ஆஸ்கார் போட்டிக்குச் செல்லும் ‘லாபதா லேடீஸ்’ இந்திப்படம்: தேர்வாகப் போராடிய ஆறு தமிழ்ப் படங்கள்

2 mins read
f2e7b006-8713-4b00-b9c4-94b7cbc71c57
‘வாழை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. மகாராஜா, ஜிகர்தண்டா டபள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 29 இந்திய படங்கள் ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு பரிசீலனை செய்யப்பட்டன. - படம்: ஊடகம்

இந்தியா சார்பில் இம்முறை ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்க, இந்திப் படமான ’லாபதா லேடீஸ்’ தேர்வாகி உள்ளது.

பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டதுதான் இந்த தேர்வுக்குக் காரணம் என்கிறார்கள்.

சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில், இந்தியா சார்பில் போட்டியிட இம்முறை பல்வேறு மொழிகளைச் சார்ந்த 29 படங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றுள் ஆறு தமிழ் படங்களும் அடங்கும்.

‘மகாராஜா’, ‘கொட்டுக்காளி’, ‘ஜமா’, ‘ஜிகர்தண்டா 2’, ‘வாழை’, ‘தங்கலான்’ ஆகிய படங்களையும் மீறி ‘லாபதா லேடீஸ்’ தேர்வாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளியான அப்படத்துக்கு, இந்தி ரசிகர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து, ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற அப்படம், அண்மையில் உச்ச நீதிமன்றத்திலும்கூட திரையிடப்பட்டது.

இம்முறை தெலுங்கில் இருந்த மூன்று படங்கள், மலையாளத்தில் இருந்து நான்கு, பன்னிரண்டு இந்தி படங்கள், மூன்று மராட்டிய படங்கள் ஆகிய படங்களும்கூட ஆஸ்கார் விருதுப் போட்டிக்காக பரிசீலிக்கப்பட்டன.

‘ஆஸ்கார்’ விருது, சினிமா உலகில் பெரிய விருதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியப் படம் ஒருமுறையாவது இந்த விருதைப் பெற்று விடாதா என்பதே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்து வருகிறது.

முன்னதாக, ‘ஸ்லம்டாக் மில்லியனெர்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘ஆஸ்கார்’ விருதை வென்று இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்றார், இசையமைப்பாளர் கீரவாணி.

அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற கல்கி 2898 ஏடி, ஆடு ஜீவிதம், ஆட்டம், சாம் பகதூர், ஆர்டிக்கிள் 370, அனிமல், உள்ளொழுக்கு, வீர் சாவர்க்கர் உள்ளிட்ட படங்களும் இம்முறை பரிசீலிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்