மன்னர் வீரம் வாளடி; இந்த மண்ணின் தொன்மை கீழடி! என்றும் வணங்கும் ஈரடி - அது எங்கள் திருக்குறள் பாரடி! பண்டைத் தமிழன் தோளடி - அதன் வன்மை திண்மை பேரிடி! தங்கத் தமிழ்த்தாய் காலடி - அதைத் தழுவிடும் பேரினம் நானடி!
- கீழடி அகழாய்வில் தமிழனின் தொன்மை நாகரிகம் வெளிப்படுத்தத் தொடங்கியதும், அதில் பிரமித்துப் போய், இப்படியொரு கவிதையை சமூக ஊடகத்தில் வெளியிட்டார் நடிகர் விவேக்.
தமிழனின் தொன்மை வரலாற்றுக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.
‘தூங்கா நகரம்’ எனப்படும் மதுரை நகரம், சங்க காலத்தில் ‘மூதூர்’ என விளிக்கிறது. ‘மதுரை மூதூர்’ என இன்றும் மதுரையைக் குறிப்பிடும் பழக்கம் உள்ளது.
தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில், மதுரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழடி கிராமம். இதுதான் ‘மூதூர்’ எனும் பழைய மதுரையாக இருக்கலாம் என விவாதிக்கப்படுகிறது.
இங்கே நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எத்தகைய நாகரிகத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரங்கள் அணிவகுத்துக் கொண்டே இருக்கின்றன.
இதனால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை எல்லாரும் வியப்பில் விழிவிரிக்கிறார்கள்.
சுற்றுச்சுவர் வீட்டுக்குள் உறைகிணறு, கழிவுநீர் வெளியேற சுடுமண் குழாய்கள், தொழிற்சாலை என அமைந்திருக்கும் அந்தக் கட்டமைப்பு, உலகத்தின் மெச்சத்தக்கப் பேசுபொருளாக அமைந்திருக்கிறது. கீழடியில் எடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருள்களை வைத்து பரந்து விரிந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது தமிழக அரசு.
தொடர்புடைய செய்திகள்
இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவ மாணவியர், வெளிநாட்டவர், அரசியல் மற்றும் தமிழ்ச் சினிமா பிரபலங்கள் வரிசைகட்ட வந்து பார்த்துச் செல்கிறார்கள்.
ஓராண்டுக்கு முன்னர் சிவகுமார், சூர்யா-ஜோதிகா, அவர்களின் இரு பிள்ளைகள் உட்பட குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்த்து வியந்தனர். காட்சியக அதிகாரிகள் சூர்யாவுக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றியும் விளக்கம் கொடுத்தனர்.
தமிழர்களின் வரலாற்றை சூர்யாவின் பிள்ளைகள் மிக ஆர்வமாக கவனித்தனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் அங்கே தற்செயலாக வந்து, அருங்காட்சியகப் பொருள்களை சூர்யா, ஜோதிகாவுக்கு விளக்கினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவி, மூத்த மகளுடன் கீழடி வந்தார். கீழடி நாகரிகத்தை அறிய சிவகார்த்திகேயனின் மகள் விரும்பியதால் நேரம் ஒதுக்கி அவர்களை அழைத்து வந்திருந்தார்.
2,600 ஆண்டுகளுக்கு முன் கீழடி மக்கள் பயன்படுத்திய 13,484 பொருட்ள்கள் ஆறு கட்டடப் பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தது சிவகார்த்திகேயன் குடும்பம்.
அந்த பொருள்கள் குறித்து காட்சியக இயக்குநர் அஜய் விளக்கினார். அதை வியப்புடன் கேட்டு மகிழ்ந்தார் சிவகார்த்தி.
நடிகர் வடிவேலுவின் தாயார் பிறந்த ஊர் கீழடி. இன்றும் அங்கு அவர்களது பூர்வீக வீடு உள்ளது.
“என் தாயார் ஊர் கீழடியில் 2013ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வு நடந்து வருகிறது. ஆனால் காட்சியகத்தைப் பார்வையிடும் சூழல் இப்போதுதான் அமைந்தது,” என வடிவேலு நெகிழ்ந்துபோய் காட்சியக ஊழியர்களிடம் தெரிவித்தார்.
காட்சியக இயக்குநர் ரமேஷ், வடிவேலுவுக்கு காட்சிப் பொருள்களைப் பற்றி விவரித்தார்.
“அகழ் வைப்பகம் பிரமிக்க வைக்கிறது. அரசுக்கு நன்றி. நாம் தமிழர்கள் என்ற உணர்வை ஒருபோதும் மறக்கக்கூடாது.
“இளையர்களும் மாணவர்களும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மூத்த மொழியான தமிழை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது,” எனப் பேசிய வடிவேலு, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிக்கொண்டுவர உழைக்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே, கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல என்றும் அது அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது என்றும் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற ‘கீழடி வைகை நதி நாகரிகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அவர், தமக்கும் கீழடிக்கும் நிறைய பந்தம் இருக்கிறது என்றார்.
“என்னடா கீழடிக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கு... இவனை மேடையில் ஏற்றி பேச சொல்றாங்க என்று நினைக்க வேண்டாம்.
“2015ஆம் ஆண்டு கீழடியில் நடைபெற்ற அகழாய்வை நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கு சென்றபோது தமிழர்களின் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் அறிந்துகொண்டேன்.
“ஓர் அர்ப்பணிப்போடு, தனது உழைப்பை புகுத்தி தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கீழடிக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அகழாய்வுப் பணிக்குப் பொறுமை தேவை. தொல்லியல் துறை வல்லுநர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்கொண்டுவர மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய வரலாற்றை எடுத்துரைக்கிறது.
“கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல. அவை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். இது நம்முடைய வரலாறு. இதை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது. கீழடியின் அகழாய்வு மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு தெரியவந்துள்ளது.
“நமது கலாசாரத்தை உலகறியச் செய்ய வேண்டும். கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து அருங்காட்சியகம் அமைத்தால் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள சிறப்பாக இருக்கும். கீழடியின் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள பள்ளிப்பாடப் புத்தகத்தில் பாடமாகவும் இடம்பெற வேண்டும். இதனைத் திரைப்படமாக எடுக்க முயன்றால் மிகவும் நல்லது,” என்றார் சசிகுமார்.
அவர் கூறியதுபோல், இன்னும் கீழடி குறித்த திரைப்படம் ஏதும் உருவாகவில்லை. ஆனால், திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, கீழடியின் பெருமையை விளக்கும் ஆவணப் படம் ஒன்றை ‘பொருநை’ என்ற தலைப்பில் உருவாக்கி வருகிறார்.
தமிழனின் தொன்மை நாகரிகத்தை பல படிகள் உயர்த்தியிருக்கிறது கீழடியின் தமிழ்க்கொடி.
கீழடி அற்புதங்கள் இன்னும் தீவிரமாக உலக மக்களிடம், உலகத் தமிழர்களிடம் போய்ச் சேர, சினிமா பிரபலங்களின் கீழடி உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.