் திரிய வேண்டிய வயதில் ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் கழிந்ததை நினைவுகூர்ந்தார் செல்வா.
“பல நாள்கள் தந்தையின் உடல்நலனில் ஏற்பட்ட சிக்கலால் பதறியடித்து வீட்டுக்கு ஓடியிருக்கிறேன். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்கள் அவரைப் பராமரிப்பதில் சென்றது,” என்றார் செல்வா.
தமது 20 வயதில் தந்தையையும் இழந்தார் செல்வா. சகோதரிகள் வெளிநாடுகளில் வசிக்க, இந்த இழப்புகள் அவரைத் தனிமையில் வாட்டின.
பலரைச் சந்திப்பதையும், அவர்களுக்கு உதவுவதில் நேரம் செலவிடுவதன் மூலமும் தனிமையைப் போக்கத் தொடங்கினார் செல்வா. பள்ளியின் சமூக சேவைக் குழுவில் பங்கேற்றபோது ஏற்பட்ட விருப்பத்தைத் தொடர்ந்து மூத்தோரைச் சந்தித்துப் பேசுவது, அவர்களுக்கு உதவுவது ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினார்.
அவை தந்த மகிழ்ச்சி பிடித்துப்போகவே, சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியில் இணைந்தார். அங்கு ஓராண்டுக்காலம் தலைமைத்துவத் திட்டத்தை முடித்த செல்வாவின் கவனம் சிறப்புத் தேவையுடையோர் மீது திரும்பியது.
‘பிக் பிரதர், பிக் சிஸ்டர்’ திட்டத்தின் மூலம் சிறப்புத் தேவைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல், இளையர்களுக்கும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் செயல்படத் தொடங்கினார்.
“சிறப்புத் தேவையுடையோர்க்கு ஆதரவளிப்பதுடன், அவர்களைத் தனித்துச் செயல்பட ஊக்குவிப்பதும் முக்கியமானது. அவர்களை ஆதரவு பெறும் நிலையிலிருந்து, சமூகத்தில் பங்களிப்போராக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்ற செல்வா, சிறப்புத் தேவைகளுடைய இளையர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சியளிக்கிறார்.
விளையாட்டுமூலம் தன்னம்பிகை வளர்க்கும் பணியிலும் ஈடுபடும் இவர், பெருந்தொற்றுக் காலத்திலும் மனநலனை ஊக்குவிக்கும் வகையில் இணையவழி யோகா, தியான நிகழ்ச்சிகளை நடத்தினார்.
உள்ளடக்கிய சமூகம்குறித்த புரிதல் அனைவருக்கும் வரவேண்டுமெனக் கூறிய அவர், “சில நேரங்களில் சிறப்புத் தேவையுடையோரைச் சமூகம் பிற பொதுமக்களைப் போலப் பார்ப்பதில்லை. குறிப்பாக, அவர்களைப் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களும் சமூகத்தின் அங்கமாகப் பார்க்கப்பட வேண்டும். அவர்களைப் பார்க்கும்போது புன்னகைப்பது, அவர்களுடன் பழக முன்வருவது சிறப்பு. இந்நிலை முழுவதுமாக மாறச் சிறிது காலம் ஆகலாம். ஆனால் மாறும் என நம்புகிறேன்,” என்று புன்னகையுடன் சொன்னார் செல்வா.