சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில் பங்கேற்க சிங்கப்பூருக்கு வந்த பாலிவுட் பிரபலம் அமீர் கானைக் காண மலேசியா முதல் சீனா வரை பல பகுதிகளிலிருந்து ரசிகர்கள் இங்கு திரண்டனர்.
கோலாலம்பூரிலிருந்து வந்த ரசிகர்
2001ஆம் ஆண்டு அவர் நடித்து அமோக வெற்றிகண்ட ‘லகான்’ திரைப்படம், அதன் 25வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி விவோசிட்டி கடைத்தொகுதியில் உள்ள கோல்டன் வில்லேஜ் திரையரங்கில் திரையிடப்பட்டது. அதைப் பார்க்க நுழைவுச்சீட்டு கிடைக்காதபோதும் சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழா சிவப்புக் கம்பள அங்கத்தை நேரில் காண கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்தார் வழக்கறிஞர் உதவியாளர் கேரலின் சைமன், 61.
“அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் இங்கு வந்தபோது வாய்ப்பைத் தவறவிட்டேன். எனது மகளையும் அழைத்து வந்தேன். ஆனால், அவரைக் காண முடியவில்லை,” என்றார் அவர்.
இம்முறை அவர் தனியாக வந்தார். சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில் அமீர் கானின் கையெழுத்தைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் திருவாட்டி கேரலினும் ஒருவர். ‘3 இடியட்ஸ்’, ‘லகான்’ தனக்கு மிகவும் பிடித்தமான அமீர் கான் படங்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆஸ்கார் வரை சென்ற ‘லகான்’
‘லகான்’ ஆஸ்கார் விருதுகளுக்கு முன்மொழியப்பட்ட இந்தியத் திரைப்படமாகும். தங்களை ஆண்ட காலனித்துவ ஆட்சியாளர்களான பிரிட்டிஷ்காரர்களை கிரிக்கெட்டில் எதிர்பாரா விதமாக இந்திய விவசாயிகள் வென்றதுதான் அப்படத்தின் கதையம்சம். சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள அங்கத்தின் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட ‘லகான்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 600 பார்வையாளர்கள் அப்படத்தை ஒன்றாகக் கண்டுகளித்தனர்.
கலந்துரையாடல்
சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக அக்டோபர் 22ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் நிகழ்ச்சி அறையில் அமீர் கானுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. அதில் அவர் இவ்வாண்டுக்கான திரைச் சின்ன விருதைத் தம் நண்பரும் ஹாங்காங்கில் பிறந்த இயக்குநருமான பீட்டர் சானிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
கலந்துரையாடலை சிங்கப்பூரின் மேடை நகைச்சுவைக் கலைஞர் ரிஷி புத்ரானி வழிநடத்தினார். அதில் நகைச்சுவையான தருணங்களும் நெஞ்சை நெகிழவைக்கும் நினைவுகூரல்களும் இடம்பெற்றன.
அமீர் கான், படங்களை உணர்ச்சிபூர்வமாகப் பார்ப்பவர் என்று ரிஷி கூறினார். அதை அமீர் கான் ஒப்புக்கொண்டார். படங்கள் திரையிடப்படும்போது அவற்றைக் கண் சிமிட்டாமல் பார்க்கும் பழக்கம் தன்னிடம் இருப்பதால் கண்ணீர் தேங்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். படங்களைப் பார்ப்பதில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் துடிப்பையும் அது எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்ச்சியில் இந்தியர்கள் அல்லாத பலரும் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவரான சீனாவைச் சேர்ந்த ரோச்செல் லெய், 34, தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்.
“நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது (3 இடியட்ஸ்) என்னை மிகவும் ஊக்குவித்தது என நினைக்கிறேன். சீனராக இருக்கும்போது உலகின் அந்தப் பகுதியில் காணப்படும் கண்ணோட்டம், படைப்பாற்றல், திரைப்படமெடுக்கும் கலை ஆகியவற்றில் ஒரே வகையான கலாசார அம்சங்கள் இருப்பதைப் பார்ப்பது சிறப்பாக உள்ளது,” என்று கட்டட வடிவமைப்புக் கலைஞரான அவர் பகிர்ந்துகொண்டார்.
அமீர் கானின் சில படங்கள் சீனாவிலும் பிரபலமடைந்தவையாகும்.
