பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது: ஸ்ரீலீலா

3 mins read
4451a007-e4d5-4d18-bea3-e73f408347e9
ஸ்ரீலீலா. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
multi-img1 of 2

நல்ல கதை, சிறந்த நடிகர், மக்களுக்கு ஒரு படம் நல்லவிதமாக போய்ச் சேரும் என்ற நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஒரு திரைப்படத்தில் நடிப்பது குறித்து தாம் முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளார் ஸ்ரீலீலா.

இந்த அணுகுமுறை தமக்கு ஒரு நல்ல இடத்தைப் பெற்றுத்தரும் என உறுதியாக நம்புவதாக அண்மைய ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடனம், சண்டைக்காட்சிகள் என்று அசத்தும் ஸ்ரீலீலாவின் கட்டுக்கோப்பான உடற்கட்டு, சக நடிகைகளை வியக்க வைக்கிறது. இதற்கு உடற்பயிற்சிதான் முக்கியமான காரணம் என்கிறார்.

“நான் திட்டமிட்டு உடல் எடையைக் குறைப்பதில்லை. அடிப்படையில் நான் ஒரு மருத்துவர். எனவே எனது உடல் பற்றிய தெளிவு இயல்பாகவே எனக்கு உண்டு. அதிகம் சாப்பிட மாட்டேன். பசியோடு சாப்பிட அமர்ந்து அதே பசியோடு எழுந்துவிடுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறேன்.

“யோகாசனம் செய்யவும் தவறுவதில்லை. மேலும், முறைப்படி பரதம் கற்றவள் என்பதால் எனது உடல்நலத்தை, உடல்கட்டைப் பேணுவதில் நடனமும் பங்களிக்கிறது,” என்று சொல்லும் ஸ்ரீலீலா, தாம் ஒரு நடிகையாவதைக் கனவில்கூட நினைத்தது இல்லையாம்.

தன் குடும்பத்துக்கும் திரையுலகுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனச் சுட்டிகாட்டுகிறார். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதுதான் முதல் முறை சினிமா வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளது.

தெலுங்கில் அறிமுகமான பின்னர் அங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்துவிட்டார். எல்லாமே தமக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது தமிழில் அறிமுகமாகி இருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

“மருத்துவப் படிப்பு என்பது மிகக் கடினமானது. கொஞ்சம்கூட கவனம் சிதறக்கூடாது. ஒரு பக்கம் நடிப்பு இழுத்தாலும், மற்றொரு பக்கம் கூடுதலாக உழைத்து என் படிப்பையும் முடிப்பேன்.

“’பராசக்தி’ படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய தேர்வு நடைபெற்றது. படப்பிடிப்பு, படிப்பு என இரண்டையும் ஒரே நேரத்தில் கவனித்து எப்படியோ சாதித்துவிட்டதில் நிறைவாக உணர்கிறேன்.

“இந்தக் கடினமான காலகட்டத்தில் என் அன்புக்குரிய இரு சகோதரிகள் மிகவும் உதவினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்,” என்று சொல்லும் ஸ்ரீலீலா, இயக்குநர் சுதா கொங்கராவை மிகவும் பாராட்டுகிறார். சுதா ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதம் வியப்பளித்ததாக கூறியுள்ளார்.

“சுதா தனி ஆளாக மொத்தப் படத்தையும் படப்பிடிப்பையும் தம் கைக்குள் வைத்துக் கொண்டார். கதை, திரைக்கதை குறித்து அவருக்கு அவ்வளவு தெளிவு இருக்கிறது. எல்லா நடிகர்களுக்கும் அவரது திறமை மீது அவ்வளவு நம்பிக்கை உள்ளது. அவர் இதற்குத் தகுதியானவர்தான்.

“பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. இந்தப் புத்தாண்டு ஒரு நல்ல படத்துடன் தொடங்கியுள்ளது. அதனால் இந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன்.

“’பராசக்தி’ படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இது முக்கியமான படம் என்பதை உணர வைத்தது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா என மூன்று நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பெரிய விஷயம்.

‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனத்தில் இடம்பிடிக்க வேண்டும் என நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது,” என உற்சாகத்துடன் கூறியுள்ளார் ஸ்ரீலீலா.

குறிப்புச் சொற்கள்