‘முடிந்தவரை முன்னுரிமை; இதுவே எனது கொள்கை’

3 mins read
51ea630c-8e6d-4bbc-87a0-dd99d8c4ca68
ஆஷிகா. - படம்: ஊடகம்

‘மிஸ் யூ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளார் இளம் நாயகி ஆஷிகா ரங்கநாத்.

ஏற்கெனவே அதர்வாவுடன் ‘பட்டத்தரசன்’ படத்தில் நடித்தவர் இவர். மேலும், தெலுங்கில் இரண்டு, கன்னடத்தில் 15 படங்களில் நடித்து முடித்துவிட்டாராம்.

கன்னட இளையர்களின் தற்போதைய கனவுக்கன்னி ஆஷிகாதான். இவர், பிறந்து வளர்ந்தது கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதிதான். தந்தை ரகுநாத் ஒப்பந்ததாரர், தாய் சுதா இல்லத்தரசி.

“எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். அதே சமயம் மொத்த குடும்பத்தையும் சினிமா விரும்பிகள் என்று குறிப்பிடலாம். தொலைக்காட்சியில் தினமும் ஏதாவது ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்.

“வீட்டில் இருக்கும்போது சினிமா குறித்துதான் அதிகம் பேசுவோம். அதே சமயம் திரைத்துறையில் நடிப்போம் என்றோ, அதை தொழிலாக பின்பற்றுவோம் என்றோ கனவில்கூட நான் யோசித்ததில்லை.

“இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலையில் செய்து, கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்றுதான் வாழ்க்கையைத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் கடவுள் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார் போல் இருக்கிறது,” என்று சிரித்தபடிச் சொல்கிறார் ஆஷிகா.

தன்னால் இயன்ற அளவு அனைத்து மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். எனினும், தாய் மொழி என்பதால் கன்னடப் படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கிறாராம். இதுவே தமது கொள்கை என்கிறார்.

“என்னதான் சினிமா பின்னணி இல்லை என்றாலும் என் அக்கா அனுஷா திடீரெனத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அவர்தான் எனக்கு முன்மாதிரி. அவரைப் பின்பற்றித்தான் கல்லூரி கலைவிழாக்கள், நடனப் போட்டிகள் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி, போட்டி என்று நானும் பரபரப்பாக இருந்தேன்.

“இந்நிலையில் ‘மிஸ் ஃபிரெஷ் ஃபேஸ்’ என்ற அழகிப்போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் இரண்டாவது இடம் கிடைத்ததையடுத்து கன்னட பட வாய்ப்பும் தேடி வந்தது.

“உண்மையில் அந்த வாய்ப்பை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லவும் மனமில்லை. அந்த படத்துக்கான ஒப்பனை, நடிப்புத் தேர்வு, படப்பிடிப்பு என எந்த ஒரு கட்டத்திலும் உணர்வுபூர்வமாக என்னை பொருத்திக்கொள்ள முடியவில்லை.

“ஆனால் படம் வெளியாகி திரையரங்கில் பார்த்தபோது என்னையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டேன். இதுதான் எனக்கான இடம் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்ததில் எந்தவிதத் தயக்கமும் ஏற்படவில்லை,” என்கிறார் ஆஷிகா.

’மிஸ் யூ’ படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம், அதில் நடிகர் சித்தார்த் கதாநாயகன் என்பதால்தானாம். சித்தார்த் படம் என்றால் அது தரமாக இருக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார்.

“திரைத்துறையில் தொழில்நுட்ப ரீதியாகவும் நடிப்பு தொடர்பாகவும் அதிக அனுபவம், திறமை வாய்ந்தவர் சித்தார்த். அவர் கதாநாயகன் என்பதும் தயக்கமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்.

“கதை கேட்கும் போதுகூட நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் படப்பிடிப்பின்போது சித்தார்த்திடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

“கேமரா முன்பு எவ்வாறு நிற்க வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்று சிறு சிறு விஷயங்களில் மிகுந்த கவனம் காட்டுவார். அவருடன் இணைந்து நடித்தது மிக நல்ல வாய்ப்பு,” என்று சொல்லும் ஆஷிகா, அடுத்து கார்த்தியுடன் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார்.

அடுத்து சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ‘விஸ்வரம்பரா’, கன்னடத்தில் ’கதவை பாபா’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

தமிழ்த் திரையுலகில் தரமான படைப்புகள் வருவதாகப் பாராட்டுபவர், தமிழ் இயக்குநர்களின் புகழ் பாலிவுட் வரை பரவி உள்ளதாகச் சொல்கிறார்.

“மணிரத்னம், வெற்றிமாறன், ராஜமௌலி ஆகியோரின் படைப்புகளுக்கு நான் தீவிர ரசிகை. அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஆசைப்படுவது மட்டுமே நம் வேலை. மற்றவை கடவுள், காலத்தின் கையில்தான் உள்ளது,” என்கிறார் ஆஷிகா.

குறிப்புச் சொற்கள்