நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் வறுமையில் வாடுவதையறிந்த அமைச்சர் ராஜ்மோகன், அவரைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
நீரிழிவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு இன்றி பாவா லட்சுமணன் அவதிப்பட்டு வந்ததையறிந்த அமைச்சர், தமது அலுவலகத்தில் உள்ள ஓர் அறையில் அந்த நடிகர் தங்குவதற்குத் தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்துள்ளார்.
‘வாம்மா மின்னல்... மாயி அண்ணே வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக...’ என்ற வசனத்துடன், ‘மாயி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சியில் சரத்குமார், வடிவேலு ஆகியோருடன் பாவா லட்சுமணனும் இணைந்து நடித்திருப்பது இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
மேலும், பல படங்களில் நடித்து ரசிகர்களைச் சிரிக்கவைத்த பாவா லட்சுமணனின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது.
கடந்த பல ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பாவா லட்சுமணன். சென்னையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர், ஒருசில காரணங்களால் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
நோய்த் தாக்கம் காரணமாக அவரது காலில் இருந்த விரல்கள் அகற்றப்பட்டன. வறுமையில் வாடிய அவர், தங்க இடமின்றி புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தின் வாசலில் படுத்துக்கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நடிகரும் தொழிலதிபருமான லெஜன்டு சரவணன் இரண்டு லட்சம் ரூபாய் அளிக்க, மேலும் பல திரையுலகப் பிரமுகர்கள் நிதியுதவி அளித்தனர்.
இந்நிலையில், பாவா லட்சுமணனின் நிலையை நேரில் கண்ட அமைச்சர் ராஜ்மோகன், உடனடியாக அவரைத் தனது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்குள்ள அறையில் பாவா தங்குவதற்கு ஏற்பாடு செய்த அமைச்சர், ஆறு மாதங்களுக்குள் நிரந்தரமாக தங்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
அமைச்சர் ராஜ்மோகனின் இந்தச் செயலை திரையுலகத்தினர் பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

