ஆங்கிலத்தில் புலமைபெற சிங்கப்பூரர்கள் கொடுத்த விலை

டாக்டர் டியோ கே கீ

சிங்கப்பூரர்களுக்கு தங்களது இருமொழித் திறன் குறித்த பெருமை உண்டு. சீனர்களுக்கு மாண்டரின், மலாய்க்காரர்களுக்கு மலாய், தமிழ் பேசும் இந்தியர்களுக்குத் தமிழ் என 1960களில் இருந்து பள்ளிகள் தாய்மொழியுடனேயே ஆங்கிலத்தைக் கற்பித்து வருகின்றன. மொழிப் பாடங்கள் தவிர்த்து, சிங்கப்பூர் பள்ளிகளில் முக்கிய போதனை மொழியாக ஆங்கிலம் உள்ளது.

ஆங்கிலம் பொது மொழியாக இருக்கும் உலகில், ஆங்கில அறிவு நமக்கு போட்டித்திறனைக் கொடுத்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலம் கற்பதும் பேசுவதும் சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தை ஒருங்கிணைக்க உதவியது என்றும் விவாதிக்கலாம்.

எனினும், பல ஆண்டுகளாக இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பதால் இழப்பையும் சந்தித்துள்ளோம். சிங்கப்பூர் மக்கள் ஆங்கிலத்தில் திறன் பெற்றுவரும் அதேவேளையில் தாய்மொழி மீதான பிடியை இழந்து வருகின்றனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகம் இனம், சமயம், மொழி தொடர்பாக 2013, 2018ஆம் ஆண்டுகளில் நடத்திய இரு வேறு ஆய்வுகளில் ஆங்கிலத் தேர்ச்சி உயர்ந்துள்ள வேளையில், அனைத்து இனங்களிலும் தாய்மொழித் தேர்ச்சி குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மற்ற மொழிப் பள்ளிகளை மூடுவது உட்பட இருமொழிக் கொள்கை முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக இது இருக்கலாம்.

அத்துடன், குறிப்பிடத்தக்க வகையில், ஆங்கிலம் படித்தவர்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். ஆங்கிலக் கல்வி மக்களிடம் ஏற்படுத்திய உயர்வு மனப்பான்மை இன்றும் உணரக்கூடியதாக உள்ளது. கல்விக்கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆங்கிலத்திற்கான இந்த வளர்ந்து வரும் விருப்பத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆங்கிலம் முதல் மொழியாகக் கற்பிக்கப்படும் நிலையில், சில மாணவர்களுக்கு தாய்மொழிப் பாடம் கடினமாக உள்ளது என்பதால் தொடர்ந்து தாய்மொழியில் எளிமைப்படுத்தப்பட்ட ‘பி’ பாடத்திட்டம் 1990களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலருக்கு வீட்டில் பேசும் மொழியும் பள்ளியில் படிக்கும் தாய்மொழியும் ஒன்றாக இல்லாதபோது படிப்பதில் சிரமம் ஏற்படலாம். ஆனால், அத்தகைய பிரச்சினைகள் இல்லையென்றாலும் சிக்கப்பூரர்களின் தாய்மொழித் திறன் குறைந்தே வருகிறது.

பெரும்பாலான சிங்கப்பூரர்களால் தங்கள் தாய்மொழியில் சாதாரணமாக உரையாட முடிகிறது. ஆனால், நாவல் வாசிக்கவோ அல்லது சிக்கலான கருத்தாக்கங்களை முன்வைக்கவோ முடியாது உள்ளனர். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. சமயம், அரசியல், தொழில்நுட்பம் போன்றவை குறித்து தங்கள் தாய்மொழியில் விவாதிக்க முடியும் என்று கூறியோர் எண்ணிக்கை 2013ல் இருந்ததைவிட 2018ல் குறைந்துள்ளது. 2018ல் 45 விழுக்காட்டு தமிழர்களே தங்களால் தாய்மொழியில் ஆழமான விவாதங்களை முன்னெடுக்க முடியும் எனக்கூறினார்.

தாய் மொழித்திறன் விரைவாக குறைந்து வருவதைக் காட்டும் இப்போக்கு கவலைக்குரியது.

இருமொழி அல்லது பல மொழி பேசுவோர் பெறும் அனுகூலங்களுக்கு அப்பால், தாய்மொழித்திறன் குறைந்து வருவது, நமது அடையாளம் குறித்த நம் அறிவு நீர்த்துப் போவதற்கான அறிகுறி என்பதை உணர வேண்டும். ஒருவரின் பண்பாடு, மரபுடைமையின் சேமிப்பகமாக மொழி உள்ளது.

சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்த பண்பாட்டுப் புரிதல் தேவை. இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது நமது மரபுடைமையுடன் உணர்வுபூர்வமான இணைப்புக்கு ஒரு வழியாகும். அடிப்படையான உரையாடல் திறனை மட்டுமே தக்கவைத்துக்கொண்டால் அல்லது அதைவிட மோசமாக, தாய்மொழியைப் புரிந்துகொள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் சார்ந்திருந்தால் இந்த இணைப்பை இழந்துவிடுவோம்.

ஆங்கிலம் கற்பதால் சிங்கப்பூரர்கள் பெற்றுள்ள அனுகூலங்களை குறைத்து மதிப்பிடுவது இங்கே நோக்கமல்ல.

சிங்கப்பூரர்களின் ஆங்கிலத் திறன் நாட்டின் பொருளியல், வளர்ச்சிப் பாதையில் செல்ல உதவியுள்ளது.

பல இன மக்களுக்கு ஆங்கிலம் ஒரு பொது மொழி. எந்தவொரு தனிப்பட்ட சமூகத்தின் தாய்மொழியாகவும் இல்லாததால், இதுசார்பற்ற மொழியாகவும் உள்ளது. இது பல்வேறு இனங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கிறது.

ஆனால், தாய்மொழியை இழந்து இவற்றை பெற வேண்டுமா என்பதுதான் கேள்வி.

அதிகமான குடும்பங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுவதால், பிள்ளைகள் இருமொழித் திறனைப் பெறுவது கடினமாகிறது.

நல்லவேளையாக, இந்தப் பிரச்சினையைக் களைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கற்றலை மேலும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவதை நோக்கமாகக்கொண்ட 2023 தாய்மொழிக் கருத்தரங்கில் புதிய 2024 தாய்மொழிப் பாடத்திட்டம் அறிமுகமாகும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்தார்.

வகுப்பறைக்கு வெளியே தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அது வழங்கும்.

ஆங்கிலத்தில் சிறந்திருப்பதைவிட, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பதன் நடைமுறை நன்மைகளை சிங்கப்பூரர்கள் உணர்கிறார்கள். குழந்தைகளுக்கான மொழி செறிவூட்டல் வகுப்புகளும் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நடைமுறைக் காரணங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்மொழியைக் கைக்கொள்வது முக்கியம். நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்பதன் ஓர் அடையாளம் தாய்மொழி.

- டாக்டர் டியோ கே கீ சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கொள்கை ஆய்வுக் கழக ஆய்வியலாளர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!