கடைசி வரை உடன்வருவது கல்விதான்: இவானா

2 mins read
1838ebde-df45-4960-b2f4-ddeaf1644861
இவானா. - படம்: ஊடகம்

அதென்னவோ தெரியவில்லை, மலையாள நடிகைகள் மட்டும் நடித்துக்கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தத் தவறுவதே இல்லை. இதற்கு அண்மைய உதாரணமாகி உள்ளார் ‘லவ் டுடே’ பட நாயகி இவானா.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த இவர், இப்போது தெலுங்கு தேசத்திலும் கால்பதித்துள்ளார்.

அங்கு ‘சிங்கிள்’ என்ற பெயரில் வெளியான படத்தில் ஹரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளார் இவானா.

“இந்தப் படத்தில் நடனக் கலைஞராக நடித்துள்ளேன். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

“தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. பல மொழிகளில் நடிப்பதால் ஒரு நடிகையாக தொழில் ரீதியில் நான் வளர்ந்து வருவதாக நினைக்கிறேன்.

“ஒவ்வொரு மொழித் திரையுலகிலும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

“அந்த வகையில், பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொண்ட மனநிறைவு உள்ளது,” என்று சொல்லும் இவானாவுக்கு, தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய நால்வரும்தான் பிடித்தமான நடிகர்களாம்.

தெலுங்கு நாயகர்களில் இவரது மனம் கவர்ந்தவர் அல்லு அர்ஜுன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் சரளமாகப் பேசுகிறார் இவானா. எந்தக் கேள்விக்கும் நேரடியாக, ஒளிவு மறைவு இன்றி மனதிற்பட்டதைப் பதிலாக அளிக்கத் தயங்குவதே இல்லை.

என்ன மாதிரியான பாத்திரங்களில் நடிக்க ஆசை எனக் கேட்டால், “எந்த வேடமாக இருந்தாலும் ரசிகர்களுடன் நம்மைத் தொடர்புபடுத்தும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதேசமயம் என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில்தான் நடிக்க முடியும்.

“எனவே, இப்போது என் வயதுக்கு எத்தகைய வாழ்க்கையை, பாத்திரத்தை திரையில் பிரதிபலிக்க முடியுமோ அவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வயதான பிறகு அம்மா, அத்தை என எந்த வேடம் கிடைத்தாலும் நடிப்பேன்.

“ஒருவேளை ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அழைத்தாலும், அந்தச் சமயத்தில் என்ன முடிவெடுப்பேன் என்பது தெரியவில்லை,” என்று பளிச் பதில் தருகிறார் இவானா.

கவர்ச்சியான வேடங்களைவிட குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடிப்பதையே இவர் விரும்புகிறார்.

சிறு வயதிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் பதிந்துவிட்டதாம். அதனால்தான் நடித்துக்கொண்டே படிக்கவும் நேரம் ஒதுக்குவதாகச் சொல்கிறார்.

“நான் வளர்ந்த சூழ்நிலை அப்படிப்பட்டது. என் குடும்பத்தார் மட்டுமல்லாமல், நான் சந்தித்த பலரும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதை கேட்டுக்கேட்டு வளர்ந்த பிறகு படிப்பு முக்கியம் என்ற எண்ணம் மனத்தில் பதிந்துவிட்டது.

“ஓரளவு நன்றாகப் படிப்பேன் என்பதால் இளங்கலை பட்டப்படிப்புடன் நிற்காமல், மேற்படிப்பையும் தொடர வேண்டும் எனப் பெற்றோர் விரும்பினர். இறுதி வரை நம்முடன் வருவது கல்விதான் என்பதால் எனக்கும் அதிகம் படிக்கும் ஆசை இருந்தது.

“நடிப்பு, படிப்பு இரண்டையும் ஒருசேர கவனிப்பது சிரமம்தான் என்றாலும், பிடித்த விஷயங்களுக்காக சிரமப்படுவதில் தவறில்லை,” என்கிறார் இவானா.

தமிழில் இவர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து விரைவில் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

குறிப்புச் சொற்கள்