தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினைக்குக்கூட தீர்வு கண்டுவிடலாம். ஆனால், கோடம்பாக்கத்தில் நிலவும் கதாநாயகிகள் பஞ்சத்துக்குத் தீர்வே இல்லை போலிருக்கிறது. அதனால்தான் பிற மொழிகள், மாநிலங்களில் இருந்து நாயகிகளை இறக்குமதி செய்கிறார்கள்.
இன்று நேற்று அல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலைதான் நீடித்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் 25 நாயகிகள் தமிழ்த் திரையுலகில் பிரகாசிக்கப் போகிறார்கள். உங்களுக்காக அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகள்.
ரோஷினி பிரகாஷ்
கர்நாடக மாநிலம் மைசூர் ஐசக் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷினி பிரகாஷ். இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தென்னிந்திய அழகுப் போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்தவர். அதன் பிறகு ‘சப்தகிரி எக்ஸ்பிரஸ்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான ரோஷினி, தற்போது கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் கிச்சா சுதீப்புடன் இணைந்து நடித்த ‘மார்க்’ திரைப்படத்துக்கு நல்ல விமர்சனமும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்ப் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம் ரோஷினி.
சான்வி மேக்னா
‘குடும்பஸ்தன்’ படத்தில் நாயகன் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர் சான்வி. சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்.
சிரஞ்சீவி நடித்த ‘சாய்ரா நரசிம்மா ரெட்டி’ படம் மூலம் 2019ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், கடந்த ஆறு ஆண்டுகளில் ‘மோஸ்டு எலிஜிபில் பேச்சிலர்’, ‘புஷ்பக விமானம்’ உள்ளிட்ட திரைப்படங்கள், ‘பிட்ட காதலு’ இணையத் தொடர் ஆகியவற்றில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளார்.
இவை அனைத்தையும்விட இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் ‘விழி வீக்குர’ பாடலில் நடித்ததன் மூலம் தமிழ் இளையயர்களிடம் நன்கு அறிமுகமாகிவிட்டார்.
கயாது லோஹர்
தமிழ் சினிமா ரசிகர்களின் புதிய கனவுக்கன்னி கயாது லோஹர். சொந்த ஊர் அஸாம் மாநிலத்தில் உள்ள டெஸ்பூர்.
தமிழில் ‘டிராகன்’ படம் மூலம் அறிமுகமான கயாதுவின் முதல் படம் கன்னடத்தில்தான் வெளியானது. பின்னர் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானவர் மலையாளத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது தமிழில் ‘இதயம் முரளி’, ‘அரசன்’, ‘இம்மார்டல்’ படங்களில் நடித்து வருபவர், பிற மொழிகளையும் சேர்த்து கைவசம் பத்து படங்களை வைத்துள்ளாராம்.
ருக்மிணி வசந்த்
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ருக்மிணிக்கு 23 வயதாகிறது. இவரது தந்தை காலஞ்சென்ற ராணுவ அதிகாரி வசந்த் வேணுகோபால். இந்திய அரசின் அசோக சக்ரா பதக்கம் பெற்றவர்.
நடிப்பு தொடர்பாக லண்டனில் படித்துப் பட்டம் பெற்ற ருக்மிணி, தமிழில் நடித்த ‘ஏஸ்’, ‘மதராஸி’ ஆகிய இரு படங்களும் கடந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகின.
பின்னர் ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் நாயகி ஆனார். தற்போது கன்னடத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’, மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் எனத் தென்னிந்தியாவில் ருக்மிணி பரபரப்பாக வலம் வருகிறார்.
மமிதா பைஜு
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘சர்வோபாரி பாலக்கரன்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான மமிதா, அடுத்து ‘பிரேமலு’ மலையாளப் படம் மூலம் நாடறிந்த நடிகையாகிவிட்டார்.
சொந்த ஊர் கேரளாவில் உள்ள கிடங்கூர். மலையாளத்தில் 15 படங்களில் நடித்து முடித்துள்ள மமிதாவை ‘டியூட்’ படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர்.
முதல் படமே வசூலில் அசத்தியதை அடுத்து, தற்போது சூர்யா, தனுஷ் என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார் மமிதா பைஜு. தற்போது தமிழ் இளையர்களின் கனவு நாயகிகளின் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்துள்ளது.
பாக்யஸ்ரீ போர்சே
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான பாக்யஸ்ரீ போர்சே அசப்பில் கீர்த்தி சுரேஷ் போல் காட்சி அளிக்கிறார்.
இந்தியில் ‘யாரியான்-2’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘காந்தா’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாக இருந்தார். ஆனால், அப்படம் வெளியாவதற்கு முன் தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’, ‘கிங்டம்’ உள்ளிட்ட கவனிக்கத்தக்கப் படங்களின் மூலம் முன்னணி நாயகியாகிவிட்டார்.
ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நாயகி என்றாலும், தமிழில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தார். அவரது ஆசை ‘பராசக்தி’ படம் மூலம் நிறைவேறியுள்ளது.
புத்தாண்டிலேயே தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு புது நாயகி கிடைத்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘காந்தா’வின் குமாரிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
ரம்யா ரங்கநாதன் (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), யோகலட்சுமி (டூரிஸ்ட் ஃபேமிலி), ஆர்ஷா சாந்தினி (ஹவுஸ் மேட்ஸ்) உள்ளிட்ட மேலும் பல நாயகிகள் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர்.

