தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோரை மகிழ்வித்து நலம் காக்கும் இளையர்கள்

3 mins read
5e494d7f-e0a2-48ad-b534-9d0f00f4276f
‘டிரைஜென்’ அமைப்பைச் சேர்ந்த இளம் தொண்டூழியர்களுடன் தம்படம் எடுத்துக்கொண்ட தகவல் , மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம். - படம்: டிரைஜென்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருந்து உற்பத்தித் துறையில் பட்டம் பெற்ற ஷிவாகிரி நாதன் ஜெயன், 21, படித்துக்கொண்டிருந்தபோது இந்தத் திட்டத்தைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதாகக் கூறினார்.

கொவிட்-19 பரவலின்போது செயல்படுத்தப்பட்ட கிருமிப்பரவலை முறியடிக்கும் திட்டம் ஒரு முடிவிற்கு வந்த நிலையில் முதியோர் பலருக்கு உதவி தேவைப்பட்டதை நினைவுகூர்ந்தார். அவர்களுக்குக் கைகொடுக்க எண்ணியதால் தம் நண்பர்களுடன் டிரைஜென் (Trigen) அமைப்பில் சேர்ந்தார்.

“எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்போது பள்ளி விடுமுறை. மருத்துவம் பற்றிப் பள்ளியில் கற்றதைப் பிறருக்குப் பயனளிக்கும் வகையில் பயன்படுத்த எண்ணியிருந்தோம். டிரைஜென், சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய தொண்டூழிய அமைப்பு என்பதால் அத்துறையைச் சேர்ந்த நாங்கள், எங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றோம்,” என்றார் தற்போது தேசிய சேவை ஆற்றிவரும் ஷிவா.

நண்பர்களுடன் தொண்டூழியத்தில் ஈடுபட்ட ஷிவா, 21, மூன்று ஆண்டுகளாக அதனைத் தொடர்ந்து செய்தார்.
நண்பர்களுடன் தொண்டூழியத்தில் ஈடுபட்ட ஷிவா, 21, மூன்று ஆண்டுகளாக அதனைத் தொடர்ந்து செய்தார். - படம்: ஷிவாகிரி நாதன் ஜெயன்

ஓய்வு நேரங்களில் ஷிவா, லிவர்பூல் காற்பந்துக் குழு விளையாடுவதை ரசித்துப் பார்ப்பார். ‘எஃப்1’ கார் பந்தயம் மீதும் அவருக்கு ஆர்வமுண்டு. அவற்றுக்காக அவர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சில மணி நேரந்தான் செலவு செய்கிறார்.

“தேர்வு நேரத்தில் மாதம் ஒருமுறை மட்டும் செல்வேன்,” என்கிறார் இவர்.

முதியோரின் வீடுகளுக்குச் சென்று ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துதல், ‘ஹெல்த்படி’ (HealthBuddy) செயலியைப் பதிவிறக்கம் செய்தல் போன்ற பயனுள்ள மின்னிலக்கத் திறன்களை ஷிவா அவர்களுக்குக் கற்றுத் தருவார்.

பின்னர் 2022ல் ஷிவா, ஹோம்கேர் என்ற ஆறு மாதத் திட்டத்தில் சேர்ந்து முதியாேருக்கான தம் பராமரிப்பை மேலும் வளர்த்துக்கொண்டார்.

“வயதான நீரிழிவு நோயாளி ஒருவருக்குச் சிறுநீர்ப்பாதைத் தொற்றும் கால் வீக்கமும் ஏற்பட்டபோது அவரது மருந்து மாத்திரைகளைக் கையாள உதவினேன்,” என்றார் ஷிவா. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தாம் உணர்ந்த மனநிறைவு மேலும் கூடியிருப்பதாக ஷிவா கூறினார்.

“நான் சந்தித்துப் பேசும் முதியவர்களின் முகம் மலரும்போது என் மனமும் மகிழ்கிறது. நான் வராவிடினும் அவர்கள் என்னைப் பற்றி விசாரிக்கின்றனர். இத்தகைய உறவில் நாங்கள் தொடர்ந்து இணைந்திருக்கிறோம்,” என்றார் ஷிவா.

நான் சந்தித்துப் பேசும் முதியவர்களின் முகம் மலரும்போது என் மனமும் மகிழ்கிறது. இத்தகைய உறவில் நாங்கள் தொடர்ந்து இணைந்து இருக்கிறோம்.
ஷிவாகிரி நாதன் ஜெயன், 21

நல்வழிப்படுத்தும் உத்திகளைக் கற்றார்

வேலை செய்வதற்குரிய அடிப்படைத் திறன்களைப் பள்ளியில் கற்று வேலையிடத்தில் பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

ஆனால், ஒருவர் தாம் தேர்ந்தெடுத்துள்ள துறையின் அதிநுட்பங்களைப் புரிந்துகொள்ள ஆசைப்பட்டால் சேவை மனப்பான்மையுடன் தமது துறையை அணுகவேண்டும்.

சுகாதாரத்தில் உள்ள அறிவியல் மட்டுமன்றி சமூகத்தைப் பற்றியும் நினைப்பதாக 21 வயது ராயன் கூறுகிறார்.
சுகாதாரத்தில் உள்ள அறிவியல் மட்டுமன்றி சமூகத்தைப் பற்றியும் நினைப்பதாக 21 வயது ராயன் கூறுகிறார். - படம்: ராயன் கிருஷ்ணன்

தேசிய பல்கலைக்கழகத்தில் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியில் தற்போது மருத்துவத்துறையில் பயிலும் மாணவர் ராயன் கிருஷ்ணன், 21, தொண்டூழியம் மூலம் மருத்துவம் பற்றிய தம் புரிதல் விரிவடைந்ததை உணர்ந்தார்.

2020ல் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் பயின்றபோது டிரைஜென் அமைப்பில் சேர்ந்த ராயன், பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அந்த அமைப்பின் மத்திய செயற்குழுவில் செயலாளராகவும் பொருளாளராகவும் செயல்பட்டார்.

முதியோரைச் சந்தித்துப் பேசும்போது தொடர்புத்திறனும் சமூகத்தைப்பற்றிய புரிதலும் மேம்படுவதாகக் குறிப்பிட்டார்.

“அதுவரை, ஒருவரது உடல்நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்த்துவந்த என்னை இந்த அனுபவங்கள், சமூகம் பற்றியும் சிந்திக்கத் தூண்டின,” என்று அவர் கூறினார்.

நோயாளிக்குப் பிரச்சினை ஏற்படும்போது அதனைச் சரிசெய்வது பற்றி மட்டும் எண்ணாமல் அவர்கள் நலமாக இருக்கும்போது அன்பாக நலம் விசாரிப்பதும் சுகாதாரப் பராமரிப்பிற்கு முக்கியம் என்பது ராயன் கற்ற முக்கியப் படிப்பினை.

“உங்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று தொண்டூழியர்களான நாம் பிறரிடம் கேட்கிறோம். ஆனால் உங்களுக்கு எது முக்கியம் என்ற கேள்வியை இயன்றவரை பிறரிடம் கேட்பதும் நல்லது. ஏனெனில், அந்தக் கேள்விக்கான பதில் தெரியும்போது அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படக்கூடும்,” என்று அவர் கூறினார்.

நம்மிடம் சரியாகப் பேச மறுப்போரிடத்திலும் இத்தகைய கேள்விகளைக் கேட்டு அவர்களது திறன்களையும் பாராட்டலாம். இதன்மூலம் அவர்களுக்குள் இளகியதன்மை மலர்ந்தால் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணம் உண்டாகலாம் என்ற உத்தியையும் இந்த இளையர் குறிப்பிட்டார்.

ஒருவரது உடல்நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்த்துவந்த என்னை இந்த அனுபவங்கள், சமூகம் பற்றியும் சிந்திக்கத் தூண்டின.
ராயன் கிருஷ்ணன், 21
குறிப்புச் சொற்கள்