கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘டோரதி’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்துவிட்டார் நடிகர் சனந்த்.
திருநங்கையாக நடித்தபோது மனம் பதைபதைத்தது என்று அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ‘டிமான்ட்டி காலனி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘மெர்க்குரி’, ‘பேட்ட’, ‘மகான்’ போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘டோரதி’ திரைப்படம்தான் திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் தமக்கு அதிக பாராட்டையும் மரியாதையையும் பெற்றுத்தந்துள்ளதாகச் சொல்கிறார் சனந்த்.
“பத்தாவது படிக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. பெற்றோர் பயந்தாலும், பொறியியல் படிப்பில் இருந்து பாதியில் விலகி ஊடகத்துறை சார்ந்த படிப்பில் (விஸ்காம்) சேர்ந்தேன்.
‘நாளைய இயக்குநர்’ குறும்படங்கள் வழியே எனது நடிப்புப் பயணம் தொடங்கியது. ‘மது’ குறும்படத்தின் வரவேற்புக்குப் பிறகு இயக்கம் மறந்து நடிப்புதான் எனது பாதை என்று முடிவு செய்தேன். 15 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகே இந்த நல்ல நிலை கிடைத்துள்ளது. சினிமாவில் பொறுமை மிகவும் அவசியம்,” என்கிறார் சனந்த்.
‘மது’ பார்த்துவிட்டு ‘டிமான்ட்டி காலனி’ படத்தில் நடிக்க அஜய் ஞானமுத்து அழைத்தாராம். அதுதான் சனந்த்துக்கு முதல் திரைப்படம்.
“அங்கேதான் ‘சனந்த்’ தெரிய ஆரம்பித்தேன். அப்புறம் ‘ஜில் ஜங் ஜக்’ படம் வந்தது. நடிகர் சித்தார்த் தயாரித்தார். இதற்கிடையே, இயக்குநர் பாலாஜி மோகனின் ‘ஹாட்ஸ்டார்‘ தொடரில் நடித்தேன்.
“அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டு ‘மெர்க்குரி’யில் வாய்ப்பு கொடுத்தார். `பேசும் பட’த்துக்குப் பிறகு வரும் மௌனப்படம். வசனங்களே இல்லை. அது சவாலான வேடம். பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தது நிறைய கற்றுக்கொள்ள உதவியது.
“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் யோசிப்பதெல்லாம் வேறு மாதிரியான உயர் தரத்தில் இருக்கும். படமும் அப்படியே வித்தியாசமாக இருக்கும். அதற்குப் பிறகு, மீண்டும் அவரே ‘பேட்ட’ பட வாய்ப்பு தந்து ஆதரவளித்தார்.
“ரஜினியுடன் படம் முழுவதும் வரக்கூடிய பாத்திரம். அவருடன் 90 நாள்கள் இருந்து பழக முடிந்தது. அதுவே பெரிய படிப்பு. ஒரு நடிகனாக என்னை மேம்படுத்திய காலங்கள். அதற்குப் பிறகு கல்லூரி மாணவனைப் போன்ற வாய்ப்புகளே வந்தன. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகே ‘ஹார்ட்டின்’ படத்தில் நாயகனாக நடித்தேன்,” என்று தான் கடந்து வந்த பாதையை நேர்காணலில் விவரித்துள்ளார் சனந்த்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கனவுப் படமான ‘டோரதி’யில் ‘சுப்பு’ என்ற திருநங்கை கதாபாத்திரத்திற்கான நடிப்புத் தேர்வின்போது அடையாளம் காணப்பட்ட சனந்த், தேர்வில் பங்கேற்றபோது, ஏதோ தியான நிலையில் இருந்ததுபோல அந்தப் பாத்திரத்தை மனத்தில் நிறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“திருநங்கையாக நடிக்கும்போது மனத்தளவில் பெரிய பதைபதைப்பு இருந்தது உண்மைதான். பாதி படம் வரை நான் நடித்த மாதிரியே இல்லை. ஏதோ ஒரு சக்தி என்னை இயக்கியது போல் இருந்தது.
“முதல் நாள் காட்சியின்போது திரையரங்கில் கிடைத்த வரவேற்பு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. படம் முடிந்து ரசிகர்கள் என்னைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் சிந்திய அந்த நொடிதான் எனது வாழ்க்கையின் ஆகச்சிறந்த அங்கீகாரம்.
“ஆண்கள் அழக்கூடாது என்பார்கள். ஆனால், அன்று அவர்கள் சிந்திய கண்ணீர்த்துளிகளே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்,” என்று கூறியுள்ள சனந்த், சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து, இனி அடிதடி, நகைச்சுவைக் கதைக்களங்களிலும் தன்னைத் தீவிரமாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
