தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்கள் கோபப்படமாட்டார்கள் என்கிறார்கிரித்தி ஷெட்டி

2 mins read
6b9ba568-18d2-4102-a689-fbda9564c086
கிரித்தி ஷெட்டி. - படம்: ஊடகம்

தெலுங்கு ரசிகர்களைத் தூங்கவிடாமல் தவிக்கவிடும் இளம் நாயகிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் கிரித்தி ஷெட்டி.

இவரை விரைவில் சில தமிழ்ப் படங்களில் காண முடியும் என்பது தமிழ் ரசிகர்களுக்கான இனிப்புச் செய்தி.

அண்மைக்காலமாக தமிழில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் கிரித்தி ஷெட்டி. இவர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்ஐகே’, கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ என மும்முரமாக நடித்து வருகிறார்.

இதற்காக, தெலுங்குப் படங்களைக்கூட சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் கோபப்பட மாட்டார்களா என்று கேட்டால் தனக்கே உரிய மயக்கும் சிரிப்புடன் கிரித்தியின் பதில் வெளிப்படுகிறது.

“நான் நடிப்பை நிறுத்திவிட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட படத்தின் தலைப்பைச் சொன்னால், நான் அதில் நடித்திருப்பது ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும். அந்த அடிப்படையில்தான் படங்களைத் தேர்வு செய்கிறேன்.

“நான் இப்போது நடிக்கும் மூன்று படங்களுமே தெலுங்கிலும் வெளியாக உள்ளன. எனவே, ரசிகர்கள் கோபப்பட மாட்டார்கள்.

“தெலுங்கில் நடித்த என்னைத் தமிழ் ரசிகர்கள் எப்படி நினைவில் வைத்திருக்கிறார்களோ, அதேபோல் தமிழில் நடிக்கும்போது பிறமொழி ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள்.

“ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது நன்றாகத் தெரியும். அந்த எதிர்பார்ப்பைக் குறைவின்றி நிறைவேற்றுவேன்,” என்கிறார் கிரித்தி ஷெட்டி.

இவருக்கு தற்போது 21 வயதாகிறது. தெலுங்குத் திரையுலகில் பிரபலமாக இருந்தாலும், இவரது பெற்றோரின் சொந்த ஊர் கன்னட மாநிலம் மங்களூரு. தாய்மொழி துளு. இவரது தந்தை தொழிலதிபர். தாயார் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

மும்பையில் வளர்ந்த கிரித்தி, அங்குள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளாராம்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு, நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார் கிரித்தி.

“அனைத்து மொழிகளிலும் விளம்பரங்களில் நடித்துள்ளேன். அதன் மூலமாகவும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் கிரித்தி ஷெட்டி.

திரைப்படங்களில் நடிக்க வாங்கும் ஊதியத்துக்கு இணையாக விளம்பரப் படங்களுக்கும் இவர் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம் கிரித்தி.

குறிப்புச் சொற்கள்