தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கத்தைப் பறிக்க முயற்சி: மோசடித் திட்டம் முறியடிப்பு

4 mins read
1753b25c-6591-4fb8-b5cf-b724537ddc42
தமது சேமிப்பை வைத்து $52,000 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கி அதனை ஒரு அறியாத நபரிடம் ஒப்படைத்தார். - படம்: கெட்டி இமேஜஸ்

கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மாலை வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணத்தையும் எடுத்தார் 65 வயது நபர். அதை இரு அடகுக் கடைகளுக்கு எடுத்துச் சென்று $52,700 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கினார்.

பின்னர், மோசடிப் பேர்வழிகள் கூறியதுபோல பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்துக்குச் சென்று, முன்பின் தெரியாத பெண்ணிடம் அதனை ஒப்படைத்தார்.

உடனடியாக அவரிடமிருந்து அதனைப் பெற்றுக்கொண்ட அப்பெண், எதுவும் பேசாமல் வேகமாகச் சென்றுவிட்டார்,” என்றார் திரு செங்.

வீடு திரும்பியதும் நடந்ததை மனைவியிடம் விளக்கிக் கூறிய அவரிடம், “இது மோசடி” என்று மனைவி கூறவே திகைத்துப் போனார் அவர்.

தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி, இரு வாரங்களுக்குப் பின்னர் ஜூலை மாதம் ஓய்வு பெற்ற அவர், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் விசாரணைக்கு அதிகாரிகளுக்கு உதவுவதாக நினைத்தார்.

இந்த மோசடி ஜூன் 19ஆம் தேதி பிற்பகல் தொடங்கியது. பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசிய அந்நபர் நிதிச் சேவை நிறுவனமான ‘யூனியன் பே’ நிறுவனத்திலிருந்து அழைப்பதாகவும் சொன்னார். தொடர்ந்து, திரு செங், அண்மையில் புதிய காப்புறுதித் திட்டத்தில் இணைந்துள்ளதாகச் சொன்னார். தாம் குழப்பமடைந்ததாகவும், “புதிய காப்புறுதியில் சேரவில்லை. தவறான தகவலாக இருக்கலாம்,” என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

அந்த ‘யூனியன் பே அதிகாரி’ அத்திட்டத்தை ரத்து செய்வதாகவும், ஆனால் அவரது தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கவலையடைந்த திரு செங்கிடம், நாணய ஆணையத்தைத் தொடர்புகொள்ள தாம் உதவுவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதன்பின்தான் திருப்பங்கள் நிகழத் தொடங்கின.

மூன்று மணி நேரம் நீடித்த அந்த அழைப்பில், இரு “நாணய ஆணைய அதிகாரிகள்” திரு செங்கின் தகவல்கள் காப்புறுதித் திட்டம் பெற பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தச் சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்களுக்குப் பணமோசடி நடவடிக்கையுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறினர்.

“அந்த அதிகாரி சூழ்நிலையை அமைதியாக விளக்கினார்,” என்று நினைவுக்கூர்ந்தார் திரு செங்.

அப்பிரச்சினையைச் சரி செய்யத் தெளிவான வழிமுறைகளை அவர்கள் வழங்கினர்: ‘பாதுகாப்பு’ கருதி வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து, தங்கக் கட்டிகளாக மாற்றித் தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.

அதற்கு இணங்கிய அவர் புதிய வகை ஆள்மாறாட்ட மோசடி வலையில் சிக்கினார்.

மோசடி வலை விரித்தல்

ஜூன் 2025ல் மட்டும் குறைந்தது 80 அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், பாதிக்கப்பட்டவர்கள் $6.7 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகவும் சிங்கப்பூர்க் காவல்துறை குறிப்பிட்டது.

இதற்கு முன்னதாக இதே போன்ற ஆள்மாறாட்ட மோசடிகளில், ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’, பணத்தை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்லி மோசடிப் பேர்வழிகள் வலியுறுத்தினர்.

மோசடிகள் தற்போது மேம்பாடு அடைந்துள்ளன.

இந்தப் புதிய வகை மோசடியில், மோசடிக்காரர்கள் முதலில் நிதிச் சேவை வழங்குநர் போலப் பேசி, பின்னர் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பணமாகவோ தங்கமாகவோ பெற்றுக்கொள்கின்றனர்.

“மோசடிப் பேர்வழிகள் அதிகாரிகளின் மீதுள்ள நம்பிக்கை, அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்கும் தன்மையையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்,” என்று சொன்னார் சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடிப் பொதுக் கல்வி அலுவலகத் துணை இயக்குநர் ஜெஃப்ரி சின். “பயத்தைத் தூண்டி, சிக்கலிலிருந்து விடுபட வேண்டும் எனும் அவசர உணர்வைப் பயன்படுத்தி சிந்தித்துச் செயல்படும் தன்மையைக் குறைக்கின்றனர்.”

சில சந்தர்ப்பங்களில், மோசடிப் பேர்வழிகள், “நிலைமையைத் தீர்க்க உண்மையான அக்கறை இருப்பது போலக் காட்டிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டோரை நம்ப வைக்கின்றனர்,” என்றார் திரு சின்.

அதிக நம்பகத்தன்மையைப் பெற, மோசடிப் பேர்வழிகள், பாதிக்கப்படுவோரின் முழுப்பெயர், அடையாள அட்டை எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பகிர்கின்றனர். “உங்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒருவரிடம் இருப்பதால் மட்டும் அவர்களை நம்ப வேண்டாம்,” என்று எச்சரித்தார் சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடிப் பொதுக் கல்வி அலுவலகத் துணை இயக்குநர், காவல் கண்காணிப்பாளர் மேத்தியூ சூ.

பொதுமக்களுக்கு ஒருபோதும் பணத்தையோ அல்லது மதிப்புமிக்க பொருட்களையோ அந்நியர்களிடம் ஒப்படைப்பது, வேறு ஒருவர் எடுத்துச் செல்ல ஏதுவாக எவ்விடத்திலும் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“நான் திகைப்புடன் இருந்தேன்,” என்று சொன்ன திரு செங், இது ஒரு மோசடி என உணர்ந்த தருணத்தை நினைவுக்கூர்ந்தார். “இதனை ஒரு நாணய ஆணைய மோசடி என நம்பி எப்படி ஏமாற இருந்தேன்? இதில் எந்தப் பேராசையும் இல்லை, உண்மையிலேயே உதவ விரும்பினேன்,” என்றார்.

அவர் அதே இரவு காவல்துறையில் புகாரளித்தார், “அதிர்‌ஷ்டவசமாக புகாரளித்தேன்,” என்றார் திரு செங்.

தங்க வில்லைகளைப் பெற்ற அப்பெண் மறுநாள் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டார். ஒரு வாரம் கழித்து, அப்பெண்ணை அடையாளம் காண காவல்துறையினர் திரு செங்கை அழைத்தனர். அரிதான வகையில், இழந்த அனைத்துத் தங்க வில்லைகளும் முழுமையாக மீட்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்