இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார்.
அதற்குப் பிறகு, ‘ஹாய் நானா’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த தெலுங்குப் படம்‘ஃபேமிலி ஸ்டார்’ பாக்ஸ் ஆபீசில் வசூலை ஈர்க்கத் தவறியது. இந்நிலையில், தமிழில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாக அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் மிருணாள் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திப் படங்களில் நடித்துக்கொண்டே தெலுங்கிலும் நடித்தேன். தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் மற்ற இரு மொழிகளிலும் மும்முரமாக நடித்ததால்தான் தமிழில் நடிக்கவில்லை.
“மற்றபடி சம்பளப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை என்று சொல்வதெல்லாம் வதந்திதான்,” என்றார் மிருணாள்.
“தமிழில் நடிப்பதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழில் நல்ல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் இருக்கின்றனர். அதனால், கண்டிப்பாகத் தமிழிலும் நடிப்பேன்,” என அவர் கூறினார்.
“இந்தித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். கவர்ச்சியாக நடிப்பது என்பதை அலுப்பு தட்டும் விஷயமாகப் பார்க்கிறேன். அதனால், நடிப்புக்குத் தீனிபோடும் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்.
“மற்றபடி கவர்ச்சிக்கு நான் எதிரி கிடையாது. வலுவான கதாபாத்திரத்திற்குக் கவர்ச்சி தேவைப்பட்டால் அப்படியும் நடிக்கத்தான் வேண்டும்,” என மிருணாள் தாக்குர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நீண்ட காலம் மக்கள் மனங்களில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

