என் வாழ்க்கையின் ஆகச்சிறந்த தருணம்: பூர்ணா

என் வாழ்க்கையின் ஆகச்சிறந்த தருணம்: பூர்ணா

2 mins read
6ac6c70e-8e4b-4ccd-b91b-892b4a28ace9
 ‘அல்ல போலேலோ’ பாடலில் ஒரு காட்சி. - படம்: விகடன்

திரையுலகில் கதாநாயகியாக மின்னிய நடிகைகளுக்குத் திருமணத்திற்குப் பிறகும், குழந்தை பேற்றுக்குப் பிறகும் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்திருக்கிறார் நடிகை பூர்ணா.

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘அல்ல போலேலோ’ (Ala Bolelo) பாடலில் தனது சுறுசுறுப்பான நடனத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து, இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு துபாயில் குடியேறி, அங்கு ‘ஷாம்னா காசிம் டான்ஸ் ஸ்டுடியோ’ என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார் பூர்ணா. மூன்று வயது முதல் 60 வயது வரையிலான இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடனம் கற்பித்து வரும் இவர், தனது இரண்டு குழந்தைகளின் பராமரிப்பிற்கு இடையே சினிமாவிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

‘பிசாசு 2’. தெலுங்குப் படங்களைத் தொடர்ந்து, தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்திலான இணையத்தொடர் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு பாடலுக்காவது நடனமாட வேண்டும் என்ற பூர்ணாவின் நீண்ட நாள் ஆசை, தெலுங்கில் வெளிவந்த ‘குண்டூர் காரம்’ படத்தின் ‘குர்ச்சி மடத்தப்பெட்டி’ பாடல் மூலம் நனவானது.

அதன் தொடர்ச்சியாக, அனிருத் இசையமைப்பில் வெளியான ‘அல்ல போலேலோ’ பாடலில் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

சற்று பருமனான உடலமைப்பு, சதை பூசிய முகத்துடன், வழக்கமான ஒல்லி நடிகைக்கான இலக்கணங்களை உடைத்து, தனது அசாத்திய முகபாவங்கள், வேகமான நடன அசைவுகளால் இப்பாடலை இணையத்தில் பரவலாகப் பகிரச் செய்துள்ளார் பூர்ணா.

‘உங்கள் கண்கள் மிகவும் சக்திவாய்ந்தது’ எனப் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் பாராட்டியது, தனது திரைப்பயணத்தின் ஆகச் சிறந்த தருணம் என்கிறார்.

உடல் எடை, உருவக்கேலி குறித்த பயங்களை ஒதுக்கித்தள்ளி, தனது இயல்பான தோற்றத்தை விரும்பும் பூர்ணாவுக்கு, கணவர் ஷானித் ஹாசிஃப் அலி, குடும்பத்தினரின் ஆதரவு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

திருமணத்திற்குப் பின்னரும் கலைத்துறையில் தடம்பதித்து வரும் பூர்ணா, தனது திரை வாழ்க்கை இளம்பெண்களுக்கு நல்ல பாடமாக அமைந்தால் மகிழ்ச்சி என்கிறார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்நடனம்ரஜினிபாராட்டு