பிரதமர் லாரன்ஸ் வோங் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிப்ரவரி 12ஆம் தேதி அறிவித்ததை அடுத்து, இளையர்கள் பல்வேறு கோணங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு, விளையாட்டு வசதிகள், கலாசாரப் பாதுகாப்பு போன்ற துறைகளில் முன்னேற்ற நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன என்று இளையர்கள் சிலர் கூறினர்.
அதேவேளையில், வாழ்க்கைச் செலவினம், மனநலம், வேலைவாய்ப்பு, போட்டித்தன்மை, இளையர்களின் வாழ்க்கைத் தரம் போன்ற சிக்கல்கள் குறித்து மேலும் தெளிவான தீர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அக்ஷயா ரா.சி, 20
குறைந்த கட்டணத்தில் தரமான விளையாட்டு வசதிகளைப் பெற வழிவகுக்கும் வகையில், விளையாட்டு வசதிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது உற்சாகமூட்டுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூரர்கள் எளிதாக விளையாட்டு வசதிகளைப் பெறும்போது, அவர்களது வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை இத்திட்டம் உருவாக்கக்கூடும்.
அதோடு, தொண்டூழியத் திட்டங்களின் மூலம் இளையர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து, சமூகத்துடன் இணைந்து வளர்ந்து, நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் ஊக்கமளிக்கிறது.
ஸ்ருதிகா குமார், 22
இந்த வரவுசெலவுத் திட்டம், மாற்றத்திற்கும் எதிர்காலத்திற்கும் சிங்கப்பூர் தயாராகி வருகிறது என்ற உறுதியை அளிக்கிறது.
‘சிங்கப்பூர் ஊழியரணி’, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ ஆகிய அமைப்புகள் இணைவது இளையர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். திறன்களையும் வேலைகளையும் மேற்பார்வையிடும் ஒரு கழகத்தை மனிதவள அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து மேற்பார்வையிடுவதால், திறன் மேம்பாட்டிற்குக் கூடுதல் ஆதரவு வழங்க முடியும் என்பது என் நம்பிக்கை.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், மனநலம் சார்ந்த ஆதரவு, இளையர்க்கான வீடமைப்பு, புதிய பட்டதாரிகளுக்கு ஆதரவு போன்ற அம்சங்களைப் பற்றிப் பிரதமர் குறிப்பிட்டிருக்கலாம்.
சஞ்சய் முத்துகுமரன், 24
நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ள இவ்வரவுசெலவுத் திட்டம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை விரிவுபடுத்தி வர்த்தகர்களுக்கு ஆதரவளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வகுப்பறைகளில் மாணவர்களின் ஈடுபாட்டையும் கற்றலையும் மேம்படுத்தும் ‘எடுவில்’ என்ற தளத்தை நான் உருவாக்கி வருவதால் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மேலும், புதிய தொழில் நிறுவனங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் கொடுக்கப்படும் ஆதரவு வரவேற்கத்தக்கது. புத்தாக்கத்தை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், மாணவர்கள் தங்கள் திட்டங்களை நிலைத்த தொழில்களாக மாற்றும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.
தொழில்நுட்பம், சமூக நலனுக்குப் பங்களிக்க விரும்பும் இளம் தொழில் முனைவர்களுக்குச் சிங்கப்பூர் துணைநிற்கும் என்ற உணர்வை இந்த வரவுசெலவுத் திட்டம் தருகிறது.
அனிகா சுகந்தராஜ், 20
புகையிலைப் பொருள்களுக்கு 20 விழுக்காடு கூடுதல் வரி விதித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இளையர்கள் தொடர்ந்து தவறான பழக்கங்களுக்கு அடிமையாவது வழக்கமாகிவிட்டதால் அதைக் குறைப்பதற்கு அதிரடியாக எடுக்கப்பட்ட இம்முடிவு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக மின்சிகரெட் குற்றங்களுக்கு எதிராகப் பல முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், தற்போது அடுத்தபடியாகப் புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது.
ஆனாலும், மனநலம் குறித்த திட்டங்கள் பிரதமர் உரையில் இடம்பெறவில்லை. இளையர்கள் பலர் மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் உழன்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டங்களைப் பிரதமர் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மோகன் ஹரிவர்த்னி, 20
இளையர் ஆலோசனைக் குழுக்கள் மூலம் இளையர்கள் அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் பயனளிக்கிறது.
பிரதமரும் அரசாங்கமும் இளையர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களது கருத்துகளை முதன்மைப்படுத்துகின்றனர் என்று தெரிவிப்பதோடு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் இத்திட்டம் வழங்குகிறது.
இளையர்கள் பலரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது கல்வி. கல்வித்துறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று பிரதமர் உரையாற்றாதது சற்று வருத்தமளித்தது.
சேக் தாவுட், 23
மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள $500 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் இளையர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். செலவினங்களைக் கையாள முயலும் மாணவர்களுக்கு இப்பற்றுசீட்டுகள் உதவியாக இருக்கும்.
முக்கியமாக, புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம் ஒன்றைத் தொடங்கி அதற்குப் பிரதமரே தலைமை தாங்குவது சிறப்பு அம்சமாக அமைகிறது.
வேகமாக மாறிவரும் இக்காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் பங்கேற்று ஆறு மாதங்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்ற திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். உயர்கல்விக் கழகங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பது இளையர்களை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்துவதோடு, அவர்களது வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும்.
கண்ணன் வைஷ்ணவி, 21
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் தெளிவான நீடித்த திட்டம் எதுவும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை.
பற்றுச்சீட்டுகள், ரொக்க உதவி போன்றவற்றை வழங்கி வந்தாலும், $200 அல்லது $500 போன்ற தொகைகள் அதிகபட்சம் ஒரு மாதச் செலவிற்கே போதுமானவை. இவை தற்காலிகத் தீர்வுகளாக மட்டுமே விளங்குகின்றன.
அதிகரிக்கும் வீட்டு வாடகை, உணவு மற்றும் அன்றாடச் செலவுகளின் மூல காரணங்களைக் கையாள உதவும் நடைமுறை தீர்வுகள் தேவை. இளையர்களின் நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதிசெய்யும் செயல்திட்டங்களே இப்போது அவசியம்.
ரகுநந்தன், 22
தொலைநோக்குப் பார்வையுடன் இயற்றப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே நான் இதைக் கருதுகிறேன்.
சிங்கப்பூரர்களின் வருங்காலம் ஒளிமயமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த வரவுசெலவுத் திட்டம் தருகிறது. செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை சரியான வழியில் பயன்படுத்தி, தொழில்களையும் திறன்களையும் நம்மால் பெரிதும் முன்னேற்ற முடியும். தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான நிதியுதவி போன்றவை இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்ட வரவுசெலவுத் திட்டம் இது என்பதை எடுத்துக்கூறுகின்றன.
அதோடு, நீண்ட நாள் முதலீடுகளையும் சேமிப்பையும் வளர்க்க புதிய மத்திய சேம நிதித் திட்டமும் உதவும்.
வருண் சீனிவாசன், 21
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இளையர்களின் வாழ்க்கைத் தரம், குறிப்பாக நல்ல உறக்கம், ஒழுங்கான வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம், மனநலம் போன்றவற்றில் தெளிவான கவனம் செலுத்தப்படவில்லை.
சுகாதாரப் பராமரிப்பு, மனநலம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உதவும் திட்டங்கள் தேவை. இளையர்கள் உடல்-மன ரீதியாக வலுவாக இருந்தால்தான் நாட்டின் எதிர்காலமும் உறுதியானதாக இருக்கும்.
சுபத்ரா பிரபாகரன், 19
இந்திய மரபுடைமை நிலையத்திற்குக் கூடுதல் ஆதரவு வழங்கி நம் கலாசாரத்தைக் கட்டிக்காக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று கூறியது ஆர்வமூட்டுவதாக அமைகிறது.
மரபுகளைத் தட்டிக்கழிக்கும் போக்கு தலைதூக்கி வருவதால், மரபுடைமை நிலையங்களுக்கு மக்கள் செல்வதற்குக் கூடுதல் ஆதரவு வழங்குவது தேவைக்கு ஏற்ப எடுத்துள்ள சரியான முடிவாக விளங்குகிறது.
இருப்பினும், கலை, மொழித் துறைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படலாம் என்று நினைக்கிறேன். இன்றைய இளையர்களில் குறைவான எண்ணிக்கையினர் மட்டுமே கலை அல்லது மொழியை முதன்மைப் படிப்பாகவும் வாழ்க்கைத்தொழிலாகவும் தேர்வு செய்கிறார்கள்.
உறுதியான வாய்ப்புகள் இல்லாததால், ஆர்வமுள்ளவர்கள்கூட தங்கள் திறமையைத் தொழிலாகத் தேர்வு செய்யத் தயங்குகின்றனர். பட்டம் பெற்றபின் கடும் போட்டி நிலவும் சூழலில் அது குறித்தும் பிரதமர் திட்டங்களை அறிவித்திருக்கலாம்.

