பாடல்களால் ரசிகர்களுக்கு நன்றி நவின்ற கார்த்திக்

3 mins read
c96654ed-00b3-4525-b84a-cf4a8014040d
‘சங்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்த் திரைப்படப் பாடகர் கார்த்திக். - படம்: ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)
multi-img1 of 2

சிங்கப்பூர் ரசிகர்களின் தொடர்ச்சியான அன்பு தம்மை நெகிழ வைப்பதாகவும் மீண்டும் இங்கு வருவதை எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் தமிழ்த் திரைப்படப் பாடகர் கார்த்திக் கூறியுள்ளார்.

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த அவர், இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட ‘சங்கம்’ நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) பங்கேற்றார்.

இந்திய நிர்வாகக் கல்விக்கழகங்களின் (ஐஐஎம்) முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 3,000க்கும் அதிகமானோரைத் தம் பாடல்களால் மகிழ்வித்தார் கார்த்திக்.

கிட்டத்தட்ட 3,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்ட ‘சங்கம்’ நிகழ்ச்சியில் கார்த்திக் பாடினார்.
கிட்டத்தட்ட 3,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்ட ‘சங்கம்’ நிகழ்ச்சியில் கார்த்திக் பாடினார். - படம்: ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

அதற்கு முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியிலும் கார்த்திக் பங்கேற்றார்.

‘சங்கம்’ நிகழ்ச்சியின்போது தமிழ் முரசிடம் பேசிய கார்த்திக், சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.

மற்ற நாடுகளிலிருக்கும் தங்களது குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாட்டில் பணிபுரிவது எளிதான காரியமன்று என்று கூறிய கார்த்திக், ‘சங்கம்’ நிகழ்ச்சி அந்த ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களுக்கு உத்வேகமும் அளிக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளாக அவர்கள் என்மீது காட்டிவரும் அளவில்லா அன்புக்கு என்னால் முடிந்த விதத்தில் நன்றி சொல்லும் சிறிய முயற்சிதான் இந்நிகழ்ச்சியில் எனது பங்கேற்பு,” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் பாடி, சிரித்து மகிழ்ந்த கார்த்திக், இந்த அனுபவத்தை உற்சாகமான கல்லூரி கூட்டத்தின்முன் பாடுவதுடன் ஒப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து தமிழ் பாடல்களைக் கார்த்திக் பாடினார்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து தமிழ் பாடல்களைக் கார்த்திக் பாடினார். - படம்: ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

“நிகழ்ச்சியில் பங்கேற்ற 70 விழுக்காட்டினர் தமிழர்கள் என்றாலும் பிற மொழிகள் பேசுவோரும் இருந்தனர். இசை மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் படைத்தது. நான் தமிழில் பாடி[Ϟ]னாலும் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடினர்,” என்று அவர் குறிப்பிட்டார். இசை, கடந்தகால நினைவுகளை உயிர்ப்பிக்கவல்லது என்றும் அவர் சொன்னார்.

“இந்தப் பாடல்களைக் கேட்கும்போது 10, 15 ஆண்டுகளுக்குமுன் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் கழித்த தருணங்களை நினைவுகூர்வர் என்று நம்புகிறேன்,” என்றும் கார்த்திக் கூறினார்.

தமது பாடல்களில் எந்தப் பாடலை மேடையில் நேரடியாகப் பாடப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, அது காலத்திற்கேற்ப மாறும் என்று அவர் பதிலளித்தார்.

“சில நாள்கள் ‘உசுரே போகுதே’ பாடலைப் பாட விரும்புவேன். சில நாள்கள் ‘எனக்கொரு கேர்ள்ஃபிரண்ட்’ பாடலைப் பாடப் பிடிக்கும்,” என்றார் கார்த்திக். இளையராஜா இசையமைத்த ‘விக்ரம்’ படத்தின் பாடல்களைப் பாடுவதிலும் மகிழ்ச்சி கொள்வதாக கார்த்திக் தெரிவித்தார்.

இருப்பினும், எந்த இடத்திற்குச் சென்றாலும் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெறும் ‘அஞ்சலை’ (அவ என்ன) பாடலைப் பாடாமல் மேடையைவிட்டு இறங்க முடியாது என்றும் அவர் சிரித்தபடி கூறினார்.

மேடையில் பல பாடல்களைப் பாடினார் கார்த்திக்.
மேடையில் பல பாடல்களைப் பாடினார் கார்த்திக். - படம்: ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூருக்கு வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கார்த்திக், அந்நாட்டுக்கு எப்போதும் தம் இதயத்தில் சிறப்பிடம் உண்டு என்றார்.

“ரசிகர்களின் அன்பு மட்டுமல்லாது, நாட்டின் சீரான செயல்திறனும் கலாசாரமும் என்னைக் கவர்ந்துள்ளன,” என்றார் அவர்.

மேலும், சிங்கப்பூர் உணவுகளில் ‘ஃபிரைட் ரைஸ்’ வகைகள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஓய்வு நேரங்களில் பிரபலமான இடங்களைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

‘யூனிவர்சல் ஸ்டூடியோஸ்’, செந்தோசா உள்ளிட்ட இடங்களுக்கு அண்மையில் சென்று தம் நண்பர்களுடன் மகிழ்ந்த தருணங்களையும் கார்த்திக் நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்