இளையராஜாவுக்குப் பெருமை: சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்ட ஆஸ்திரேலியா

இளையராஜாவுக்குப் பெருமை: சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்ட ஆஸ்திரேலியா

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

26 Sep 2026 - 3:49 pm

1 mins read

திரையுலகில் அரை நூற்றாண்டைக் கடந்து தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டவர் இளையராஜா.

அவரது ஐம்பது ஆண்டுகால இசைப்பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் அவருக்குச் சிறப்பு கௌரவத்தை வழங்கியுள்ளது.

விக்டோரியா மாநில நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், அவரது பொன்விழா ஆண்டை நினைவுகூறும் வகையில் சிறப்பு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

விக்டோரியா மாநில நிதி அமைச்சர் என்வர் எர்டோகன் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அஞ்சல் தலை வெளியீடு நடைபெற்றது.

உலகளாவிய இசை நிகழ்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுக்கு வருகைதந்த இளையராஜாவுக்கு, அங்கு வாழும் தமிழ் சமூகத்தினரும் திரைத்துறையினரும் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய இசைஞானி, தமிழ்நாட்டின் ஒரு சிறிய, தொலைதூரக் கிராமத்தில் பிறந்த தமக்கு இசையின் வழியே உலகளாவிய அரங்குகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும் என ஒருபோதும் நினைத்ததில்லை என்றார்.

“ஆனால், இசை தனக்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது. இந்த கௌரவத்தை அளித்த ஆஸ்திரேலிய அரசுக்கும் என் இசைக்கு உயிர்கொடுத்த லட்சக்கணக்கான மக்களுக்கும் என்னுடைய சக கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என்றார் இளையராஜா.

குறிப்புச் சொற்கள்