ஆறிலிருந்து அறுபது வரை - தேவாவின் இசை மழையில் திளைத்த ரசிகப் பெருமக்கள் 

ஆர்ப்பரித்த அரங்கம், அதிரவைத்த ‘தேனிசைத் தென்றல்’

2 mins read
a1b3bdf5-3746-4804-aa0a-0d13941150f7
‘தேனிசைத் தென்றல்’ தேவா. - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்
multi-img1 of 4

சிங்கப்பூரின் தி ஸ்டார் அரங்கில் அண்மையில் நடந்து முடிந்த ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசை நிகழ்ச்சி ரசிகர்களை ஆரம்பம் முதல் நிறைவு வரை இருக்கையிலேயே அமரவிடவில்லை. 

‘8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ஏற்பாட்டில் ஏறத்தாழ நான்கு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தேவாவுடன் பிரபல இசைக் கலைஞர்கள் ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் முரளி, பாடகர்கள் மனோ, அனுராதா ஶ்ரீராம், விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரியா ஜெர்சன், அஜய்கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிங்கப்பூர் ரசிகர்களுக்காக இசை விருந்து படைத்தனர்.

தேவாவின் இசை நிகழ்ச்சியைக் காண 4,300க்கும் அதிகமானோர் அரங்கில் கூடியிருந்தனர். நிகழ்ச்சி துவங்கியபோது ஆடத் தொடங்கிய ரசிகர்கள் ஒவ்வொரு பாட்டிற்கும் சளைக்காமல் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

குறிப்பாக, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ திரைப்படத்தில் வரும் ‘பாட்ஷா’ பின்னணி இசையை தேவா குழுவினர் நேரலையாக இசைத்து காண்பித்தபோது ரசிகர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. 

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாகத் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வரும் தேவாவின் இசையில் 90களுக்கே சென்றுவிட்டதாகப் பார்வையாளர்கள் பலர் கூறினர்.

நிகழ்ச்சியைக் காண குடும்பத்துடன் வந்திருந்த திரு விஜய், தேவாவின் இசை, குடும்பங்கள் கொண்டாடும் தேனிசை என்றார்.

“நான்கு மணிநேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. அடுத்த இன்னிசை நிகழ்ச்சி எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்துவிட்டது,” என்றார் அவர்.

“காதல் தோல்வியைக் கூட தேவாவின் கானா பாடல்கள் இலகுவாக்கிவிடும். திரையில் பார்த்த பாடல்களை இன்று கண்முன் கொண்டுவந்து விட்டனர் அவரின் இசைக் குழுவினர். 

“குறிப்பாக, ரஜினிகாந்தின் பெயர் திரையில் வரும்போது ஒலிக்கப்பெறும் அறிமுக இசையை தேவா குழு வாசித்துக் காண்பித்தது நினைவை விட்டு சிறிதும் அகலாது,” என்றார் திருவாட்டி ஷீலா.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படிப் பாடினாரோ அதே குரலில் ரசிகர்கள் விரும்பும் பல பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் தேவா.

காலஞ்சென்ற முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு பிடித்தமான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலைப் பாடிய தேவாவிற்குச் சிங்கப்பூரின் 15  தமிழ் அமைப்புகளின் சார்பாக சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அந்த நினைவுப் பரிசை சிங்கப்பூர் தமிழர் பேரவையின் தலைவர் வெ.பாண்டியன் தேவாவிற்கு வழங்கிச் சிறப்பித்தார்.

“இந்த இசை நிகழ்ச்சி உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. தேவாவின் இன்னிசையைப் பல ஆண்டுகளாகச் சுவாசித்து வரும் ரசிகர்களுக்கு இந்த இசைக் கொண்டாட்டம் நிச்சயமாக ஏராளமான மலரும் நினைவுகளை கண்முன் கொண்டு வந்திருக்கும்,” என்றார் ‘8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட்’ தலைவர் பெ.அருமைச் சந்திரன்.

குறிப்புச் சொற்கள்