முயற்சி, நம்பிக்கை இருப்பின் எளிய மனிதனும் இலக்கை அடைய முடியும்: பாலா

முயற்சி, நம்பிக்கை இருப்பின் எளிய மனிதனும் இலக்கை அடைய முடியும்: பாலா

படம்: விகடன்

06 Nov 2026 - 3:55 pm

2 mins read

கிராமத்துக் கனவுகளோடு சென்னைக்கு வந்து, இன்று தன் நகைச்சுவையால் தமிழக மக்களின் மனத்தில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி புகழ் பாலா.

புதுவைக்கு அருகில் உள்ள நெடுங்காடு என்ற கிராமத்தில் பிறந்த பாலா, எளிய பின்னணியில் இருந்து வந்து சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த கதையும் அதன்பின் உள்ள உழைப்பும் பலருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

பாலாவின் தந்தை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர். தாய் தையல் தொழில் செய்து வருபவர்.

பள்ளிப் பருவத்திலேயே வகுப்பறையில் ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் தன் இயல்பான நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் ஆற்றல் பாலாவுக்கு இருந்தது. அதுவே பிற்காலத்தில் அவரை மேடை நகைச்சுவையை நோக்கி நகர்த்தியது.

தன் திறமையின் மீது கொண்ட நம்பிக்கையால் சென்னைக்கு வந்த பாலா, தொடக்கத்தில் பல சவால்களையும் பொருளியல் ரீதியில் சிரமங்களையும் எதிர்கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப் போவது யாரு-சீசன் 6’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற அவர், அந்த சீசனின் பட்டத்தையும் வென்று அசத்தினார். எனினும் வெற்றியை அவர் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.

“தலைப்பை வென்றதால் வாழ்க்கை ‘ஓகோ’வென்று மாறிவிடவில்லை. தொடக்கத்தில் பலரது எதிர்மறைக் கருத்துகளையும் விமர்சனங்களையும் கடக்க வேண்டியிருந்தது,” என்கிறார் பாலா.

விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தன் நகைச்சுவைப்பாணியை மேலும் மெருகேற்றிக்கொண்டு, ‘சூப்பர் சிங்கர்’, ‘குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறினார்.

“உருவக்கேலி போன்ற எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காமல், பிறர் மனம் நோகாத ஆரோக்கியமான நகைச்சுவையைத் தருவதில் உறுதியாக இருக்கிறேன்.

“தொடர் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தவொரு எளிய மனிதனும் தன் இலக்கை அடைய முடியும். எனது இந்தக் கொள்கையை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது தீபாவளிச் செய்தி,” என்கிறார் பாலா.

குறிப்புச் சொற்கள்