தூங்கா நகரமான மதுரை மாநகரத்தின் அறுசுவை உணவு தொடர்ந்து தம் நாக்கிலும் மனத்திலும் நீங்கா இடம்பிடித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மக்களும் அந்த உணவுவகைகளைச் சுவைத்துப் பார்க்க விரும்பினார் திரு மாணிக்கம் குமரேசன், 41.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி லிட்டில் இந்தியா வட்டாரத்தின் அப்பர் டிக்சன் சாலையில் அதிகாரத்துவமாகத் திறக்கப்பட்டது ‘குமார் மெஸ்’ உணவகம்.
நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை, முழுக்க முழுக்க மதுரை மணம் வீசும் உணவுவகைகள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுவது இந்த உணவகத்தின் சிறப்பு.
ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிமுதல் 6 மணிவரை உணவகம் சிறிது நேரம் மூடப்படும்.
மதுரை வீதிகளில் பரவலாகத் தென்படும் ‘பன்’ பரோட்டா, கறிதோசை, கோலா உருண்டை போன்ற உணவுவகைகள், சாப்பிட்டபின் அருந்தப்படும் நாவிற்கு இனிமையான ஜிகர்தண்டா, பருத்திப்பால் போன்றவற்றை ‘குமார் மெஸ்’ உணவகம் வழங்குகிறது என்கிறார் திரு குமரேசன்.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்து கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் திரு குமரேசன், சிங்கப்பூர் உணவுத் துறையில் அனுபவம் மிக்கவர்.
“அசைவ உணவுடன் மதுரைக்குச் சொந்தமான தள்ளுவண்டி பக்கோடா, ‘சாலையோர’ காளான் போன்ற புகழ்பெற்ற சைவ உணவுவகைகளையும் வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்யலாம்,” என்கிறார் இவர்.
இந்நிலையில், அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே உள்ள ‘321’ கடைத்தொகுதியில் இரண்டாவது கிளையைத் திறக்கவுள்ளது குமார் மெஸ்.
தொடர்புடைய செய்திகள்
காலை 10 மணி தொடங்கி இரவு 11 மணிவரை சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதுரைச் சுவையைக் கொண்டுசேர்க்கவுள்ளது அவ்வுணவகம்.
“சிங்கப்பூர் இந்திய உணவுத் துறையில் காலெடுத்துவைத்த குறுகிய காலத்திலேயே எங்களுக்குச் சிங்கப்பூர் மக்கள் பெரிதும் வரவேற்பு தந்துள்ளனர். அவர்களுடைய ஆதரவால் இப்போது ‘குமார் மெஸ்’ இரண்டாவது கிளையைத் திறக்கவுள்ளோம்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திரு குமரேசன்.
அதுமட்டுமின்றி, பொருள், சேவை வரியையும் (ஜிஎஸ்டி) ‘குமார் மெஸ்’ உணவகம் வசூலிப்பதில்லை என்பது அதன் மற்றுமொரு சிறப்பு.
சிங்கப்பூரர்கள் ‘குமார் மெஸ் முட்டை சூப்’பை அதிகம் விரும்புவதாகக் கூறினார் திரு குமரேசன்.
“நண்டு ஆம்லெட், சீரக சாம்பா பிரியாணி, இறைச்சி மற்றும் கோழி வைத்த கிழி பரோட்டாவையும் அதிக வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்கின்றனர்,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்ந்து சிங்கப்பூரில் மதுரை மணத்தையும் சுவையையும் மேலும் மேம்படுத்துவதை அவர் தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
“நான் விரும்பும் மதுரையின் உணவை இங்கு வாழும் மக்களும் விரும்ப வேண்டும். தொடர்ந்து அந்தச் சுவைகளை செம்மைப்படுத்தி இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,” என்கிறார் திரு குமரேசன்.

