கழிவறையைத் தூய்மைப்படுத்தும் பணியை இயந்திரமனிதரிடம் ஒப்படைத்தால் எப்படி இருக்கும்?
அதற்கெனவே இயந்திரமனிதர் ஒன்றை உருவாக்கியுள்ளனர் தெமாசெக் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அர்ஷினி தர்மராஜ், கிலேரின் ஹ, பக்வான் கோசிரிகஜோன். உலக இயந்திரமனிதர் ஒலிம்பியாட் போட்டிகளின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த அணிகளில் ஒன்று, அவர்களின் ‘டெக்னோவா’ அணி.
“எதிர்காலத்தில் கழிவறையைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு இன்றைய தலைமுறையினர் முன்வரமாட்டார்கள் எனக் கருதினோம்,” என்றார் பக்வான்.
மேலும், சிங்கப்பூரில் இன்றும் பொதுக் கழிவறைகளில் போதிய அளவு தூய்மை இல்லை என்பதற்குச் சான்றாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 2023ல் தீவு முழுவதும் நடத்திய ஆய்வைச் சுட்டினர் குழுவினர். அந்த ஆய்வில் 66 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகளில் பொதுக் கழிவறைகளின் தூய்மையில் எந்த முன்னேற்றமும் இல்லையெனக் கூறியிருந்தனர்.
அதனால், இயந்திரமனிதர் கொண்டு அப்பணியை இன்னும் சீராகச் செய்யலாம் என்ற எண்ணம் குழுவுக்குத் தோன்றியது.
“கழிவறை அசுத்தமாக இருந்தால் எங்கள் இயந்திரமனிதர், ‘இஎஸ்பி32-எஸ்3’ கேமரா மூலம் கண்டறிந்து கழிவறையைத் தூய்மைப்படுத்தும். அழுக்கு, கரைகளை அடையாளங்காண, 1,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்மூலம் செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சியளித்தோம்,” என்றார் கிலேரின்.
ஏற்கெனவே உள்ள ‘ஹைட்ரன்’, ‘சொமேடிக்’ போன்ற கழிவறைச் சுத்தப்படுத்தும் இயந்திரமனிதர்கள் சந்தையில் உள்ளன.
ஆனால், கழிவறை இருக்கையின் தூய்மையைக் கண்டறியும் ஏஐ, கழிவறையில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ திசுத்தாள் தீரவிருந்தாலோ உணரும் சென்சர்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கும் தமது இயந்திரமனிதர், சந்தையிலுள்ள மற்ற தீர்வுகளிலிருந்து வேறுபடுவதாகக் கூறினார் அர்ஷினி.
தொடர்புடைய செய்திகள்
தற்போது சிறிய உருவு மாதிரியாக இருக்கும் இந்த இயந்திரமனிதரை இன்னும் பெரிதளவில் உருவாக்க நிறுவனம் ஒன்று நாட்டம் தெரிவித்துள்ளதாகவும் குழுவினர் கூறினர்.
பார்வையற்றோருக்குக் கற்பிக்கும் இயந்திரமனிதர்கள்
தொடக்கநிலை (elementary) பிரிவில் இந்தியாவிலிருந்து வந்த ‘டீம் பிரேலியன்ஸ்’ (Team Brallience) குழுவினர் மூன்றாம் நிலையில் வந்தனர்.
கண்பார்வையற்றோர் இன்னும் எளிதாக ‘பிரெய்ல்’ எழுத்துக்கள், சொற்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன, அவர்களது ‘பிரெய்ல்’ இயந்திரமனிதர்கள். ‘லெகோ’ மூலம் அவர்கள் அவற்றை உருவாக்கியுள்ளனர்.
தம் இயந்திரமனிதர்களை அவர்கள் பள்ளிகளில் பார்வையற்றோருடன் சோதித்தும் உள்ளனர். “பலரும் தம் சொந்த மொழியில் இந்தத் தீர்வை எதிர்பார்க்கின்றனர். இதை எந்த மொழிக்கு ஏற்றவாறும் நாங்கள் மாற்றலாம்,” என்றார் திவிஷா ஷ்ரெனிக் ஷா.
கணினி முன்னால் ‘லெகோ’ செங்கல்லைக் காட்டினால் அது என்ன எழுத்து என ஒலிக்கும் தீர்வையும் விளக்கினார் விவான் வைபவ் ஷா.
சந்திரனைத் தொட விரும்பும் இளையர்கள்
சந்திரனின் மண்ணிலும் கற்களிலும் ‘இல்மெனைட்’ (Ilmenite) எனும் வேதியியல் பொருள் உள்ளது. அதிலுள்ள ஆக்ஸிஜன், ஹைடிரஜனைக் கொண்டு தண்ணீரை உருவாக்கலாம். அது விண்வெளி வீரர்களுக்குப் பயனளிக்கும். ‘இல்மெனைட்’டைக் கண்டறியும் இயந்திரமனிதரின் மாதிரியை உருவாக்கினர் ‘சாபுவெஸொடிரோனிக்’ அணி.
நிகழ்ச்சியில், ‘WRO Learn’ எனும் அனைத்துலக இலவச ரோபாடிக்ஸ் கற்றல் தளமும் (https://wro-learn.org/en_us/welcome) துவக்கம் கண்டது. உலகம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கு அது பன்மொழிகளில் பல வளங்களை வழங்கும்.

