சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் பிரசாந்த் என்பவர், அண்மையில் மதுபான விடுதி ஒன்றில் நடந்த மோதல் தொடர்பாக கைதானார். விசாரணையில், அவர் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்கள் வாங்கியது தெரியவந்தது.
தம்மிடம் போதைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர் என அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீகாந்துக்கு ‘கொகைன்’ உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை வழங்கியதாக பிரசாந்த் கூறியிருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகாந்த் தவிர, வேறு யாரெல்லாம் பிரசாந்துக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜாக் கூட்டம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.
அதன் பின்னர், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.